ஞாயிறு, 27 அக்டோபர், 2019

கோட்டா காலத்தில் ஆவணங்கள், கோவைகள் எரிக்கப்பட்டன

கோட்டா காலத்தில் ஆவணங்கள், கோவைகள் எரிக்கப்பட்டன

இவர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளர் பதவிக்காலத்து ஆவணங்களும், கோவைகளும் காணாமல் போயுள்ளன. அல்லது எரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான ஒருவர் தான் நாட்டின் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது என்று ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க நேற்று முன்தினம் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
2005 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ தனது சொத்து விபரங்களைப் பிரகடனப்படுத்த தவறிவிட்டதாகவும், இன்றுவரையில் அந்த விபரங்களை வெளிப்படுத்தவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் என்ற அடிப்படையில் அவர் மீதான பொறுப்பை நிறைவேற்றத்தவறியுள்ளதாகவும் ஆசூ மரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு செயலாளர் பதவிக்கே பொருத்தமில்லாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானால் அதன் விளைவுகள் எவ்வாறு அமையும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அவர் ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கும் கொள்கைத்திட்டம் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். இந்த அழைப்புக்கு இன்னமும் அவரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. நாம் மீண்டுமொரு தடவை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எந்தவொரு ஊடகத்தின் மூலமோ, அல்லது அனைத்து ஊடகங்களையும் ஒரே இடத்தில் கூட்டியோ இந்த பகிரங்க விவாதத்தை நடத்த சஜித் பிரேமதாச தயாராகவே உள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனித்துநின்று பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பார் என்பதை அறிந்துகொள்ளவே விரும்புகிறோம்.
நாட்டின் தலைவராக பதவிக்கு வரக்கூடிய ஒருவர் பிரச்சினைகளுக்கு தனித்து நின்று முகம்கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அண்ணனிடம் கேட்டு பதில் சொல்கிறேன் எனக் கூறி தப்பிக்க முடியாது. இன்று கோட்டாபய செய்வது அண்ணனின் தலையில் பிரச்சினைகளை போட்டுத் தப்பும் ஒரு கலையைப் பின்பற்றுகிறார். இது தலைமைக்கு பொருத்தமானதல்ல. இவ்வாறான ஒருவரிடம் நாட்டின் பொறுப்பை எப்படி ஒப்படைக்க முடியும். தேர்தலில் மக்கள் நன்றாகச் சிந்தித்து முடிவெடுத்து தமது வாக்குரிமையைப் பயன்படுத்த முன்வரவேண்டும். கண்களை மூடிக்கொண்டு படுகுழியில் வீழ்ந்து விடக்கூடாது.
எம். ஏ. எம். நிலாம்