ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை குறித்து நான் பேசத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு முக்கிய விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய பலர், இலங்கையில் நடந்த போரில் 40,000 பேர் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்கள். அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொளகிறேன். அந்தப் போரில் 1,46,679 பேர் கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போயோ உள்ளனர் என்பது உறுதியான, சிறிலங்க அரசால் கூட மறுக்க முடியாத உண்மையாகும். இதனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்களும், இணக்கபாபடு ஆணையமும் என்ற விசாரணை ஆணையம் முன்பு, மன்னார் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளார்கள். அதிகாரப்பூர்வமான இந்த எண்ணிக்கையை அனைவரும் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறன்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போர் முடிந்த பிறகு அங்கு சென்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அந்தப்போரில் நடந்த அத்துமீறல்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆனால் ராஜபக்ச ஒப்புக்கொண்டதை செய்யவில்லை.
அதன் பிறகு 2010ஆம் ஆண்டு ஜனவரியில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு விசாரணையை நடத்தி, இலங்கை அரசும், அதன் அதிபர் ராஜபக்சவும் போர்க் குற்றவாளிகளே என்று அறிவித்தது. இலங்கை அரசு மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்று தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு அளவில் எழுந்த அழுத்தத்தை அடுத்து ஒரு நிபுணர் குழுவை பான் கி மூன் அமைத்தார்.
போர் நடந்து முடிந்து 13 மாதங்கள் இந்தக் குழுவை நியமிப்பதற்கு காலதாமதப்படுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி ஜேவிபி எம்.பி.யாக இருந்த சிங்களத் தலைவர் ஒருவர், தற்போது அமைச்சராக இருக்கிறார். அவர் ஐ.நா. சபை அலுவலகத்திற்குப் போகிறார். இரண்டு நாட்கள் உள்ளே யாரும் போக முடியாது. வெளியே யாரும் வர முடியாத வகையில் கொழும்பு ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டார். அதை பார்த்து கூட பான் கீ மூனோ, வேறு எந்த நாடோ கண்டிக்கவில்லை.
இந்தியாவில் இதுபோன்ற நடந்திருந்தால், ஐ.நா.வில் இருந்து ஒரு ராணுவத்தையே அனுப்பியிருப்பார்கள். ஆனால் இரண்டு நாள் உள்ளே இருக்கும் அலுவலர்களை வெளியில் அனுமதிக்கவில்லை. அடைத்து வைத்திருந்தார்கள். அரசு உதவியோடு ஒரு அமைச்சர் செய்த குற்றத்திற்கு ராஜபக்சவினுடைய ஆசிர்வாதம் இருந்தது. ஆனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது நடந்தது ஜூலை மாதத்தில். செப்டம்பர் மாதத்தில்தான் இந்தக் குழு செயல்பட ஆரம்பிக்கிறது.
இந்தக் குழுவைப் பற்றி யாரும் பேசுவதற்கு தகுதி கிடையாது. ஏனென்றால், அப்படிப்பட்ட நேர்மையாளர்களைக் கொண்ட குழு இது. மார்சுகி தாருஸ்மான் என்பவர் இந்தோனேஷியாவினுடைய அரசு தலைமை வழக்குரைஞராக இருந்தவர். ஜென்ரல் சுகார்டோ என்ற இந்தோனேஷியா ஜென்ரலை கூட அவர் விட்டுவைக்கவில்லை. 7 ஆண்டுகள் வழக்கை நடத்தி, விசாரணை நடத்தி அங்கிருப்பவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவர் மார்சுகி தாருஸ்மான். குழுவின் மற்றொரு உறுப்பினராக யாஷ்மின் சூக்கா, நெல்சன் மண்டேலாவிற்கு நெருங்கிய நண்பர். ஸ்டீவன் ராட்னர் இண்டர்நேஷனல் கமிட்டி ஆஃப் ரெட் கிராஸினுடைய ஆலோசகர். அதுமட்டுமல்லாமல், அவர் உலக அளவில் புகழப்படும் மனித உரிமைகள் வழக்குரைஞர். இவர்களை நியமிக்கும் போது இலங்கை அரசை கேட்டுதான் பான் கீ மூன் நியமித்தார். அதுவரைக்கு அவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் குழு அறிக்கை வந்த பிறகு, அதுகுறித்து அவர்கள் சொன்ன முதல் வாக்கியம் என்னவென்றால், இதுவொரு பயன்றற அறிக்கை என்று. இலங்கை சர்வதேச அளவில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை.
FILE |
இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த பகுதியில் 67 விழுக்காடு விவசாயம் குறைந்துள்ளது. மீன் பிடிப்பு 45 விழுக்காடு குறைந்துள்ளது. தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில். 50 லட்சம் பனை மரங்களை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி இந்தக் குழு ஒன்றுமே பேசவில்லை. அதனால் இது ஃபால்ஸ் ரிப்போர்ட். ஆனாலும் இந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் இந்த மூன்று பேருடைய நேர்மைக்கு எதிராக கேள்வி எழுப்ப முடியாது. இவர்கள் யாருடைய அழுத்தத்திலும் வேலை செய்யவில்லை. அந்தப் பெருந்தன்மையை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தயாரித்த 122 பக்க அறிக்கை மார்ச் 31ஆம் தேதியே தயாராகிவிட்டது. ஆனால் வெளியிட்டது ஏப்ரல் 26. தமிழகம் உட்பட இந்தியாவின் 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த நாள் ஏப்ரல் 25. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த நாள் ஏப்ரல் 13. இந்த அறிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளி வந்திருந்தால் இங்கே உள்ள அரசு வெற்றி பெறாது என்ற நம்பிக்கையில் உள்ளே வைக்கப்பட்டது. ஆனால், இங்கிருக்கும் சில சகோதரர்கள் ஐ.நா. அறிக்கையை அறிக்கையை விட வேகமாக வேலை செய்வார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
நன்றி;தினமலர்