திங்கள், 2 ஜனவரி, 2017

தனிப்பட்ட சிலரின் தேவைக்காக அரசியலமைப்பை உருவாக்கினால் நிறைவேறாது!

தனிப்பட்ட சிலரின் தேவைக்காக அரசியலமைப்பை உருவாக்கினால் நிறைவேறாது!

veerakesari 01/01/2017

அர­சி­லி­ருந்து வில­கு­வது ஆணையை மீறும் செயல்

அடிப்படை வசதிகளை இழந்த தவிக்கும் அளிகம்பை வனக்குறவர்கள்

அடிப்படை வசதிகளை இழந்த தவிக்கும் அளிகம்பை வனக்குறவர்கள்

எஸ். எல். எம். பிக்கீர்
பாடசாலையில் தமிழ்மொழி ஆசிரியர்கள் பாடங்களை தமிழில் நடத்துகின்றனர். மாணவர்களோ தெலுங்கு பேசுபவர்கள். பாடசாலை நேரங்களில் தெலுங்கில் தான் தமக்குள் உரையாடுகின்றனர். 12 வயதான பின்னரும் தமிழ் இவர்களுக்கு அந்நிய மொழியாக இருக்க, ஆசிரியர்களோ தெலுங்கில் 'மாட்டலாட' முடியாதவர்களாக இருக்கிறார்கள்'
வறுமைக்கோட்டையும் தாண்டி பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் தம் நாளாந்த வாழ்வை துயரத்துடன் கழிக்கும் அளிகம்பை மக்கள் அடிப்படை வசிதிகளின்றி அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். மேலும் இருக்க வீடின்றி கஷ்டப்படும் இவர்கள் நாளாந்தம் சந்திக்கும் துயரங்களோ ஏராளம். வறுமை என்பதன் வரைவிலக்கணத்தை ஒவ்வொரு மனிதனும் காணக்கூடிய இடமே அளிகம்பை கிராமம்.
நீண்டு பரந்த நெற்காணிகளுக்கு மத்தியில் வேறெந்த கிராமத்துடனும் தொடர்பின்றி தனியொரு கிராமமாக காணப்படுகிறது அளிகம்பை. மலைகளும், ஆறுகளும் நீர்ச்சுனைகளும் தான் இக்கிராமத்திற்கு எழிலுௗட்டுகின்றன. பட்டப்பகலில் யானைக் கூட்டத்தின் நடமாட்டங்களும் இக்கிராமத்தின் தினசரி நிகழ்ச்சிதான்.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, அளிகம்பையில், நம் நாட்டின் மகுடி கொண்டு பாம்பாட்டும் வனக்குறவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இங்கு பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் ஒரு பண்பாட்டை காணமுடிகிறது. இரு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமின்றி, சிறந்ததொரு வளமுமாகும். எனினும் இம் மக்களுக்கு உரிய மரியாதை நம் சமூகத்தில் இல்லை.
சுமார் 300 குடும்பங்கள் வாழும் அளிகம்பை கிராமத்தில் முழுக்க முழுக்க நாளாந்தக் கூலித் தொழிலையே தங்கள் வருமானமாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்நாட்டு மக்கள் எவருக்குமே பரிச்சயமற்ற மொழியினைப் பேசும் இவர்கள் வாழ்க்கையில் விதியோடு போராடிக்கொண்டிருக்கின்றனர்.​
தமது மனைவியையும், குழந்தைகளையும் நிம்மதியாக தூங்கவைக்க, ஒரு வீடாவது இல்லையே என்பதே இம்மக்களின் ஏகோபித்த அங்கலாய்ப்பாக உள்ளது. மழைக்கும், வெயிலுக்கும் தாக்குப்பிடிக்காத ஓலைக்குடிசைகளில் தங்களின் வாழ்க்கையை உருட்டிக்கொண்டிருப்பதாக 55 வயதான வள்ளியம்மை தெரிவிக்கிறார். அத்துடன் பாம்பு, நண்டு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டத்துக்கு மத்தியிலும் பச்சிளம் சிசுக்களைக் கூட குப்பி விளக்கில் இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். இலங்கைத் திருநாட்டில் அளிகம்பை மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள், நம்ப முடிகிறதா?.
