புதன், 18 ஜனவரி, 2023

சிறு கதை - 32 / "சத்தம் போடாதே"

 சிறு கதை - 32 / "சத்தம் போடாதே"


இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer]  எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம்

என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்க்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன்,  ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது!

ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை!

1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து  பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில்

இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும்  பின்பு தான் தெரிந்தது

ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும் 

மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம் . எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக  அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம்  வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்!

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்கு தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம்

"மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா? இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,"

குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே

என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம்  அவள்  உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்!

அவர்கள் தூங்கிய கையோடு, தான்  முன்பு  வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக  மாற்றி அமைத்து, ஓ!  அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! , நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக , கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு  136] நினைவூட்டி சென்றது.

இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து]  , ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள்  நெற்றி இப்படி வேர்க்குதே?  கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறாள்!   

"தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர்உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே."

1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. இவை 'சத்தம் போடாதே. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே '  நிறைவேறிக்கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.!

இதை வாசித்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தயவு செய்து இந்த கதை பற்றி

'சத்தம் போடாதே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஆண்டவனைக் கொஞ்சம் மறவுங்கள்-2

 ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்!" / பகுதி:02


 தவளையைப் பற்றி ஒரு பழங் கதை உண்டு.தவளையை ஒரு கொதிக்கும் நீருக்குள் போட் டால்,அது உடனடியாக துள்ளி வெளியே போய் விடும். ஆனால் அப்படி இல்லாமல், சட்டியில் உள்ள நீரில் முதல் தவளையை போட்டு ,பின் மெல்ல மெல்ல சூடேற்றினால் , அந்த தவளை, நீர் கொதித்து,அது இறக்கும் மட்டும் அங்கு இருந்து விடும்.கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர் கூட இப்படியான ஒரு உவமை பாவிக்கிறார். ஆனால் தவளைக்கு பதிலாக ஆமை.

"...உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இல்லாதேன்..."

என்கிறார்.இப்படியான ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால், எமது சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, சமயம் என்ற அண்டாவில் இருந்து தம்மை விடுவித்து துள்ளி வெளியே வந்து எமக்கு உண்மையை தெளிவாக காட்டி விட் டார்கள்.இந்த சித்தர்கள் தம்மை பின்பற்றுபவர்கள் என்று எவரையும் வைத்திருக்க வில்லை,அதே போல எந்த ஆசிரமமும் கட்ட வில்லை. அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையில் பக்தர்களுடன் தொடர்பு கொண்டார்கள்: இவர்கள் பக்தர்களை எந்த கட்டுப் பாடும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க விட்டார்கள். எல்லா சித்தர்களும் ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை அலைய விடாமல் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

'மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்.. கலையின் பெயராலே காமவலை வீசும், காசு வருமென்றால் மானம் விலைபேசும், நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும், நிம்மதி யில்லாமல் அலை போல மோதும்...'

என்று சும்மாவா சொல்லி வைத்தான்! அது மட்டும் அல்ல மனம் என்னும் இந்த பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன, அதற்காகப் பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டி ச்சித்தர் ஆவார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி...  அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே பாடல்களை பாடினார். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன.

"சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல
தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம்
விதம்வித மானவான வேறு நூல்களும்
வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே

பாடல்:98 ]

"இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!"
[பாடல்:61 ]

"ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல்
எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே
நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே
நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே."
[பாடல்:94 ]

சிவவாக்கியர் மற்றும் ஒரு முக்கிய  சிறந்த சித்தர் ஆவார். இவர் பிராமண சட்டத் திற்கு எதிராக கொதித்து எழுந்தவர். சாதி அமைப்பிற்கும், உருவ வழிபாட்டிற்கும், ஆலய சடங்குக்கும் எதிராக சமுதாயப் புரட்சி செய்தவர். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன.   

"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!"
[பாடல்:39 ]

"கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;
உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே"
[பாடல்:47 ]

"கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே."
[பாடல்:34 ]

ஒரு தனிப் பட்டவரை நல்ல மனிதனாக,ஆணவத்தை மையப்படுத்திய இனவாதி அற்றவனாக மாறுவதற்கே, ஆண்டவனோ அல்லது சமயமோ இருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிஸ்துவரும் ,இஸ்லாமியரும்,இந்துவும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும், 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வராகவும் இருக்க வேண்டும்.நாம் எல்லோரும் ஒரே ஆண்டவைத் தான் நம்புகிறோம். ஆக, அந்த தெய்வீக சக்தியை நினைவு கூறும் எமது வழி தான் வேறு பட்டது. ஆனால், சமயத்தின் பெயரில், ஆண்டவனின் பெயரில் சிந்தும் குருதியும், வெறுப்பும் , ஆணவமும் அங்கு எதோ சில ஓட்டைகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இதனால் மனித சமூகம் துன்பப் படுகிறது.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே'

என்பதை உணர வேண்டும். இந்த உலகம் எல்லை அற்றதாக, யுத்தம் அற்றதாக, சமயம் அற்றதாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள் .எல்லா அடிப்படையும் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றன . குடும்பம் ஒன்றாய் இருப்பின் அதுவே ஆரம்பம். சகோதர, சகோதரிகள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ்ந்தால் அதுவே ஆரம்பம்.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு றையும் தெய்வத்துள் வைக்கப் படும்'.

நல்வாழ்வை தேடி இந்த உலகின் அழகான வாழ்வை ரசிப்போம். நாம் சமயம், சாதி, சமூகம் நாடு என்ற எல்லைகளை தாண்டுவோம். இந்த உலகின் மைந்தராக வாழ்வோம். தமிழரின் சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கை வழி. மக்களின் சுதந்திரம், விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக  செயல்படுவதையும் இந்த தத்துவம் என்றும் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை.

"அன்பே  சிவம்","தென்னாடுடைய  சிவனே  போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ  போற்றி"

என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை . இரண்டும் ஒன்றே! என்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன.

"யாதும் ஊரே, யாவரும் கேளீர்"

என புறநானுறு முழங்குகிறது. எல்லைகளை தாண்டி எல்லோரையும் அணைக்கிறது!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி:03  தொடரும்
ஏறுதழுவுதல்.

 அந்தாதிக் கவிதை - 8 / "ஏறு தழுவல்"


"ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு
விளையாடி அவன் சேர்த்த வீரம்!
வீரம் கொண்ட காளை அடக்கி
அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்!
கொடுத்த வாக்கை என்றும் மாற்றாமல்
மாறாத நல்ல ஆட்சி அமைப்பான்!
அமைத்த கட்டிடங்களை அழகு ஆக்கி
ஆக்கிய நெறிகளை அறிமுகம் செய்வான்!
செய்த மல்யுத்தத்தில் தெரியும் வீரம்     
வீரத்தின் சிறப்பே ஏறு தழுவல்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]