ஞாயிறு, 5 மார்ச், 2017

இலங்கைத் தமிழர்களுக்கு இதுதான் தேவை!- அரசை அதிர வைத்த ஐ.நா தூதுவர்


இலங்கைத் தமிழர்களுக்கு இதுதான் தேவை!- அரசை அதிர வைத்த ஐ.நா தூதுவர்


இலங்கையில் கடந்த பத்து நாட்களாக சுற்றுப் பயணத்தில் இருக்கிறார் ஐ.நா சிறப்பு தூதுவர் ரீட்டா ஐசக் நாடியா.
இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கான அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை உருவாக்க வேண்டும் என அதிர வைக்கிறார்.
ஐ.நா மனித உரிமை அமைப்பின் உத்தரவின் பேரில், கடந்த 10-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ரீட்டா.
விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய கடைசிக்கட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசி வருகிறார்.
அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்தும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீர்வு குறித்தும் ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்த ஆய்வு அறிக்கையை ஐ.நா சபையின் பார்வைக்கு வைக்க இருக்கிறார்.
அவர் தன்னுடைய பேட்டியில்,
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சமஸ்டி அமைப்பில் உரிய அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரங்கள் நிரம்பிய சுயேட்சையான அமைப்பை, சிறுபான்மை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் பேசப்படுகின்றன. பிற மொழி பேசுபவர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
இராணுவம் ஆக்கிரமித்த தமிழர்களின் நிலங்களில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து ஐ.நா மன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என உறுதியளித்திருக்கிறார் ரீட்டா ஐசக் நாடியா.
இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த வழக்கறிஞரும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
ஐ.நா சிறப்பு தூதுவரின் கருத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய காரியங்கள் சில உள்ளன.
இலங்கையில் நடந்த இன அழிப்புப் போருக்கு, நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது அயலக பொறிமுறை விசாரணையாக இருக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
போரின் போது கைப்பற்றப்பட்ட தமிழர்களின் நிலங்கள் அனைத்தும், அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
அங்கு மீன்பிடி தொழில் என்பது மிக முக்கியமானது. ஆனால், மீன்பிடி அதிகாரங்கள் எதுவும் மாகாண சபையிடம் இல்லை. அந்த அதிகாரங்களை மாகாண அரசிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகாரமில்லாத சபைகள் இருக்கின்றன. அங்கு இடைக்கால அதிகாரங்கள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும்.
உள்துறை, காவல்துறை, நில நிர்வாகம் மற்றும் நில வருவாய் ஆகியவற்றுக்கான அதிகாரங்களை மாகாண கவுன்சிலிடம் வழங்க வேண்டும்.
இதற்கான பணிகளில் குறைந்த பட்சமாவது இலங்கை அரசு ஈடுபட வேண்டும் என விரும்புகிறோம்.
தற்போது ரணில் தலைமையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சமஸ்டி அமைப்பு இல்லை, இனி ஒற்றை ஆட்சிமுறைதான். எந்த அதிகாரங்களும் பகிர்ந்து அளிக்க முடியாது' என இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
அப்படியொரு அரசியல் சாசனம் வகுக்கப்பட்டால், அது ஈழத் தமிழர்களின் எதிர்காலத்திற்கே கேடாய் முடியும்.
ஐ.நா சிறப்பு தூதுவரின் அறிக்கையில் இதுகுறித்த அபாயம் எழுப்பப்படும் என்றே நம்புகிறோம் என்றார் ஆதங்கத்தோடு.