ஐரோப்பாவின் காதல் முறிவு.
அண்மைக்காலத்தில் இணையம் உட்பட அனைத்து தகவல் முறைமைகளிலும் பேசுபொருளாக மாறியிருந்த ஒரு விடயம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐக்கிய இராச்சியத்துக்குமான காதல் முறிவாகும். கடந்தகாலங்களில் விரும்பியோ, விரும்பாமலோ புறக்காரணங்களால் இணைந்திருந்த காதலர்களில் ஒருவர் இனியும் சேர்ந்திருக்க முடியாது என பிரிந்து செல்லும் நிலைக்கு ஒப்பான காட்சியே தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பு மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதாக ஐக்கிய இராச்சியம் முடிவுக்கு வந்தபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் அண்மையில்தான் அவர்களது பிரதமர் திரேசா மே (Theresa May) அவர்களின் உத்தியோகபூர்வ கையெழுத்துடன் ஆரம்பமாகி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதற்கான இந்த செயற்பாடு நிறைவுபெற குறைந்தது இரண்டு வருடங்களாவது செல்லக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இவ் எதிர்பார்க்கபடும் இரண்டு வருடங்களுமே, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சரி, ஐக்கிய இராச்சியத்துக்கும் சரி மதில்மேல் பூனையாக உள்ள காலப்பகுதியாகும். காரணம், பிரிவுக்கான பேர்ச்சுவார்த்தைகள் சுமூகமாக செல்லாதபட்சத்தில், இருசாராருக்கும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளை அது ஏற்படுத்தகூடும் என எதிர்பார்க்கபடுகிறது. அப்படி, ஒருவேளை சுமுகமாக முடிவுகள் எட்டப்படாதவிடத்து, ஐரோப்பாவாழ் சமூகத்தினர் கீழ்வரும் விடயங்கள் தொடர்பில், அதிகம் கவலைகொள்ளவேண்டி ஏற்படலாம்.
பிரிவுக்கான வரைபுகள்
ஐரோப்பிய ஒன்றியம் என்பது, ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளை உறுப்பினராக கொண்டு உருவாக்கபட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாக செலவீனங்கள் அனைத்துமே, அனைத்து நாடுகளுக்கும் அதன் தன்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படுகிறது. உட்கட்டுமான திட்டங்கள், சமூக திட்டங்கள், ஆய்வுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஊழியர்களின் வேதனம் மற்றும் ஓய்வூதியங்கள் என்பனவும் இதில் உள்ளடங்குகிறது.
தற்போதைய பாதீட்டு திட்டமானது 2020ம் ஆண்டுவரை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு வருடம்தோறும் அனைத்து நாடுகளாலும் நிதியளிப்பு செய்யப்படுகிறது. இந்தநிலையில், ஐக்கிய இராச்சியம் இடைநடுவே பிரிந்துசெல்வதால், சுமார் 63 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தவேண்டி ஏற்படும் என கணக்கிடபட்டுள்ளது. இது ஒரே தடவையில் செலுத்தமுடியாத மிகப்பெரிய தொகையாக ஐக்கிய இராசியத்துக்கு இருக்கும். எனவே, இது தொடர்பில், இருசாராரும் முடிவொன்றுக்கு வராதபடசத்தில், ஐக்கிய இராச்சியம் நிதிரீதியாக பலவீனப்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
வர்த்தக செயற்பாடுகள்
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவராக உள்ளமட்டும், ஐக்கிய இராசியமானது இலவச வர்த்தக ஒப்பந்தங்களூடாக எவ்வித வரிகளுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்குள் வர்த்தக தொடர்பை கொண்டிருந்தது. இந்த நடைமுறையின் கீழ், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் மாத்திரம் சுமார் 44%மான ஏற்றுமதி சந்தையையும், 53%மான இறக்குமதி சந்தையையும் கொண்டுள்ளது.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவதாக முடிவாகியுள்ள நிலையில், இந்த சலுகைகளை முழுமையாக அனுபவிக்க முடியாதநிலை இருசாராருக்குமே ஏற்படும். இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்கின்ற மக்கள், இதுவரை காலம் பயன்படுத்திய பொருட்களை இனி அதிகவிலைகொடுத்து வாங்கவேண்டிய துர்பாக்கியநிலை ஏற்படும்.
இதனை கருத்தில்கொண்டுதான், ஐக்கிய இராச்சிய பிரதமர், ஒன்றியத்தின் விலகல் பேச்சுவார்த்தைகளில் புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடையாக அமையகூடாது என்கிற தொனியில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகள், ஐக்கிய இராச்சியத்தின் விலகல் சுமூகமாக அமையும்பட்சத்தில் மட்டுமே, இதுதொடர்பில் விவாதிக்க முடியும் என கருத்தினை வெளியிட்டு, சர்ச்சைகளுக்கான தொடக்கத்தினை விதைத்து இருக்கிறார்கள்.
குடியேற்ற உரிமைகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிதிகள் பிரகாரம், ஒன்றிய அங்கத்துவம் வகிக்கும் நாடுகளில் உள்ள எவரும், ஐக்கிய இராச்சியத்தில் குடியேறவும், ஐக்கிய இராசியத்தில் உள்ளவர்கள் அங்கத்துவ நாடுகளில் குடியேறவும் அனுமதியளித்து இருக்கிறது.
