வெள்ளி, 24 மார்ச், 2017

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் புதைக்கப்பட்ட நீதி: வைகோ அறிக்கை


tamil hindu
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து இனக்கொலை செய்த சிங்கள அரசுக்கு ஆதரவாக தீர்மானம் எண் 34 நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் நடைபெற்ற அர்மீனிய இனப்படுகொலைக்கு ஜெர்மனி நாடாளுமன்றம், கடந்த வருடம் துருக்கி அரசு நடத்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தனது நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் அடலாப் ஹிட்லரின் தலைமயில் நாஜிகள் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் நூரம்பர்க்கில் நீதி விசாரணை நடைபெற்று, இனக்கொலை நடத்தியவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் 50களில் தொடங்கி, 2009 வரை ஏறத்தாழ 60 ஆண்டு காலம் இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அரசு, ஈழத் தமிழ் இனத்தை அடிமை நுகத்தடியில் நசுக்கி, நாலாந்தரக் குடிமக்களாக்கி, அறவழியில் உரிமையும் நீதியும் கேட்ட ஈழத் தமிழர்கள் மீது போலிஸ், இராணுவத்தின் மூலம் கொடிய அடக்குமுறை, வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், உலகத் தமிழர் மாநாட்டில் தமிழர் படுகொலை, யாழ் நூலகம் எரிப்பு, விசாரணையின்றி சிறையில் சித்ரவதை, கணக்கற்ற படுகொலைகள் என கோர தாண்டவம் ஆடியதால் தமிழர் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் இறையாண்மையுள்ள சுதந்திரத் தமிழ் ஈழ அரசுதான் இலக்கு என 1976 மே 14இல் நிறைவேற்றிய வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழத்தமிழர்களின் மேக்னா கார்ட்டா ஆகும்.

பச்சிளம் குழந்தைகளையும், தமிழ்ப் பெண்களையும், ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவம் கொலை செய்ததால், வீறுகொண்ட வேங்கை பிரபாகரன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் உலகத்தின் பல்வேறு நாடுகளின் தேசிய இனங்கள் விடுதலைக்காக தேர்ந்தெடுத்த ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். தங்களைவிட பன்மடங்கு ஆயுத பலமும், எண்ணிக்கை பலமும் கொண்ட சிங்கள இராணுவத்தை விடுதலைப் புலிகள் நெஞ்சுரத்தாலும், தியாக உணர்வாலும் உலகம் அதுவரை கண்டிராத வீரம் செறிந்த யுத்தத்தை நடத்தி வெற்றி கண்டனர்.

ஆனால் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சிங்கள அரசுக்கு முப்படை உதவிகளையும் தந்து யுத்தத்தை பின்னின்று இயக்கியதாலும், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இராணுவ உதவியாலும் சிங்களர்கள் விடுதலைப் புலிகளை தோற்கடித்தனர். அதோடு நிற்கவில்லை; 2008 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கி, 2009 மே 18 வரையில் ஐ.நா. தடை செய்த குண்டுகளையும் பயன்படுத்தி ஆயுதம் ஏந்தாத தமிழர்களை பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை ஈவு இரக்கமின்றி ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தனர்.

ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கை சாட்சியங்களோடு தமிழ் இனப்படுகொலையை நிருபித்தது. 2009 மே மாதத்தில் ஈழத்தமிழர்கள் சிந்திய இரத்தம் காய்வதற்கு உள்ளாகவே ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில், கொலைகார சிங்கள ராஜபக்சே அரசுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது.

2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 30 ஆவது அமர்வில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் குறித்தும், போர்க் குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு நீதிபதிகளும் பங்கேற்கும் விதத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் அந்த 30 ஆம் எண் தீர்மானம் கூறியது. ஆனால் இரண்டு நாள் கழித்து இலங்கையில் எந்த வெளிநாட்டு நீதிபதியையும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆணவத்தோடு அறிவித்தார்.

12 மாதத்தில் மனித உரிமை ஆணையர் இலங்கை குறித்து சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை மேலும் 6 மாதம் தள்ளிப் போட்டது. 18 மாதங்களுக்குப் பின்னர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து இனக்கொலை செய்த சிங்கள அரசுக்கு ஆதரவாக தீர்மானம் எண் 34 நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா, இங்கிலாந்து, மாசிடோனியா, மாண்டிநீரோஆகிய நாடுகள் முன்மொழிந்ததை இலங்கை அரசும் சேர்ந்து ஏற்று முன்மொழிந்தது. 36 நாடுகள் அத்தீர்மானத்துக்கு உடன்பட்டு முன்மொழிந்ததால், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேற்றப்பட்டது.

கொலைகாரனையே நீதிபதியாக்கி நீதியை அழித்த இந்தச் செயல் மனித உரிமைக் கவுன்சில் வரலாற்றிலேயே இதுவரை நடைபெறாத அக்கிரமம் ஆகும்.

கானா நாடு மட்டும் பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்று கருத்துக் கூறியது. எஸ்டோனியா நாடு கூறுகையில், ரோமானிய ஒப்பந்தச் சட்டத்தில் இலங்கை அரசு கையெழுத்திட வேண்டும் என்றது. (அந்நிலை ஏற்பட்டால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பிரச்சினையைக் கொண்டு செல்ல ஏதுவாகும்).

இந்த விவாதத்தில் பங்கேற்ற இலங்கையின் வெளியுறவுத்துணை அமைச்சர் ஹர்சா டி சில்வா “இலங்கை அரசு நல்லிணக்கத்தையும், நீதியையும் ஊக்குவித்து, இலங்கைக் குடிமக்கள் அனைவருக்கும் வளத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதை புரிந்துகொண்டு அனைத்து நாடுகளும் தரும் ஆதரவுக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் அரசு மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும், தரும் ஆதரவுக்கும் நன்றி கூறுகிறோம்” என்று அப்பட்டமான பொய்மூட்டையை அவிழ்த்துவிட்டார்.