சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன…
இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.
“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை.
பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்… 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது.
ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்!
அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன்.
ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.)
பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.
அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர்.
தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.
எம்.ஜி.ஆர்கோபாலன் நேர்மையான மனிதர். மனிதநேயம் கொண்டவர். எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர்.
இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல.
புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர்.
தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார்.
அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை.
அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம்.
கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.
அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்… அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது.
தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார்.
பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது.
இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள்.
இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம்.
அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை;
தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை.
ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் ‘சம்பவம்’ நிகழ்ந்தது. ஆம்…அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.
ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன்.
இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம்.
குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது.
பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார்.
காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம்.
ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.
மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர்.
“பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க…அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது.
ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்… அப்பா இனி பிழைக்கவழியில்லை.
நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி ‘நாராயணா, நாராயணா’ என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.
வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம்.
உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி.
அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை.
குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா.
பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின.
வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார்.
அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.
பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா… நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான்.
என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை.
எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.
உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு.
குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார்.
கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.
அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள்.
குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார்.
கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர்.
கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு… அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார்.
குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்… அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு… தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.
மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.
அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.
http://ilakkiyainfo.com/
(தொடரும்)