தற்சமயம், ஐக்கிய இராச்சியத்தின் பிரிவு முடிவானது இந்த சுதந்திர குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமையவுள்ளது. இதன் விளைவாக, இருபக்கங்களையும் சார்ந்த சுமார் 4 மில்லியன் மக்கள் பாதிப்படையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கூறிய விடயங்கள் அனைத்துமே, இருபக்கமும் பாதிப்பினை ஏற்படுத்தும் விடயங்களாக உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தினை பிரிவதன் விளைவாக, கீழ்வரும் விளைவுகளை மேலதிகமாக எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியநிலையை கொண்டுள்ளது.
வளர்ச்சியில் தேக்கநிலை
ஐக்கிய இராச்சிய நாட்டின் பாதீட்டு குழுவானது, எதிர்வரும் காலத்தில் நாட்டின் அபிவிருத்தியானது அல்லது வளர்ச்சி நிலையானது முன்னைய காலங்களுடன் ஒப்பிடுமிடத்து குறைவடையும் என கணக்கிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதற்கான வாக்கெடுப்பு நடந்து முடிந்தபின்பு இடம்பெற்ற கணிப்பீட்டில் ஐக்கிய இராச்சியத்தின் வளர்ச்சியானது 2.2% என மதிப்பிடபட்டபோதிலும், தற்போது அது 2%மாக அமையும் என பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதுபோல, 2018ம் ஆண்டில் இது மேலும் குறைவடைந்து 1.6% வளர்ச்சியையே கொண்டிருக்கும் என குறிப்பிடுகிறார்கள். இந்தநிலை, ஜரோப்பாவிலிருந்து ஐக்கிய இராச்சியம் தனித்து இயங்க முடிவு செய்துள்ள ஆரம்பகாலகட்டத்தில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்த வல்லதாகும்.
அதிகரிக்கும் கடன்சுமை
எதிர்வுகூறப்படும் மிகமெதுவான வளர்ச்சியானது அரச வருமானத்தை பாதிப்படைய செய்யும். இதன் விளைவாக, செலவினங்களை ஈடுசெய்வதற்கும், வருமான-செலவின இடைவெளியை ஈடுசெய்யவும் மேலதிகமாக கடன்பெறுவதனை தடுக்க இயலாதநிலை ஏற்படும்.
இதன்பிரகாரம், 2016ல் சுமார் 1.74 திரில்லியனாக உள்ள கடன்சுமையானது 2021ல் 1.9 திரில்லியனாக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த கடன் அதிகரிப்பானது அரசின் மேலதிக கடன்வாங்கல்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டாலும், நீண்டகலத்தில் இறுக்கமான நிதிக்கொள்கைகள் மூலமாக, மக்கள் மீது சுமத்தபடவே அதிக வாய்ப்புக்களை கொண்டதாக உள்ளது.
வேலைவாய்ப்பில் மந்தநிலை
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் பிரிந்துசெல்வதன் விளைவாக, ஜக்கிய இராச்சியவாசிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என நாம் எண்ணக்கூடும். ஆனால், யதார்த்தநிலை வேறுவிதமாக உள்ளதாக அந்நாட்டின் பாதீட்டு குழுவினர் சுட்டிகாட்டுகிறார்கள். குறிப்பாக, 2016ம் ஆண்டளவில் ஐக்கிய இராச்சியத்தில் சுமார் 830,000பேர் வேலையில்லா தீர்வையை பெற்று இருந்தார்கள் இந்த நிலையானது, 2020ம் ஆண்டளவில் சுமார் 880,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறபட்டுள்ளதுடன், 2018ம் ஆண்டளவில் நாட்டின் வேலையில்லாதவர்கள் சதவீதமானது சுமார் 5.2%மாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தை பிரிவதுதான் ஐக்கிய இராச்சிய நலனுக்கு நன்மைபயக்கும் என ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டாலும், அந்த நலனை நீண்டகாலத்தில் அனுபவிக்க மிகப்பயங்கரமான பாதையை ஐக்கிய இராச்சியம் கடந்துவர வேண்டியிருக்கும் என்பது தற்போது நிதர்சனமான உண்மையாகியிருக்கிறது.
இரு காதலர்களும் இணைந்திருப்பதிலும் பார்க்க, பிரிந்திருப்பதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளநிலையில், அந்த பிரிவுக்கு மிகப்பெரும் விலையையும், சிலபல தியாகங்களையும் இருதரப்பினரும் செய்தே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு வந்துவிட்டனர். இனி, இரு தரப்பினரும் எப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் விலகி செல்வது என்பதிலேயே அவர்களது வெற்றி தங்கியிருக்கிறது. யார் ஒருவரும், மற்றொருவருக்கு பாதிப்பை ஏற்படுத்த நினைத்தாலும், இருவரும் அதற்கான விலையை கொடுக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, இதில் விரும்பியோ விரும்பாமலோ இணைந்துவிட்ட ஐரோப்பிய வாழ்மக்களும், இந்த பிரிவு சுமுகமாக இடம்பெறும்வரை வெறும் பார்வையாளர்களாக இறுதிவரை பொறுமையாக இருந்தே முடிவு செய்யவேண்டியதாக இருக்கும்.