ஐ.நா.வின் செயல் முறைகளும் ஈழத் தமிழர்களும்
கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
“டயஸ்போறா” என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களைக் குறிப்பிடுகிறது. இச்சொற்பதம் சிதறல் என பொருள்படுகிறது. இச்சொற்பதத்தை அழமாக ஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களெனக் கூறுகிறது. இந்த அடிப்படையில் இலங்கைத் தீவில் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கிலிருந்து சிதறி வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை, இச்சொற்பதம் கொண்டு அழைக்கலாம்.
பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் 1990 ஆம் ஆண்டு முதல் ஜெனிவாவை மையமாக கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயற்பாடுகளிலும் பிரான்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், பாரளுமன்றம் ஆகியவற்றுடன் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவன் என்ற முறையிலும் ‘ஐ.நா.வின் செயல் முறைகளில் ஈழத் தமிழர்களது செயற்பாடுகள’பற்றிய ஓர் ஆய்வினை யதார்த்தின் அடிப்படையில் முன் வைக்க விரும்புகிறேன்.
ஐக்கிய நாடுகள் சபை பற்றிய சிறந்த அறிவை கொண்ட ஒருவர் ஜெனிவாவில் மனித உரிமை, அகதிகள் விவகாரம், மனிதபிமான செயற்பாடுகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளவை என்பதையும் நியூயோர்க்கில் அரசியல் செயற்பாடுகளை மையமாக கொண்டு செயற்படுகின்றன என்பதையும் மிக இலகுவில் புரிந்து கொள்வார்கள். இவற்றை வேறுவிதமாக கூறுவதனால், அரசியல் செயற்பாடுகளின் முடிவுகளை கையாளும் ஐ.நா. பொதுச் சபையும் ஐ.நா. பாதுகாப்பு சபையும் நியூயோர்க்கிலேயே நிலை கொண்டுள்ளன.
இந்த அடிப்படையில் ஜெனிவாவில் உள்ள செயற்பாடுகள் பற்றி முதலில் எடுத்துரைக்க விரும்புகிறேன். ஈழத் தமிழர்களாகிய எமது வேலைத் திட்டங்களை மனித உரிமையுடனான மனிதபிமான செயற்பாடுகளெனவும் அரசியல் செயற்பாடுகளெனவும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவற்றை நவீன சொற்பதங்களுக்கு அமைய நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் எனக் கூற முடியும். துரதிஷ்டவசமாக உணர்ச்சிவச செயற்பாட்டளர்கள் இவற்றைப் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். நிட்சயமாகப் பொறுப்புக் கூறல் மூலமாக நல்லிணக்கத்தை அடைய முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆனால், நாம் வண்டியின் முன்னால் மாட்டை கட்டப் போகிறோமா? அல்லது மாட்டின் முன்னால் வண்டியை கட்டுவது நல்லாத என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். ஜெனிவாவிற்கு செல்வது சுலபமான காரியம். ஆகையால், தமிழர்களது சுயநிர்ணய உரிமையில் அக்கறை கொண்டுள்ள தமிழ் அரசியல் வாதிகள் ஜெனிவாவில் தமது நேர காலத்தை வீண் விரயம் செய்வது மாட்டின் முன்னால் வண்டியை கட்டுவதற்குச் சமனானது.
ஜெனிவாவில் உள்ள மனித உரிமை செயற்பாடுகளின் உண்மை நிலையை நாம் ஆராய்வோமானால் முன்னைய ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுவில் சுயநிர்ணய உரிமைக்கு இருந்த நிகழ்ச்சி நிரல் தற்போதைய ஐ.நா. மனித உரிமை சபையில் கிடையாது. இதனால் சிலர் ஐ.நா. மனித உரிமைச் சபையில் ‘வளர்ச்சி உரிமை’ (Right to development) என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் தமது சுயநிர்ணய உரிமை பற்றி உரையாற்றுகின்றார்கள். இந்த உண்மையை அறியாத பலர் தமது கூட்டங்களை ஒழுங்கு செய்து ‘சுயநிர்ணய உரிமை’ பற்றி அலட்டி கொள்வது வீண் விரயம் என்பதே உண்மை.
இங்கு தான் சிறிலங்கா அரச முகவர்களின் கபடத்தன்மைகள் வெளியாகின்றது. பிரயோசனம் அற்ற ஒரு செயற்பாடு ஒன்றில் உணர்ச்சிவச செயற்பாட்டாளர்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் காலம் கழிக்க வழி வகுத்துள்ளனர்.
ஜெனிவாவில் நடைமுறையில் உள்ள பல மனித உரிமை செயற்பாடுகளை ஈழத் தமிழர்கள் ஆகிய எம்மால் சரியான முறையில் பாவிப்பதன் மூலம் நிச்சயம் பொறுப்புக் கூறலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி காண முடியும். மனித உரிமை செயற்பாடுகள் என்பது ஜெனிவாவில் இரு தளங்களில் நடைபெறுகின்றன. முதலாவதாக, முன்னைய ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுவிற்கு சமானக தற்பொழுது நாற்பத்தி ஏழு நாடுகளின் அங்கத்துவத்தை கொண்ட ஐ.நா. மனித உரிமைச் சபை. இரண்டாவதாகக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயம்.
இவை இரண்டினதும் செயற்பாடுகளானது எலும்பும் சதையும் போன்றது. இவை இரண்டும் நல்ல உறவுகளைக் கொண்டவர்கள் போன்று காட்சியளித்த போதும் ஐ.நா. மனித உரிமைச் சபை என்பது அரசில் கலப்பு கொண்டது என்பதே உண்மை. ஐ.நா. மனித உரிமைச் சபை என்பது அரசில் கலப்பு கொண்டதாக இருந்த பொழுதும் மனித உரிமையை மதிக்கும் நாடுகளானது மனித உரிமையை மீறும் நாடுகள் மீது தமது அழுந்தங்களைப் பிரயோகிப்பதற்கு அந்த நாடுகள் பற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளை பின்பற்றி முடிவு எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயம் ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மீது உடன்படிக்கை குழுக்கள் மற்றும் விசேட பிரதிநிதிகளான மனித உரிமை நிபுணர்களின் (Treaty bodies and Special Procedures) மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளிற்கும் உறுதுணையாகவுள்ளனர். இவ்விரு பிரிவினரும் மனித உரிமை சபைக்கு மனித உரிமை பிரகடனங்களை நாடுகள் எவ்வளவு தூரம் மதிக்கிறார்கள் என்பதை எடுத்துரைகின்றனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயத்தில் இந்த செயற்பாடுகளை கண்காணிப்பதற்கென நான்கு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை, மேற்குறிப்பிட்ட இரு பிரிவினர்களுடைய செயற்றிட்டங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்துவதுடன் வேறு பிராந்தியங்களில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலாயங்களின் செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்கின்றனர். ஐ.நா. மனித உரிமைச் சபையினால் நாடுகள் மீது தவணை முறையில் மேற்கொள்ளப்படும் ‘பூளோக மீளாய்வையும்’ (Universal Periodic Review - UPR) பரீசீலிப்பதற்கும் உறுதுணையாகவுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைச் சபை ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைக் காப்பதற்கான அங்கீகாரத்தை கொண்டுள்ளது. இந்தச் சபையில் ஐ.நா. அங்கத்துவ நாடுகள், பார்வையாளர் நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை சபை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழு இச்செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையில் அதனது உதவி அமைப்பாக செயற்பட்ட ஐ.நா. மனித உரிமை உப ஆணைக் குழுவை 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஆலோசனைக் குழு என்ற பெயர் கொண்ட அமைப்பு ஐ.நா. மனித உரிமைச் சபைக்கு உதவியாக ஆலோசனைகளை வழங்குகிறது.
ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மனித உரிமை அடிப்படை உரிமைகளையும் சர்வதேச மனித உரிமைச் சாசனங்களையும் எவ்வளவு தூரம் மதித்து செயலாற்றுகிறார்கள் என்பதைத் தவணை முறையில் பரீசீலிப்பதற்காக இவ்வழிமுறை நடைமுறையில் உள்ளது. விசேட வழி வகைகளான சீவில், சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் ஆகியன இவ்வழி வகைகளைக் கண்கணிப்பதற்கென நாற்பத்தி மூன்று குழுக்கள் மற்றும் விசேட பிரதிநிதிகளான மனித உரிமை நிபுணர்கள் காணப்படும் அதே வேளை பதினான்கு பிரதிநிதிகள் சில நாடுகளைக் கண்கணிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் ஏதேச்சையாக தடுத்து வைத்தல், பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக காணாமல் போதல், சட்டம் மற்றும் நடைமுறையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு போன்றவற்றை கண்காணிக்கும் குழுக்களும் மனித உரிமையின் விசேட பிரதிநிதிகளைக் கொண்ட நீதிக்குப் புறம்பான அல்லது ஏதேச்சையான கொலைகள், சித்திரைவதைகள், பெண்கள் மீதான வன்முறைகள், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம், மனித உரிமை செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய விடயங்கள், சுதந்திரமான வழங்கறிஞர்களும் நீதிபதிகளும், சிறுபான்மையினர், இனத் துவேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சிறு பிள்ளைகளும் அவர்கள் மீதான வன்முறைகளும், உணவு உரிமை, கல்வி உரிமை போன்ற பல பிரிவினர்களின் செயற்பாடுகள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக உதவக் கூடியவை.
இந்த நாற்பத்தி மூன்று குழுக்கள் மற்றும் விசேட மனித உரிமை நிபுணர்களுடன் பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையம் பல செயற்றிட்டங்கள் முன்பு நடைமுறைப்படுத்தியிருந்தது. இன்று சில குழுக்களுடனும் மனித உரிமை நிபுணர்களுடனும் சில செயற்றிட்டங்கள் செய்து கொண்டிருக்கிறது. இவற்றுடனான எமது செயற்றிட்டங்களின் பிரதிபலிப்புக்கள் யாவும் ஐ.நா. அறிக்கைகளில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுக்களுக்கு விசேட மனித உரிமை நிபுணர்களும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உற்றார் உறவினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவைகளும் தமது மனுக்களை அனுப்பி வைக்க முடியும்.
தற்பொழுது பத்து உடன்படிக்கைக் குழுக்கள் காணப்படுகின்றன. அவையாவன, மனித உரிமைகள் குழு, பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய குழு, இனப்பாகுபாட்டை ஒழிப்பது பற்றிய குழு, பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பது பற்றிய குழு, சித்திரவதைக்கு எதிரான குழு, சித்திரவதையைத் தடுப்பதற்கான துணைக் குழு, குழந்தைகளின் உரிமைகள் குறித்த குழு, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குழு, ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் குழு, காணாமல் போனவர்கள் தொடர்பான குழு.
கடந்த காலங்களில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குழு, சித்திரவதையைத் தடுப்பதற்கான துணைக் குழு ஆகிய இரு குழுக்களைத் தவிர்ந்த மற்றைய குழுக்களுடன் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்தது.
ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இக்குழுக்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாக எந்த ஒழுங்கான வேலை தகவல்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு பல காரணங்கள் இருந்த பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமான ஒழுங்கான சரிபார்க்கப்பட்ட நேர்த்தியான எந்த தகவல்களும் எமக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை சிறி லங்கா அரசு சார்பான திட்டமிட்ட சதி வேலைகள் ஐ.நா.வில் மேற்கொள்ளப்படுவதும் ஒரு காரணியாகவுள்ளது.
இந்த உடன்படிக்கைக் குழுக்களுக்கும் விசேட மனித உரிமை நிபுணர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உற்றார் உறவினர்களும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றனவும் தமது மனுக்களை அனுப்பி வைக்க முடியும். இவ்வேளையிலேயே நல்லாட்சி எனக் கூறப்படும் தற்போதைய அரசு மறைந்த மாமனிதர் யோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்ற சிலரது படு கொலைகள் பற்றி அக்கறை கொண்டு விசாரணைகள் நடாத்தி வரும் அதே வேளை மாமனிதர் குமார் பொன்னம்பலம், ஊடகவியலாளர் சிவராம் எனப்படும் தாராகி போன்ற பல ஊடகவியலாளரது படுகொலைகளை எதற்காக அலட்சியம் செய்துள்ளனர் என்ற உண்மையை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படுகொலைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளமை பற்றி நாம் எமது பரப்புரைகளில் முன்வைக்க வேண்டும். முறைப்பாடு செய்யும் முறையின் மூலம் மனித உரிமையை மீறும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது ஓர் ஐ.நா.மனித உரிமையின் ரகசிய நடைமுறை. இந்த ரகசிய வழிமுறைக்கு பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உற்றார், உறவினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமல்லாது ஒரு மனித உரிமை மீறல் பற்றிய நேரடி அனுபவத்தை கொண்டவர்களும் மனுக்களை அனுப்பி வைக்க முடியும்.
