வியாழன், 13 ஏப்ரல், 2017

ஏவிளம்பி 2017/2018


 ஏவிளம்பி 2017/2018
நாளை 14 04 2017 வெள்ளிக்கிழமை காலை 2 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.
இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும்
'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம்.
நாளை முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது
சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.
ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும்
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது.
31 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும்
ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது.
நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள்,
இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.
விசாக நக்ஷத்ரமும் அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது
விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு
அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர்.
குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. நாளை கிழமையும் வெள்ளிக்கிழமை
ஆகையால் இந்த மாதிரி குரு சனி வெள்ளி (சுக்ரன் ) சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'

ஏவிளம்பி வ்ருஷப் பலன் 2017/2018


ஏவிளம்பி  வ்ருஷப்  பலன் 2017/2018 (திருக்  கணிதம் )

ஏவிளம்பி மாரியற்ப  மெங்கும் விலைகுறைவாம் 
பூவில் விளைவரிதாம்  போர்மிகுதி -சாவதிகம் 
ஆகுமே வேந்த ரநியாய மேபுரிவார் 
வேகுமே மேதினிதீ மேல்.
 
துர்முகி வருஷம் பங்குனி மாதம் 31ந் திகதி {14-04-2017}வியாழக்கிழமை பின்னிரவு உதயாதி நாழிகை 50-04இல் {மணி 02.04இல்} ஏவிளம்பி  என்னும்
பெயருடைய புத்தாண்டு உதயமாகின்றது.அன்று நட்சத்திரம் விசாகம் 3ம் பாதம்,திதி அபரபட்ஷ திரிதியை.இது 60வருட சுற்று வட்டத்தில் 31வது வருஷமாகும். பங்குனி 31ந் திகதி இரவு நாழிகை 40-04 (மணி இரவு 10-04)
முதல் மறு  நாள் காலை நாழிகை 00-04 (மணி காலை 06-04) வரை மேட  சங்கிரமண  புண்ணிய காலமாகும். புது வருடம்  பிறக்கும் போது உதய
லக்கினம் "மகரம் " ஆக அமைகிறது.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மருத்து நீர் தேய்த்து
தலையில் கொன்றையிலையும், காலில் புங்கமிலையும் வைத்து ஸ்நானம்
செய்து மஞ்சள் நிறப்பட்டாயினும் , அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளைப் புது வஸ்த்திரமாயினும் தரித்து,விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து  இயன்ற தானாதிகள் வழங்கி குரு ,பெற்றோர் முதலியோரை வணங்கி, ஆசி பெற்று விருந்தினர்களை உபசரித்து சுற்றத்தாருடன் இணைந்து பால்,தயிர்,தேன் ,வேப்பம் பூ,முதலியவற்றுடன் அறுசுவைபி பதார்த்தங்களையும் போஜனம் செய்து, தாம்பூலம் அருந்தி சுகந்த சந்தண புஸ்பாதிகளை அணிந்து புது வருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச்  செய்து  புதுப் பஞ்சாங்க பலன்களை அறிந்து சயானிப்பீர்களாக.



நவநாயகர் பலன் 

இராஜா  செவ்வாய் பலன் .

இவ்வருடம் செவ்வாய் இராஜாவாக ஆட்சி செய்வதால் ஆட்ச்சியாளர்கள் தனது பலத்தை பிரயோகிக்க எத்தனிப்பர். உலக நாடுகளில் ஆயுதபலம் அதிகரிக்கும். அணு உற்பத்தியில் கவனம் கூடுதலாக இருக்கும். நாட்டின்  உஷ்ணம்  மிகுந்திருக்கும். விபத்துக்கள்  ஏற்படுதலைத் தவிர்க்க முடியாது.
விவசாயத்துறை விருத்தி பெறும்.

மந்திரி வியாழன் பலன்.

மரங்கள் , செடிகள்  கொடிகள் செழித்து வளரும் மக்களுக்கு ஓரளவு நீதி நியாயம் கிடைக்கும் மதகுருமார் கௌரவிக்கப்படுவார்கள் பசுக்கள் விருத்தியாகும்.

சேனாதிபதி புதன் பலன்.
கல்வித்துறை மேம்பாடடையும் பல்கலைக் கழகங்கள் கல்விச் சாலைகள்
சிறந்து விளங்கும்.

ஸஸ்யாதிபதி சூரியன் பலன்.


நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்,நிலவளங்கள் குன்றும்,பயிர்கள் நோயினால் பீடிக்கப்படும் சிறு தான்ய விருத்தி உண்டாகும் பூவகை பலிதமாகும்.


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் 
உரித்தாகட்டும்.
ஏவிளம்பிப் பலன் விபரமாக  தொடரும்.........     

அன்புடன்,
கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா 


கடவுளின் தரிசனம்

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்..மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்க்கு சம்மதித்தார்.."அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார்.
மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்..அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்.. சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்..செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தனர்..மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான்..அதற்க்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்.
மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர் மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.. விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான்..மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்..உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.
இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்.. மந்திரியும்.. தளபதியும்..மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால்வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்கவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.
கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன்.. அதற்க்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்..அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து...என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.
காலை வணக்கம்

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?


விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்
….. ….           …..             …     …..
 சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்,
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்!
 …      …       …    ….
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
– மாக்கவி பாரதியார்


“தவிப்பு..”

▶மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..
“தவிப்பு..”
வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம்
தாய் வீடு போகிறாய்...
பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...
தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...
“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....
ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை.