இலங்கையின் 70 வருட பிரச்சினையை தீர்க்க மஹிந்த உதவ வேண்டும் : மஹிந்தவுக்கு சம்பந்தன் பகிரங்க அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பாமல், தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அபிவிருத்தி என்பது தக்கவைத்துக்கொள்ளும் அபிவிருத்தியாக இருக்கவேண்டும், இந்த நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், வறுமை ஒழிக்கப்பட வேண்டும், அரசாங்கம் இதில் வெற்றிபெறவேண்டும். இதற்காக தனது ஆட்சிக்காலத்தில் சில விடயங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி செயற்பட்டுவருகின்றார்.
பட்டிருப்பு தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.எம்.இராசமாணிக்கம் ஒரு பெரும் தலைவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக திகழ்ந்தார், கடமை புரிந்தார். எல்லோரது மதிப்பினையும் பெற்ற ஒரு தலைவர்.
1961ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு நாங்கள் போராட்டம் நடாத்தியபோது எங்களை கைது செய்து பனாகொடை இராணுவமுகாமில் அடைத்தார்கள். அன்று எனக்கு வயது 28. இளம் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்தேன்.
நாங்கள் உரிமைக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். இன்று பேச்சுவார்த்தை மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அந்த அரசியல் சாசனம் ஊடாக நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான தீர்வினைக்கண்டு இந்த நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம்.
புதிய அரசியலமைப்பு ஊடாக நாங்கள் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தவறான கருத்தாகும். உண்மையற்ற கருத்து.
பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமிய மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அது பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த பணியில் மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்துகொள்ளவேண்டும் என இங்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பாமல் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தாமல் மக்களை ஒற்றுமைப்படுத்தி 70 வருடமாக இந்த நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை காண்பதற்கு உதவ வேண்டும். அது அவரின் புனிதமான கடமை. அந்த கடமையினை தவறக்கூடாது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள