இந்து மதத்தில் கர்மா என்ற சொல் மிகப் பிரபலம். நமது பேச்சு முதல் செயல் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எதிர்வினை அல்லது கர்மா உண்டு. அது என்னவென்று பின்வரும் கதையின் மூலமாகப் பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில், அரசன் ஒருவன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.
அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.
கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்ரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது? கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது; அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.
'சரி தன் எஜமானான எமதர்மனிடமே கேட்கலாம்,' என்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். இதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், காலம் வருமவரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தினான்.
அதற்கான நாளும் வந்தது. சில அந்தணர்கள் உதவி கேட்டு, அந்த அரசனைக் காணச் சென்றார்கள். அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.
அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் “ ஒரு விஷயம். சற்று எச்சரிக்கையாக இருங்கள். இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்” என்று கூறினாள்.
இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும், சித்ரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்தப் பெண்மணிக்கே என முடிவு செய்தான்.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும். பழி சொன்னதற்காக; நடந்த எதையுமே உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்தும் வந்து சேரும்.
எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.