தமிழீழ மக்களுடைய அரசியல் பிரச்சினை என்பது இலங்கை தீவின் சுதந்திரத்திரத்திற்காக 1948 ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் இன்று வரை தொடர்ந்து இருந்து வந்துள்ள பொழுதிலும் பொதுச் சபையில் 1978 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஓர் உரையும் மற்றும் இந்தியா அரசினால் 1983 ஆம், 1984 ஆம் ஆண்டுகள் சில உரைகள் தவிர்ந்த வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு சபையிலோ அல்லது பொதுச் சபையிலோ ஈழத் தமிழர் விடயம் உத்தியோக ரீதியிலோ அல்லது உத்தியோகம் அற்ற ரீதியிலோ பதிவாகவில்லை என்பதே உண்மை.
1978 ஆம் ஆண்டு ஓக்டோபர் 5 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் என்ன நடந்தது என்பதை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். அன்று சிறி லங்காவின் வெளிநாட்டு அமைச்சாரான ஏ.சி.எஸ். கமித் பொதுச் சபையில் உரையாற்ற அழைக்கப்பட்ட பொழுது பிரித்தானிய வழங்கறிஞரான காலம்சென்ற கிருஷ்ண வைகுந்தவாசன் என்பவர் கமித் எழுந்து உரையாற்ற வருவதற்கு முன்னர் தமிழீழ மக்களது இன்னல் பற்றி மிகச் சுருக்கமாக யாருடைய அனுமதியுமின்றி உரையாற்றியிருந்தார். இவரது உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அக்காலப் பகுதியில் சிறி லங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே சிறி லங்காவின் உதவி வெளிநாட்டு அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண வைகுந்தவாசன் பொதுச் சபையில் ஆற்றிய உரை என்பது தமிழீழ மக்களது புலம்பெயர் வாழ் புத்தி ஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்களால் எவ்வளவு தூரம் தமது இனத்திற்காக செயலாற்ற முடியும் என்பதற்கான நல்ல ஊதாரணம்.
இவர்கள் கடமை உணர்வுடன் தாமாக முன் வந்து அழிந்து கொண்டிருக்கும் தமது தேசியத்தை காப்பாற்ற செயலாற்ற வேண்டும். இவ்வேண்டுகோள் மூலம் நான் யாரையும் முறையற்று சட்டங்களுக்கு எதிராக இயங்குமாறு வேண்டவில்லை. உண்மையில் தமிழீழ மக்களது புலம்பெயர் வாழ் புத்தி ஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்களால் தமது மக்களுக்கும் தமது தாயக பூமிக்கும் எவ்வளவோ செய்ய முடியும்.
இளைஞர்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. இவர்கள் ஐ.நா.வின் வேலைத் திட்டங்களைச் சரியான முறையில் கல்வி கற்று செயலாற்ற வேண்டும். கேள்வி ஞானத்தில் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தவறான அணுகுமுறை. உரியவர்கள் முன்வராத காரணத்தினால் உணர்ச்சிவச அணுகுமுறைகள் தவறாண முறையில் இடம்பிடித்து இன்று ஜெனிவாவில் ஐ.நா. வேலைத் திட்டங்கள் யாவும் நாசமாக்கப்படுகின்றன. இதனால், எமது தாயக நிலத்தில் அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் சிறி லங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள், சிங்கள மயம், பௌத்த மயம், இராணு மயம் யாவும் பெரும் வெற்றியுடன் நடைபெறுகின்றது.
இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள மாணவர்களால் தாக்கப்படுகின்றனர். இந்த உண்மையைப் புலம் பெயர் தமிழ் மக்கள் யாவரும் அறிந்திருக்க வேண்டும். உண்மையை கூறுவதனால் ஜெனிவாவிற்கு வருகை தரும் சிலர் தமது அரசியல் இலாபங்களுக்காகவே வருகை தருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ தமிழினத்திற்கோ எந்த நன்மையுமில்லை.
நாம் சிறி லங்கா அரசின் தொழில் சார் ராஜ தந்திரிகளை எதிர்கொள்ள வேண்டுமானால் எமக்குள் அதற்கு ஏற்ற தகமை உள்ளவர்கள் முன்வர வேண்டும். இப்படியான காரணங்களுக்காகவே பெரும் ஊதியம் சம்பாதிக்க கூடியதான நவீன தகவல் செயல் முறையிலிருந்து விலகி 1990 ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமை சர்வதேச ராஜ தந்திரம் போன்ற துறைசார் கல்வியை கற்றுக் கொண்டேன்.
இன்று பாலஸ்தீன மக்களுடைய அரசியல் பிரச்சினைகளும் தமிழீழ மக்களுடைய பிரச்சினைகளும் முடிவின்றி தொடர்வதற்கான காரணிகளில் ஒன்றாக அரசியல் அணுகு முறையில் முறைசார் பரப்புரைகள் மேலோங்குவதற்கு பதிலாக உணர்ச்சிவச செயற்பாடுகள் இடம் பிடித்துள்ளமையைக் கூறலாம்.
நாம் உலகளாவிய ரீதியில் யாதர்த்தங்களை ஆராயுமிடத்து சிறி லங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சீனாவும் ரசியாவும் பாதுகாப்புச் சபையில் அனுமதிக்க மாட்டார்கள் என்பது எந்தவிதத்திலும் உண்மை அல்ல. சீனாவும் ரஷ்யாவினது நெருங்கிய நட்பு நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வேளையில் இவ்விரு நாடுகளும் மௌனம் சாதித்துள்ளமையை நாம் காணக் கூடியதாக உள்ளது. சர்வதேச கீறிமினல் நீதிமன்றத்தினால் சூடான் ஜனதிபதி மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கபட்டமை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
அதே இடத்தில் அன்றைய சோவியத் யூனியனான தற்போதைய ரசியவே சிறி லங்காவின் ஐ.நா. அங்கத்துவத்திற்கு எதிராக தனது ‘வீற்ரோ’ அதிகாரத்தை மூன்று தடவை 1948 ஆம் ஆண்டும், 1949 ஆம் ஆண்டும் பாவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகையால் யாதார்த்தங்கள் உண்மைகளை ஆராய்ந்து சரியான செயற்றிட்டங்களை முயற்சிக்காது சாக்கு போக்குகளைக் கூறி காலத்தை கழிப்பதினால் எமது அரசியல் தீர்வு என்பது, 1948 ஆம் ஆண்டிலிருந்து ஒரு அங்குலம் கூட விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையில் நகரவில்லை என்பதே உண்மை.
இன்று யாவருக்கும் ஐ.நா. ஜெனிவா என்பதை நன்றாகத் தெரிந்திருப்பதற்கு அதற்கான நல்ல அத்திவாரமே காரணமாக உள்ளது. யூலை 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தைத் தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுவிற்கு சென்ற ஈழத் தமிழ் முன்னோடிகளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதனை தொடர்ந்து நாம் இரவு பகலாக ஐ.நா. மனித உரிமைக்கான வழிமுறைகளை அணுகி அயராது உழைத்ததன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது அரச பயங்கரவாதத்திற்கு இரையான சிங்கள, முஸ்லிம் மக்களுக்காகவும் வேலை செய்தோம்.
இன்று எமது அரசியல் அணுகுமுறை என்பது 1977ம் ஆம் ஆண்டு பொது தேர்தலின் பொழுது தமிழர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கு வாழ் மக்களினால் கொடுக்கப்பட்ட ஆணையை ஓரம் தள்ளிவிட்டு சிறிய அரசியல் இலாபங்களிற்காக தனி நபர் விரும்பத்தின் அரசியல் தீர்வுகளின் திசையை நோக்கிச் செல்கிறது. இவை யாவும் மாறுபட்ட சிறிலங்கா அரசுகளினாலும் அவர்களது பரப்புரையாளரினாலும் திறம்பட திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று புலம் பெயர் தமிழர்கள் சிலர் நிரத்தர அரசியல் தீர்விற்கு சர்வதேச சமூதாயத்தின் ஒப்புதலுடனான ஆபிப்பிராய வாக்கெடுப்பை வேண்டி நிற்கின்றனர். இவ்விடயத்தில் நாம் சர்வதேச சமூதாயம் எனக் கூறினாலும் ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையையே வேண்டி நிற்கிறோம் என்பதே யாதார்த்தம். ஒரு நாட்டில் அந்த அரசின் முடிவு தவிர்ந்த வேறு ஏதாவது ஒரு ஆபிப்பிராய வாக்கெடுப்பு நடக்குமானால் அதை ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையினலே முடிவு செய்ய முடியும்.