நாய்களுடன் காடுசென்று வேட்டையாடுவதுடன், காட்டு புற்றுகளில் காணப்படும் விஷப்பாம்புகளையும் பிடித்து, நச்சுப் பையை அப்புறப்படுத்தி தங்களின் கைக்கேற்றாற்போல் வசப்படுத்துவதிலும் வல்லமை கொண்டவர்களே அளிகம்பைவாசிகள். பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் அளிகம்பை வாசிகளைக் கண்டால் விஷப்பாம்பும் நடுங்கி ஓடி ஒளியும் அளவிற்கு அவர்களின் திறமை உள்ளது. எனினும் காலச் சக்கரம் சுழன்று நாகரீக வளர்ச்சி உயரும் இக்காலத்தில் அளிகம்பை மூத்தோர் காடுகளுக்குச் வெல்வது தற்போது குறைந்திருக்கிறது. பழையன கழிந்து புதியன புகுந்து வருவதையே அளிகம்பையில் காண முடிகிறது. இதனால் பல வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட பாம்புகளே இன்றும் உள்ளன. பாம்பாட்டுவதும் அருகி வருவதை காணமுடிகிறது.
எனினும் ஆண்கள் மகுடி கொண்டு பாம்பாட்டுவதும் பெண்கள் பிரதேச ஆறுகளிலும் குளங்களிலும் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும் இன்றைக்கும் இவர்களின் தொழில்களாக உள்ளன.
தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவர்கள் ஏனைய சமூகத்தாருடன் கொச்சைத் தமிழிலும் கொச்சை சிங்களத்திலும் பேசுகின்றனர்.
மேலும் அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ளமையினாலேயே தங்களின் கிராமத்தில் அபிவிருத்தியைக் காணமுடியவில்லை என்று இவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் காலத்தில் மட்டுமே தாம் அரசியல் வாதிகளுக்கு தேவைப்படுவதாகவும் ஏனைய காலங்களில் தாம் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அளிகம்பை மக்கள் துயரத்துடன் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் உழைக்கும் கூலி வருமானத்தில் முடியுமானவரை மீதப்படுத்தி விரல்விட்டெண்ணக்கூடிய சிலரால் சிறுவீடுகளை அமைக்க முடிந்திருக்கிறது. கணிசமானோர் குடிசை வீடுகளிலேயே தங்கள் காலத்தை கழிக்கும் நிலை உள்ளதையும் காணமுடிகிறது. அரசியல்வாதிகள் அளிகம்பையும் நம்நாட்டின் ஒரு கிராமம் எனக்கருதுவதில்லை எனவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அரசின் எந்த நிருவாகத்திலும் பங்கில்லாத இவர்களில் ஒருவர் மாத்திரமே படித்து அரச தொழில் புரிகிறார். ஜனாதிபதி மகிந்தவின் அரசு காலத்தில் மின்சாரம் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்டாலும் கணிசமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளுக்குக் கூட மின் இணைப்பைப் பெறவில்லை. காரணம் மோசமான பொருளாதார நிலை.
இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்குமொழியின் ஒரு எழுத்தைக்கூட இவர்களால் எழுதவோ படிக்கவோ முடியாது. வீட்டுச் சூழலிலும், கிராம சூழலிலும் தெலுங்குமொழியில் பேசுவதனால் பாடசாலையில் தமிழ் மொழியில் பாடங்களை கற்கும்போது விளங்கிக்கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் கல்வியில் பின்தங்கி நிற்கவேண்டிய நிலை.
இம்மக்களுக்கென 09ம் ஆண்டுவரை உள்ள ஒரேயொரு பாடசாலையில் பணியாற்றும் தமிழ் மொழி ஆசிரியர்கள் தெலுங்கு பேசும் மாணவர்களுக்கு கற்பிப்பதால் உரிய முறையில் கற்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். இப்பாடசாலை மாணர்வர்கள் 12 வயதான பின்னரும் தமிழ் மொழியில் பேசமுடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் தமிழ் மொழியில் போதிக்கப்படும் பாடங்களை மாணவர்கள் எவ்வாறு விளங்கிக் கொள்வார்கள்?
தமிழ் மொழியில் கல்வி கற்கும் அதேசமயம் இம்மாணவர்கள் பாடசாலை நேரத்தில் தெலுங்கு மொழியிலேயே பேசுகிறார்கள். இதனால் கற்கும் மொழி அந்நியப்பட்டு விடுகிறது. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் பேச்சு விளங்காமல் திக்கு முக்காடுகின்றனர். இதுவே ஆசியர்களினதும், மாணவர்களினதும் தலைவிதியாகிவிட்டது. பாடசாலையில் மட்டும்தான் ஆசிரியர்களுடன் ஓரளவுக்கு தமிழில் பேசும் மாணவர்கள், பின்னர் வீட்டுச் சூழலுக்குச் சென்றதும் தங்களது தெலுங்கு மொழியிலேயே பேச ஆரம்பிக்கின்றனர். தமிழ் மொழியே எட்டாக்கனியாக உள்ள நிலையில் இலவசப் பாடநூல்கள் எதற்கு? எனவும் இங்குள்ள ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இம்மக்களுக்கென வைத்திய சேவைகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத நிலையில் இம் மக்களின் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வருடம் போல காலத்தைக் கடத்துவதும் நாளாந்த செயற்பாடாகிவிட்டதாக 55 வயதான வள்ளியம்மை தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றார்.
கடந்த 1990 இல் ஏற்பட்ட இரண்டாம் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்ற இவர்கள் மீண்டும் அளிகம்பையில் குடியமர்த்தப்பட்ட பின் வீடு உட்பட ஏனைய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுமென அரச அதிகாரிகள் வாக்குறுதி வழங்கினார்களாம். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பலதரப்பட்டவர்களையும் சந்தித்த பொழுது ஏன்தான் பிறந்தோம்? இந்த இனத்திற்கு விடிவே இல்லையா? என்ற கேள்விக்கனைகளை எம்மிடம் தொடுத்துக்கொண்டிருந்தனர். இந்தளவுக்கு அளிகம்பை மக்கள் மனமுடைந்து காணப்படுகின்றனர்.
வீட்டு வசதி உட்பட தமது அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்படுமென நம்பியே நல்லாட்சி அரசிற்கு வாக்களித்ததாக கூறும் இவர்கள் எங்களது பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படுவதற்கு ஜனாதிபதியாவது தலையிட்டு விசேட கவனம் எடுக்க வேண்டுமென எதிர்ப்பார்த்துள்ளனர். 

