ஞாயிறு, 21 மே, 2023

எதற்கும் பயன்படாதவன்

 எதற்கும் பயன்படாதவன்







கல்லாலயமாம் தேவருமாம், கழுதை கசடர் பொதி சுமக்கும்,
கடாவோ உழுது பயிரிடற்காம், காட்டம் பன்றிக்கிரையாகும்,
புல்லேறு ஈசர் வாகனமாம் பொதியுஞ்சுமக்கும், பிணமதுவும்
பூசிமுடித்து மறையோர்க்கும் பொருளையீந்து புகழெய்தும்,
மல்லார் குட்டிச்சுவர் தானும் மறைவா(ம்) மாடுதேய்த்திடற்காம்,
மதியாத் துடைப்பம் தினந்தோறு(ம்) மாடகூடங்களை விளக்கும்,
அல்லார் உலுத்தன் எதற்குதவும்? அவனுக்கிணை இங்கெதுவுமிலை, அவனைக்குறித்துக் கூறுமிடத்தவனுக்கவனே சரிதானே.

கல்லானது ஆலயம் கட்டப் பயன்படும், தெய்வச் சிலைகளையும் செய்யலாம்; கழுதை பொதி சுமக்கப் பயன்படும்; எருமைக்கடா உழுது பயிரிடப் பயன்படும்; மலமும் பன்றிக்கு உணவாகும். எருது ஈஸ்வரனுக்கு வாகனமாகும், பொதி சுமக்கப் பயன்படும்; செத்த பிணமும்கூட சந்தனம் முதலியவை பூசி மலர்சூடி அந்தணருக்கு பொருளை தன்பொருட்டு தானமாகக் கொடுத்து (கொடுக்கச் செய்து) புகழ் எய்தும்; வலிமையுடைய குட்டிச் சுவரும் மறைவிடமாகும், மாடு முதுகு தேய்த்துத் தினவு தீர்க்க உதவியாகும்; உயர்வாக மதிக்கப்படாத துடைப்பமும் நாள்தோறும் வீடுவாசல் கூட்டப் பயன்படும்; ஆனால் மனதில் இருள் பொருந்திய லோபகுணமுடையவன் (உலுத்தன், லோபி, கருமி, கஞ்சன் = பொருளைத் தானும் அனுபவிக்காமல் மற்றவருக்கும் கொடுக்காமல் பதுக்கி வைத்திருப்பவன்) எந்தக் காரியத்திற்கு உபயோகமாவான்? (எதற்கும் உபயோகப் படமாட்டான்.) அந்தக் கஞ்சனுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் எதுவும் இணை இல்லை. அவனுக்கு அவனே சமானமாவான்.