ஆகையால் இவ்விடயத்தில் நாம் சில யாதார்த்தங்களை மனதில் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் பற்றி ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று வரை எவ்வளவு தூரம் பேசப்பட்டுள்ளது? உண்மையை பேசுவதனால் இன்று வரை அங்கு அப்படியொன்றும் பிரயோசனமான முறையில் நடைபெறவில்லை. 2006 ஆம் ஆண்டு போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கூட உத்தியோக பற்றற்ற சில உரையாடல்களே ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகளிடையே நடைபெற்றது என்பதே உண்மை.
இந்த நிலையில் தமிழீழ அரசியல் நிரத்தர தீர்விற்கு சர்வதேச சமூதாயத்தின் ஆதரவுடன் ஆபிப்பிராய வாக்கெடுப்பு என்பது நடைமுறைக்கு சாத்தியமான விடயமா? எரீத்தீரியா, கிழக்கு தீமூர், தென் சுடான், கோசவா போன்ற நாடுகள் வருடக் கணக்கில், மாதக் கணக்கில், நியுயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடும் பரப்புரை வேலைகளைச் செய்து தமது இலக்கை அடைந்தார்கள். ஆனால் இன்று வரை ஈழத் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் எவரும் ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்பு சபையுடன் எந்த தொடர்ச்சியான வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.
ஆகையால் ஆபிப்பிராய வாக்கெடுப்பு என்பதும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு காட்டப்படும் இன்னுமொரு கானல் நீரே. இந்தியாவின் பங்களிப்பு என்பது ஈழத் தமிழர் விடயத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. விசேடமாக எமது ஐ.நா.செயற்பாடுகளுக்கு இந்தியாவின் உதவியின்றி நிச்சயம் பயணிக்க முடியாது. எனது அனுபவத்தில் பொறுப்புக் கூறல் என்று வரும் வேளையில் ஜெனிவாவில் இந்தியாவின் குரல் மிகவும் தளர்ந்த நிலையில் காணப்படலாம். ஆனால் எமது அரசியல் தீர்வு அல்லது எமது அரசியல் தீர்விற்கான நியூயோர்க் செயற்பாடு என்ற நிலையில் இந்தியா நிச்சயம் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தே ஆக வேண்டிய நிலை இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு ஓக்டோபர் 21 ஆம் திகதி இந்தியாவின் பிரதிநிதியாக தமிழ் நாட்டின் அமைச்சர் பண்டுருட்டி ராமச்சந்திரன் ஐ.நா.பொதுச் சபையின் அரசியல் குழுவில் சிறி லங்காவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்துள்ள அகதிகள் பற்றி உரையாற்றினார். 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி இந்தியாவின் பிரதிநிதியான மீர்த்தா என்பவர் ஐ.நா.பொதுச் சபையின் 39 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் சிறி லங்காவிலிருந்து இந்தியாவிற்குள் வந்துள்ள அகதிகள் பற்றி எடுத்துரைத்தார்.
இவை மட்டுமல்லாது 1983, 1984, 1985 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழு, உப ஆணைக் குழுவில் இந்தியாவின் பிரதிநிதிகள் தமிழர் விவகாரம் பற்றி உரையாற்றியிருந்தனர் என்பது சரித்திரம். ஆகையால் இந்தியாவின் விடயத்தில் மிகவும் ஆழமான சிந்தனையும் பிரயோசனமான அணுகு முறையும் முக்கியமானவை என்பதை ஈழத் தமிழர் அறிந்திருக்க வேண்டும். சர்வதேச அணுகுமுறை அல்லது சர்வதேச ராஜதந்திரம் என்று வரும் பொழுது சில ஈழத் தமிழர் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். போட்டி மனப்பான்மையின் அடிப்படையில் ஏதாவது ஒன்றை செய்வதாக எண்ணித் தாமும் குழம்பியதுடன் மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
உலக அரசியல் சர்வதேச மூலோபாயத்தின முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்தியா ஒரு பொழுதும் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கை அலட்சியம் பண்ண முடியாது. விசேடமாக கலை, கலாச்சாரம், மொழி, சமயம் ஆகியவற்றில் ஒத்த கருத்தின் அடிப்படையிலே தமிழர்களது தாயக பூமியான தமிழீழத்தை இந்தியா என்றும் தனது கண்கணிப்பிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் உண்டு.
