ஒரு சமயம், கண்ணன், பலராமன் மற்றும் யாதவ குல வழி தோன்றலான சாத்யகி ஆகிய மூவரும் குதிரையில் ஏறி, பயணம் புறப்பட்டனர். இருள் சூழும் நேரத்தில் அடர்ந்திருந்த காட்டுப் பகுதியை அடைந்தவர்கள், 'இருட்டும் நேரத்தில் இதற்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்...' என, நினைத்து, அக்காட்டிலேயே தங்க தீர்மானித்தனர்.
குதிரைகளின் சேணங்களை அவிழ்த்து, அவைகளை அங்கிருந்த மரங்களில் கட்டி முடிப்பதற்குள், இரவின் முதல் யாமம் கடந்து விட்டது. அதனால், மூன்று யாமங்கள் தூங்கி, விடியற்காலையில் புறப்படலாம் என, முடிவு செய்தனர். பின், 'தூங்கும் போது குதிரைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது...' என நினைத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு யாமம் காவல் காப்பதென்றும், அந்நேரத்தில், மற்ற இருவரும் தூங்குவதென்றும் முடிவு செய்தனர்.
முதலில், சாத்யகி காவல் காக்க, மற்ற இருவரும் தூங்கினர். சிறிது நேரத்தில் பெரும் பிசாசு ஒன்று தோன்றி, 'தூங்கும் இருவரையும், தின்னப் போகிறேன்; அதற்கு நீ அனுமதித்தால், உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்...' என்றது!
சாத்யகி பயப்படாமல், 'பிசாசே... வாயை மூடி, பேசாமல் போய்விடு; இல்லை என்றால், உன் கதையை முடித்து விடுவேன்...' என்று மிரட்டினார்.
'என் ஒரு பிடிக்கு தாங்க மாட்டாய்... என்னை மிரட்டுகிறாயா...' என்றபடி, சாத்யகி மீது பாய்ந்தது, பிசாசு.
உடனே, சாத்யகிக்கு கடுமையான கோபம் வர, பிசாசுடன் கட்டிப் புரண்டார். சாத்யகியின் கோபம் அதிகரிக்க அதிகரிக்க, பிசாசின் பலம் கூடிக் கொண்டே போனது. இதனால், சாத்யகியின் உடலெங்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன. அடுத்த யாமம் நெருங்கும் நேரம், பிசாசு, 'பளிச்' சென்று மறைந்தது.
பலராமரை எழுப்பி, தூங்கப் போனார் சாத்யகி. சற்று நேரத்தில், மறுபடியும் பிசாசு வந்தது. சாத்யகியை போலவே, பலராமரும், பிசாசுடன் சண்டை போட்டார். பலராமருக்கு கோபம் அதிகரிக்க, பிசாசுக்கு பலம் கூட, பலராமருக்கு உடலெங்கும் காயம்.
இந்நிலையில், அடுத்த யாமம் நெருங்க, பிசாசு மறைந்தது. பலராமர் கண்ணனை எழுப்பி, காவலுக்கு அனுபினார். கண்ணன் காவல் காத்த போது, வழக்கம் போல் பிசாசு வந்தது.
'நீயாவது நான் சொல்வதைக் கேள்; இவர்கள் இருவரையும் எனக்கு உணவாக விட்டு விட்டு, ஓடிப் போய் விடு...' என்றது!
கோபிக்கவில்லை, கண்ணன். மாறாக, 'நல்லவேளை... நீ வந்தாய். தனியா அமர்ந்திருக்கிறோமே என நினைத்தேன். இப்போது உன்னுடன் சண்டை போடுவதன் மூலம் பொழுதும் கழியும்; சோம்பலும் இருக்காது...' என்று கூறி சிரித்தார்.
கோபத்துடன் கண்ணன் மீது பாய்ந்தது, பிசாசு. அது, கோபத்தோடு எகிற எகிற, கண்ணன் சிரித்தபடியே, 'ஆகா... நீ எவ்வளவு பெரிய வீரன்; என்ன அருமையாக சண்டையிடுகிறாய்...' என்று சொல்லச் சொல்ல, பிசாசின் வடிவமும், பலமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சிறு புழு போன்று ஆகிவிட்டது.
அதை, துணியின் ஓரத்தில் முடிந்து வைத்தார், கண்ணன். பொழுது விடிந்ததும், சாத்யகியும், பலராமரும் இரவில் பிசாசுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை சொல்லி, உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டினர். அப்போது, தான் துணியில் முடிந்து வைத்திருந்த சிறு புழுவை எடுத்து வெளியில் விட்டு, 'நீங்கள் இரவில் சண்டையிட்டதாக கூறிய பிசாசு இதுதான்; இதன் பெயர்: கோபம். நாம் கோபத்தை காட்டக் காட்ட, இது வளர்ந்து கொண்டே போகும்; கோபப்படாமல் இருந்தால், இதுவும் பலமிழந்து, செயலற்று போய் விடும். நாம் கோபத்தை அடக்கும் போது, எதிராளி பலமிழப்பான்...' என விவரிக்க, சாத்யகியும், பலராமரும், தங்கள் தவறை உணர்ந்தனர்.
நாமும், நம் கோபத்தை கைவிட்டு, எல்லாரையும் அன்பினால், வசப்படுத்துவோம்!
வாழ்க வளமுடன்
G N சாமி