பெஞ்சமின் பிராங்க்ளின்

பெஞ்சமின் பிராங்க்ளின்

வீ.மயூரன்
ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் 1706 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். 17 பிள்ளைகளில் பத்தாவதாக பிறந்த இவரது குடும்பம் பெரியது என்பதால் இவரது தந்தை சோப்பு, மெழுகுவர்த்திகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவந்தார். குடும்ப ஏழ்மையின் காரணமாக பிராங்கிளினை பள்ளிக்கு அனுப்ப இயலவில்லை. ஓராண்டுக்கும் குறைவாகவே பள்ளி சென்ற பிராங்க்ளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அந்த பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாக தனது சகோதரர் ஜேம்ஸின்
அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்து மகிழ்வார். நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா சென்றார். அங்கு அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. பிராங்கிளினுக்கு இயற்கையிலேயே நூல்கள் வாசிப்பதில் ஈடுபாடு இருந்தது. அந்த பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் வீரியத்தை அவருக்கு தந்தது. வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாக தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்து மகிழ்வார். நிறைய வாசித்ததால் எழுதும் திறமையும் அவருக்கு இருந்தது. பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா சென்றார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க இதழ்களில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது.
மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்பட்டார்.
Poor Richard's Almanack என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவர். உலகின் மிகப்பிரபலமான வரலாற்று நூல்களுள் ஒன்று அவருடையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடி உட்பட பல கருவிகளையும் கண்டுபிடித்தார்.
1720 ஆம் ஆண்டு 'பென்சில்வேனியா கெசட்' {Pennsylvania Gazette} என்ற இதழை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பிராங்க்ளின். நான்கு ஆண்டுகள் கழித்து 'புவர் ரிச்சர்ட்ஸ் அல்மனாக்' என்ற இதழைத் தொடங்கினார். மிகவும் மாறுபட்ட பாணியில் வெளிவந்த அந்த இதழ்தான் அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் சேர்த்தது.
இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்த அவர், அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிகையின் மூலமும் நாற்பது வயதுக்குள் பெரும் செல்வந்தரானார்.
பிராங்க்ளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார்.

ஐ.நா. புதிய செயலாளர் நாயகமாக குட்ரஸ் பதவியேற்பு

ஐ.நா. புதிய செயலாளர் நாயகமாக குட்ரஸ் பதவியேற்பு


ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அன்டோனியோ குட்டரஸ் நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.
1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகக் கடமையாற்றிய இவர், 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளராகவும் கடமையாற்றியிருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி புதிய செயலாளர் நாயகமாக இவர் தெரிவுசெய்யப்பட்டதுடன் நேற்றைய தினம் இவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
"மனித குலத்தில் நம்பிக்கை, - கண்ணியம், முன்னேற்றம் - செழிப்பு என்பன சமாதானத்தில் தங்கியுள்ளது. எனவே 2017ஆம் ஆண்டை சமாதானத்துக்கான ஆண்டாக மாற்றுவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்" . ஐ.நா பொதுச்செயலாளர் என்ற ரீதியில் இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் அகப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு ஐ.நா செயலாளர் நாயகமாக எனது முதலாவது நாளில், எவ்வாறு உதவப்போகின்றேன் என்ற பாரியதொரு கேள்வி எனது இதயத்தில் எழுகிறது. யுத்தத்தில் யாரும் வெற்றியடைவதில்லை. சகலரும் இழப்புக்களை சந்திக்கின்றனர். சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை அழிப்பதற்காக ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுகின்றன. மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில் சகலரும் ஒன்றிணைந்து சமாதானத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்" என அழைப்பு விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், புதிய செயலாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கியூலே, நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பாதையை ஏற்படுத்த வேண்டிய நிலையில் சமாதானம் என்பது இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் புதிய வருடத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கை மக்களின் பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுக்ள சபை தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமாகப் பதவியேற்றிருக்கும் அன்டோனியோ குட்டரஸ், 17 ஆண்டுகள் போர்த்துகேய பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவராவார். இவர் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற கவுன்சிலில் பாராளுமன்ற அசம்பிளி உறுப்பினராக 1981 முதல் 1983 வரை இருந்த இவர், சமூக ஜனநாயக அரசியல் கட்சிகளின் பன்னாட்டு அமைப்பான 'சர்வதேச சோசலிச' அமைப்பின் உப தலைவராக 1992ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை கடமையாற்றியிருந்தார். ஆபிரிக்க குழுவின் இணைத் தலைவராகவும் இவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1949ஆம் ஆண்டு லிஸ்பெனில் பிறந்த குட்டரஸ் பொறியியல் பட்டதாரியாவார்.
இவர் போர்த்துக்கல், ஆங்கிலம், பிரஞ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவராவார். 

புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் முயற்சி இலங்கையில் தோல்வி

புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் முயற்சி இலங்கையில் தோல்வி

சென்னையிலிருந்து வெளிவரும் ‘தினமணி’ தமிழ் நாளிதழ் மாறுமா, மாறாதா? எனும் தலைப்பில் நேற்று வெளியிட்ட ஆசிரியர் தலைப்பில் இலங்கையில் அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளது.
அதனை முழுமையாக தருகிறோம்.
இலங்கையில் புதிய அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி மீண்டும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இனப் பிரச்சினைக்கு முடிவு கட்டவும், மக்களாட்சி முறையை வலுப்படுத்தவும் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடம் புரளச் செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் எல்லா முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இலங்கையில் அரசியல் சட்டத்தை மாற்றுவதும், தேர்தல் முறையை மாற்றுவதும் புதிதொன்றுமல்ல. இந்தியா சுதந்திர
மடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, 1948 பிப்ரவரி 4-ஆம் திகதி தான் இலங்கை சுதந்திரமடைந்தது. அப்போதும்கூட தொடர்ந்து பிரிட்டிஷ் டொமினியனாகத் தொடர்ந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட அரசியல் சட்டம் 1972 வரை தொடர்ந்தது.
1970-இல் உலகின் முதல் பெண் பிரதமராகப் பதவி ஏற்ற சிறிமாவோ பண்டாரநாயகாவின் ஐக்கிய முன்னணி அரசு, அன்றைய நாடாளுமன்றத்தையே அரசியல் சாசன சபையாக மாற்றிப் புதிய அரசியல் சட்டத்தை 1972-இல் அறிமுகப்படுத்தியது.
ஆறு ஆண்டுகால வரம்புள்ள தேசிய நாடாளுமன்றம், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றதாக அமைக்கப்பட்டன. இந்தியாவில் இருப்பதுபோல, குடியரசுத் தலைவர் ஒருவர் பிரதமரால் நியமிக்கப்பட்டு நான்காண்டு பதவி வகிப்பார்.
1973-இல் ஆறில் ஐந்து பங்கு இடங்களை வென்று பதவிக்கு வந்த ஜே. ஆர.ஜயவர்த்தன, சிறிமாவோவின் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்படுத்தி தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார். இப்போது அந்த ஜனாதிபதி முறையை தற்போதைய ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான அரசு மாற்றி, பழையபடி பாராளுமன்ற ஆட்சி முறைக்கு இலங்கை திரும்பி இருக்கிறது.
பொது விவாதம் நடத்தப்பட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைந்த குழு தேர்தல் முறை மாற்றம் குறித்துத் தனது அறிக்கையை அளித்திருக்கிறது. ஆனாலும்கூட, சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கையில் தொடர்ந்து விவாதப்பொருளாக இருக்கும் பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
இப்போது இலங்கையில் 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் இருக்கின்றன. இந்த மாகாணங்கள் இந்தியாவில் இருப்பதுபோல, தன்னிச்சையாகச் செயல்படுவதா வேண்டாமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. இப்போது எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம்தான் குவிந்து கிடக்கின்றன. அதே நிலைதான் தொடர வேண்டும் என்பது மகிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்களின் கருத்து. அதிக அதிகாரங்கள் தரப்பட்டால் மாகாணங்களில் பிரிவினை கோரிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அவர்கள்.
அடுத்தபடியாக, தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாக இயங்க விடுவதா இல்லை ஒரே மாகாணமாக இருக்க விடுவதா என்கிற பிரச்சினை எழுந்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். இவர்கள் தனியாக இயங்குவதையே விரும்புகிறார்கள். அப்படி அவர்கள் தனியாக இயங்குவது தமிழர்களின் ஒற்றுமைக்கு நல்லதல்ல என்பது ஒருங்கிணைந்த மாகாணமாக இருக்க வேண்டும் என்பவர்களின் கருத்து.
இந்தியாவைப்போல கூட்டாட்சி முறை ஏற்படுத்தப்பட்டு, தமிழ் பேசும் பகுதிகள் தமிழ் மாகாணங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோருபவர்கள், இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். கூட்டாட்சித் தத்துவத்தையும், மத்திய அரசின் பங்கையும் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, மொழிவாரியாகவோ, இன வாரியாகவோ மாகாணங்கள் அமையக்கூடாது என்பது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷவின் வாதம். பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து வழிகாட்டுதல் குழு எதுவுமே கருத்துத் தெரிவிக்கவில்லை.
தமிழ்பேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் இலங்கை மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பான்மையினரான சிங்களத்தவர்கள், இலங்கையை ஒரு பௌத்த நாடாக அரசியல் சட்ட அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இலங்கையை பௌத்த நாடாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சுதந்திரம் அடைந்தது முதலே எழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையில் பௌத்த பிக்குக்களின் ஆதிக்கம் கணிசமானது. 1956-இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டாரநாயக்கா சிங்களம் மட்டுமே அதிகாரபூர்வ மொழி என்றும், பௌத்த மதம்தான் அதிகாரபூர்வ மதம் என்றும் அறிவிக்க முற்பட்டார். அதை அவர் நிறைவேற்றத் தயங்குகிறார் என்கிற ஆத்திரத்தில் ஒரு பௌத்த பிக்குவால் அவர் கொல்லப்பட்டார் என்றால் எந்த அளவுக்கு மத வெறி அங்கே நிலவுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி அரசியல் சாசனத்தைத் திருத்திப் புதிய அரசிலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்த முடியாமல் திணறுகிறது ஜனாதிபதிசிறிசேன தலைமையிலான அரசு. கூட்டணியிலேயே இந்தப் பிரச்சினை பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. மாற்றம் ஏற்படாவிட்டால் வெளியேறுவோம் என்று ஒரு பகுதியினரும், மாற்றம் ஏற்படக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
என்ன செய்வது? என்று தெரியாத குழப்பத்தில் ஜனாதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும். இவர்களது குழப்பத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ. இதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை!

புதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளக்கும் ஆவணமல்ல

புதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளக்கும் ஆவணமல்ல


உத்தேச புதிய அரசியலமைப்பில் நாட்டுக்குத் தீமையை ஏற்படுத்தும் எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது நாட்டைத் துண்டாடும் ஆவணம் இல்லையென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கண்டி தலதாமாளிகைக்கு நேற்றுமுன்தினம்(31) சென்றிருந்த ஜனாதிபதி, மல்வத்துபீட மற்றும் அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றபோதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.
அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு சிலர் எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், நாட்டின் ஒற்றுமைக்கோ அல்லது பௌத்த மதத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் அதில் உள்ளடக்கப்படமாட்டாது. அவ்வாறான நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறினார்.
புத்தாண்டை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தபோதே இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்கு தான் ஒருபோதும் தயாரில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது தனிப்பட்ட ஒரு சிலரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக அன்றி மக்கள் பிரதிநிதிகள், கல்வி மான்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆவணமாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.
இருந்தபோதும், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கை தொடர்பில் பலர் அறிந்திருக்கவில்லையென அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். அவ்வாறானவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமென ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார்.
இந்த விஜயத்தைத் தொடர்ந்து மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி, நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ள நிகழ்ச்சித்திட்டங்களையும் விளக்கிக் கூறியிருந்தார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சக்தி பிரச்சினை தொடர்பாக மகாநாயக்க தேரர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கான தீர்வுகளைக் காண்பதற்காக ஏனைய உலக நாடுகள் போன்ற இலங்கையும் முன்னோடியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டுக்குத் தேவையான பல்வேறு சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதியின் தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த போதும் அது தொடர்பாக மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்தப்படாத காரணத்தினால் பிரச்சினைகள் எழுவதாகக் குறிப்பிட்ட மகாநாயக்க தேரர், அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நாட்டை போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களை வரவேற்றிருந்த மகாநாயக்க தேரர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஜனாதிபதி செய்த அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார். 

அரசியல் தீர்வும் மாய மான்கள்தான்! 2017 ஆம் ஆண்டில் தெரியவரும் - வி.உருத்திரகுமாரன்


அரசியல் தீர்வும் மாய மான்கள்தான்! 2017 ஆம் ஆண்டில் தெரியவரும் - வி.உருத்திரகுமாரன்




சிறிலங்கா அரசின் அரசியல் தீர்வு என்பது மாயைதான் என்ற உண்மை 2017 ஆம் ஆண்டில் தெரிய வரும். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமாக நிலையினை உருவாக்கித் தரக் கூடியது என்ற நம்பிக்கையுடன் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
மலர்ந்திருக்கும் 2017 இல் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் மற்றும் சாதகங்கள் என்பன பற்றி புத்தாண்டினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மன நிறைவடைகிறேன்.
மலரும் 2017 ஆம் ஆண்டினை ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சாதகமான வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்போமாக.
கடந்து சென்ற 2016 ஆம் ஆண்டு அனைத்துலக ஒழுங்கில் ஏற்படக் கூடிய சில மாற்றங்களைக் கோடு காட்டிச் சென்றுள்ளது.
மேற்குலக நாடுகளில் மக்கள் உணர்வுகளைத் தட்டிவிடும் புதியதொரு தேசியவாதம் வளர்ச்சி அடைந்து வருவதனைப் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்குச் சாதகமாக வாக்களித்தமையும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
உலக விவகாரங்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மட்டும், தான் நினைத்தவாறு இனியும் கையாள முடியாது என்பதை சிரியப் போர் சுட்டிக் காட்டியுள்ளது.
உலக அரசியல் ஒழுங்கு ஒற்றை மைய அரசியல் ஒழுங்கிலிருந்து விலகி பல்மைய அரசியல் ஒழுங்கை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதும் புலப்படுகிறது.
இந்தப் பல்மைய உலக ஒழுங்கு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒற்றை மைய உலக ஒழுங்கை விடச் சாதகமான வாய்ப்புக்களைத் தரக் கூடியதென நாம் கொள்ளலாம். இது குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.
2017 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சவால் மிக்க ஆண்டாக அமையும் என்றே நாம் கருதுகிறோம்.
இந்த ஆண்டில் பல சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கப் போகிறது. இச்சூழ்ச்சியினை நாம் தாயகம், தமிழகம் மற்றும் உலகம் அனைத்தும் வாழும் தமிழ் மக்களுடனும் நீதிக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலகச் சமூகத்துடனும் இணைந்து முறியடித்தாக வேண்டும்.
சிறிலங்கா அதிபர் சிரிசேன புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவாகியுள்ள டொனால்ட் டிறம்ப் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சிறிலங்கா அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றச்சாட்டுகளைக் கைவிடுமாறு கோரியிருக்கிறார்.
இது நல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதைய சிறிலங்கா அரசானது நீதி குறித்தும் அறம் குறித்தும் சிறிதேனும் அக்கறையற்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசாகவே இருக்கிறது என்பதனைத் தெளிவாக்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் சிறிலங்கா எடுத்துக் கொண்ட பொறுப்பு காலத்தை இழுத்தடித்து நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் உள்நோக்கம் கொண்டது என்பதனை சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
இது நீதி கோரும் முயற்சிக்கு சிறிலங்கா அரசு விடுக்கும் சூழ்ச்சியுடன் கூடிய சவாலாகும். இதனை முறியடிக்க வேண்டியது 2017 இல் நம் முன்னால் உள்ள முக்கிய கடமையாகும்.
2017 இல் நாம் எதிர் கொள்ளும் அடுத்த சவால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதனையும் பூர்த்தி செய்யாத அரசியல் ஏற்பாடுகளைக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெறும் சிங்களத்தின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்க வேண்டியதாகும்.
சிறிலங்கா தனது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கவுள்ள திட்டத்தின்படி தமிழ் மக்கள் ஒரு தேசம் என்றோ தேசிய இனம் என்றோ இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதோ அல்லது தமிழ் மக்கள் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதோ அங்கீகரிக்கப்படவில்லை. இதன்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை.
மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்கள் கவர்ச்சியான வார்த்தை ஜாலங்களுடன் மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப்படவுள்ளன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சிறிதேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப் போகிறது எனத் தெரிகிறது.
புதிய அரசிலமைப்பைத் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க சிங்களம் முயல்கிறது.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படக் கூடிய புதிய அரசியலமைப்பின் மீதான வாக்கெடுப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவாக வாக்குகளைப் பெறும் முயற்சி சூழ்ச்சித்தனத்துடன் மேற்கொள்ளப்படக் கூடியதொன்றாகும்.
இவ்வாக்களிப்பில் தமிழர் தேசத்துக்குக் இருக்கக்கூடிய சவால் சிங்கள அரசின் சூழ்ச்சியினை மறைத்து புதிய அரசியலமைப்பினை தமிழர்களுக்கு நன்மை தரக் கூடிய அரசியலமைப்பு என எமது தமிழர் தலைவர் சிலரும் கூறக் கூடிய ஆபத்து இருப்பதாகும்.
மகிந்த ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும் இப்புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதாகவும் நாம் அதனை முறியடிக்க வேண்டுமெனவும் இத்தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறக் கூடும்.
இப்புதிய அரசியலமைப்புத் திட்டத்துக்கு தமிழ் மக்களின் சம்மதம் உண்டு எனக் காட்டும் சூழ்ச்சி நோக்கத்தைச் சிங்களம் கொண்டுள்ளது. இதற்குத் தமிழ்த் தலைவர்கள் துணை போகாது தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் புதிய ஆண்டின் போது தமிழ் மக்கள் கையிலுள்ளது.
தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மிகுந்த சவாலுக்குரியதாகி விடும்.
வடக்கு - கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்து விடும். தமிழர் தேசம் சிங்களத்தின் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்குள் சிக்கி மெல்ல மெல்ல அடையாளம் இழந்து அழிந்து போகும் நிலை காலப் போக்கில் உருவாகும் ஆபத்து ஏற்படும்.
தமிழ் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்புடன் இருந்து சிங்களத்தின் சூழ்ச்சியினை முறியடிக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை முன்வைத்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிங்களத்தின் சூழ்ச்சியை முறியடிக்கும் தீர்க்கமான பாத்திரம் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
2017 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கக் கூடிய சூழ்ச்சிகரமான திட்டங்களை முறியடிப்பதற்கான செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரமாக ஈடுபடவுள்ளது.
அனைத்துலக சமூகத்தின் முன் நீதி கோரும் நடைமுறையைப் பலப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கோள்ளக் கூடிய சூழ்ச்சியை அம்பலப்படுத்துவதற்கும் உரிய செயற்பாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கவனம் செலுத்தும்.
எமது இந்த முயற்சிக்கு உலகளாவிய அளவில் தமிழ் மக்களின் ஆதரவை நாம் கோரி நிற்கிறோம்.
தம்மை நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் தற்போதைய சிறிலங்கா அரசுக்கும் முந்திய ராஜபக்ச அரசுக்கும் இடையே தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த விடயத்தில் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் இல்லை.
அவர்கள் நேரடியாகவே உரிமைகள் தர முடியாது என்பார்கள். இவர்கள் இனவாதிகளின் எதிர்ப்பினைக் காரணம் காட்டி தர முடியாது என்பார்கள். ஆனால் இவர்களின் அரசாங்கமோ இனவாதிகளால் நிரம்பிக் கிடக்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லாட்சி என்பதும் சிறிலங்கா அரசு தரும் என எதிர்பார்க்கும் அரசியல்தீர்வு என்பதும் மாயமான்கள்தான் என்ற உண்மை 2017 ஆம் ஆண்டில் அம்மணமாகும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தரக் கூடியது என்ற நம்பிக்கையுடன் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வோமாக எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.