இது தவறும் பட்சத்தில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கிலிருந்து என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வெளிநாட்டுச் சக்தி இந்தியா மீது ஏவுகணை பீரங்கி தாக்குதல்களை நடாத்துவது மட்டுமல்லாது இப்பிரதேசங்களிலிருந்து இந்தியாவில் பிரிவினை வேண்டி போராடும் சக்திகளிற்கு ஆயுதங்கள், யுத்த தளபாடங்களை விநியோகிக்கும். இந்த ஆபாயகரமான யாதார்த்தத்தை இந்தியாவின் ஆலோசகர்கள் கவனத்தில் கொள்ள தவறும் பட்சத்தில் இந்தியா பாரீய ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். இந்தியாவின் முடிவெடுப்பாளர்கள் எப்போதும் தமது முடிவுகள் தவறு என நிருபிக்கப்பட்ட பின்னர் தவிப்பது வழக்கம்.
பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இரு தொழில் சார் அமைப்புக்கள் உள்ளதாக அறிகிறேன். முதலாவது மியோட் எனும் தமிழ் மருந்துவ நிறுவனம் இரண்டாவது தமிழ் வழங்கறிஞர் சங்கம். இதற்கு மேலாகத் தமிழ் பொறியியலாளர் அல்லது கணக்காளர் அல்லது வேறு துறை சார்ந்த அமைப்புக்கள் இருப்பின் அவற்றை இணைத்துக் கொள்ளவும். இந்த தொழில்சார் அமைப்புக்கள், சங்கங்கள் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் தேசியத்திற்கு பெரிதாக உதவ முடியும்.
மற்றைய இனத்தவர்களது உரிமைப் போராட்டங்களை நாம் அவதானிக்குமிடத்து அந்த இனங்களினது மருந்துவ காலாநிதிகளும் சட்ட வல்லுனர்களும் தமது இனத்தின் அரசியல் தீர்விற்கு பெரிதாக அர்ப்பணிப்பதை காண முடிகிறது. எமது அரசியல் பிரச்சினை என்பது ஒரு நீண்ட காலம் மட்டுமல்லாது மிக ஆளமான காரணிகளை அடித்தளமாக கொண்டுள்ளது. ஆகையால் சமூக மனிதபிமான உதவிகள் மட்டும் எமது இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.
உலகளாவிய ரீதியில் திகழும் ஈழத் தமிழரது தொழில் சார் அமைப்புக்கள் தம்மை சர்வதேச மயப்படுத்த வேண்டும். இந்த அமைப்புக்கள் தனித்து தமக்குள் மட்டும் செயற்பாடுகள், விழாக்கள், விருந்துகள் நடத்தாது சர்வதேச ரீதியாக தமக்கு உடந்தையான சங்கங்கள் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாரிய அளவில் செயற்பட வேண்டும். இவ்வாறான வேலைகள் நிச்சயம் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக அமையும்.
ஐ.நா. ஜெனிவா விடயத்தில் சில அபிப்பிராயங்கள் ஆலோசனைகளை முன் வைக்க விரும்புகிறேன். தற்பொழுது ஈழத் தமிழர்கள் யாவரும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை சபையின் 34 ஆவது கூட்டத் தொடரில் என்ன நடைபெறவுள்ளது என்பதில் ஆர்வமாகவுள்ளனர். மிக சுருக்கமாகக் கூறுவதானால் நல்லாட்சி எனக் கூறப்படும் தற்போதைய சிறி லங்கா அரசு தம் மீது ஐ.நா. மனித உரிமைச் சபையினால் 2015 ஆம் ஆண்டு ஒப்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் போதாது என்பதை நிச்சயம் முன் வைப்பார்கள்.
இதனுடைய உண்மை நோக்கம் கால அவகாசத்தை பெற்று தமிழர் தாயக பூமியின் மிகுதி இடங்களிலும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த சமயத்தை முன்னெடுக்கும். ஆகையால், நாம் இவ்விடயத்தில் திட்டமிட்டு செயற்பட முடியாத நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஒரு மாபெரும் ஏமாற்றத்தையே நாம் ஜெனிவாவில் சந்திக்க நேரிடும். ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு சிறி லங்கா அரசின் கண் துடைப்பு வேலைகள் யாவும் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காகவே என்பதை ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும். இவரை நேரில் சந்தித்து விடயங்களை விளக்க வேண்டும். இல்லையேல் உண்மை நிலைகளை மிக சுருக்கமாக மனுக்கள் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
அத்துடன், நாம் இன்று வரை ஐ.நா. மனித உரிமைச் சபையில் வெற்றியாக செய்த வேலைகள் யாவற்றுக்கும் எமக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்கணிப்பகம், சர்வதேச நெருக்கடி குழு போன்ற அமைப்புகளை தெற்கில் உள்ள நேர்மையான மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சில மேற்கு நாட்டு செயற்பாட்டாளர்களையும் ஒருங்கிணைந்த பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். இதில் சில மேற்கு நாட்டு செயற்பாட்டாளர்கள் தாம் விரும்பியவற்றை எம்மீது திணிக்க முற்படும் வேளைகளில் இவர்கள் யாரின் பின்னணியில் செயற்பாடுகிறார்கள் என்பதை அறியாது இவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளவோ தவிர்கவோ முடியாது.
மேலும், ஐ.நா. மனித உரிமைச் சபையின் முக்கிய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, இவற்றுடன் தென் (லத்தின்) அமெரிக்கா, ஆபிரிக்க, ஆசிய நாடுகளின் முக்கிய நாடுகளை நாம் எமது பரப்புரையில் உள்ளாக்க வேண்டும். புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்கள் வாழும் சகல நாடுகளிலும் உள்ள வெளிநாட்டு அமைச்சுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு நிலைமைகளை விளக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்ரேறஸ் இலங்கைத் தீவின் முதலாவது காலணித்துவ நாடான போத்துக்கலை சார்ந்தவர். ஆகையால் அன்ரோனியோ குற்ரேறஸ் இலங்கைத் தீவில் உண்மை சரித்திரத்தை நன்கு அறிந்தவர். அது மட்டுமல்லாது இவர் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளராக பதவி வகித்த வேளையில் சிறி லங்காவில் கடுமையான யுத்தம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டு யூலை மாதம் சிறி லங்காவிற்குச் சென்று அங்கு சிறி லங்கா அரசையும் தமிழீழ விடுதலை புலிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்தவர்.
எனவே, அன்ரோனியோ குற்ரேறஸ் பதவியேற்கும் வேளையில் நாம் யாவரும் இவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்புவதுடன் இலங்ககைத் தீவில் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றில் ஐ.நா.வின் பங்கை சுருக்கமாக நினைவுபடுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் போத்துக்கல் ஒன்று என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. இதே வேளை, தமிழீழ மக்களுக்கு நீதியுடனான ஒரு நிரந்தர அரசியல் தீர்வையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும் பெற்றுக் கொள்வதற்கு எமக்கு உதவிய ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய பாராளுமன்றம், பொது நலவாய அமைப்பு ஆகியவற்றுடனும் இணைந்து நாம் பயணிக்க வேண்டும்.
1978 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி காலம் சென்ற பிரித்தானிய வழங்கறிஞர் கிருஷ்ண வைகுந்தவாசன் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய உரை. இக்கூட்டத்திற்கு கொலம்பியாவின் ஐ.நா. பிரதிநிதி லீவியனோ தலைமை வாகித்தார்.
தமிழீழம் போன்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் இது போன்ற உச்ச மன்றத்தில் தமது பிரதிநிதித்துவத்தை முன்வைக்க முடியாவிட்டால் அவர்கள் எங்கு செல்வது? இந்தியாவிற்கும் சிறி லங்காவிற்கும் இடையில் இரண்டரை மில்லியன் மக்களைக் கொண்ட தேசிய இனமான தமிழீழத்திலிருந்து வருகை தந்துள்ளேன். சிறி லங்காவில் சிங்கள அரசு தொடர்ந்து தமிழ் தேசியத்தை இன அழிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது.
நாம் பிரிந்து வாழ்வதற்கான சுயநிர்ணய உரிமைக்கு வாக்களித்துள்ளோம். தமிழ் மக்களுடைய பிரச்சினை என்பது இந்தியா இந்து சமூந்திர பிராந்தியத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் ஆபாயகரமான நிலையை உருவாக்குகிறது. சிறி லங்காவின் விடயத்தில் உலகத் தலைவர்கள் முன்வந்து ஒரு தீர்வைக் காணத் தவறும் பட்சத்தில் இது பாலஸ்தீனருடைய மற்றும் சைபிரஸினுடைய பிரச்சினை போல் உருவாகும்.
tamilwin