ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி (English subtitle)

பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி (English subtitle) 
புத்தகத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றைய சிறுவர்களின் உலகம்

புத்தகத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றைய சிறுவர்களின் உலகம்


 நாவல் மரக் கிளையில் நுனிக்குச் செல்ல இன்னும் இரண்டு மூன்று அடிகளே உள்ளன. எப்படியாவது அந்த இரண்டு மூன்று அடிகளை வெற்றிகொள்ள வேண்டும். அப்படி நடக்காவிட்டால் கிளை நு னியில் இருக்கும் பழுத்த நாவற் பழங்களின் சுவையை அறியமுடியாது. அதனால் இரையை அடைய செல்ல நகரும் பாம்பைப்போல நுனியை நோக்கித் தவழ்ந்தேன்.
நாவல் பழங்களைப் பறித்துக்கொண்டேன். எவரெஸ்ட் மலையில் ஏறியதைப் போன்ற சந்தோஷத்துடன் கீழே குதித்த நான் நாவல் பழங்களை மரத்தடியில் வைத்தேன். ஒரு பிடி பழங்களை வாயில் போட்டு வாயை நிறமாக்கிககொண்டேன். அதன் பின் நாவல் மரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஏறி வானத்தை தொட முயற்சி செய்தேன். அதேவேளை ஓரிருவர் பாடசாலை கேட் வழியாக உள்ளே வருவதைக் கண்டதும் எனது வேகத்தை அதிகரித்தேன். ஏனென்றால் நான் அவர்களுடன் ஊஞ்சலை பகிர்ந்துகொள்ள வேண்டும். எஞ்சிய நாவல் பழங்கள் வரும் நண்பர், நண்பிகளுக்கே. முதலில் வருபவர்கள் பழத்தின் சுவையை அறியமுடியும். கூட்டம அதிகமாக அதிகமாக எங்களிடமிருந்து ஊஞ்சல் தூரமாகிவிடும். அதன் பின் வருவது எல்லே விளையாட்டாகும். அது நாங்கள் விரும்பும் விளையாட்டாகும். சிலர் பாடசாலையின் முன்னால் உள்ள மண்பாதையில் சைக்கிள் ஓட்டினார்கள். ஒரு சிலர் மரமுந்திரிகை மரத்தில் ஏறி இருந்தார்கள்.
கிளிகளோடு போட்டி போட்டுக்கொண்டு பழங்களை சாப்பிட்டார்கள். ஒரு சிலர் மரத்தின் மேல் ப்ரூம் ப்ரும்... பீப்பீப் என்னும் ஓசையுடன் வாகனம் ஓட்டினார்கள். நாம் பாடசாலை முடிந்து எமது மாலைப் பொழுதை கழித்தது அவ்வாறுதான். பாடசாலைத் தோட்டத்தை அந்நியிருந்த பெரியோர்கள் எம்மீது எமது பாதுகாப்புக்காக அவதானத்துடன் இருந்தார்கள்.
பாடசாலையை சுற்றி மரத்தூண்கள் அமைக்கப்பட்டு முள் வேலி அமைந்திருந்தார்கள். அதுவும் சில இடங்களில் உடைந்திருந்தது. பாடசாலைக்கு ஒருபோதும் கள்வர்கள் வந்ததில்லை.
இருட்டுவதற்கு முன்னர் வீட்டுக்குச் சென்ற நாங்கள் மறு நாளைக்கான வீட்டுப் பாடங்களை முடித்துக்கொண்டு இரவு உணவு அருந்துவோம். பின்னர் நேர காலத்தோடு நாம் நித்திரைக்குச் செல்வோம். அம்மாவின் கதைகளில் மூழ்கி, இனிமையான கனவுகளாக கண்டு நித்திரை கொள்வோம். தேவதைகளும், இளவரசர்களும், இளவரசிகளும் எங்கள் கனவில் புதிய கதைகளை உருவாக்கி நடிப்பார்கள். காட்டூன் மற்றும் சில டெலி நாடகங்களை பார்க்கும் தற்போதைய குழந்தைகளைப் போன்று நாங்கள் கனவில் பயப்படுவதில்லை. அதற்கு பதில் கனவில் நாம் சிரிப்போம். அது எங்கள் குழந்தைப் பருவம். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அவ்வாறு தான் வாழ்ந்தோம். அன்றும் ரியூஷன் வகுப்புகள் இல்லாமலில்லை.
மாணவர்கள் உயர்கல்வி கற்கும்போதே ரியூஷன் வகுப்புகளுக்குச் செல்வார்கள். அனைவரும் செல்லமாட்டார்கள். அவ்வாறு செல்லாதவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்றார்கள். அவர்கள் கற்ற, அறிவாளர்கள் போன்று மனிதர்களாகவும் வாழ்ந்தார்கள். இன்று பிள்ளைகளின் குழந்தைப் பருவத்துக்கு என்ன நடந்துள்ளது? முதலாம் வகுப்புக்கு செல்வதற்கு முன்னரே ரியூஷன் வகுப்புக்குச் செல்ல வேண்டும். முன்பள்ளி காலத்திலேயெ பெற்றோர் பிள்ளைகளை ரியூஷன் அனுப்புகின்றார்கள். இன்று சில முன்பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் மட்டத்திலுள்ளன. அது ஏனைய பள்ளிகளுடன் போட்டி போடுவதற்காகும். அதன் துரதிஷ்டமான நிலைமை என்னவென்றால் முன்பள்ளி மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியுள்ளது. அவர்கள் நூற்றுக்கு நூறு புள்ளிகள் எடுக்காவிட்டால் அவர்கள் மனதுக்கு சரியில்லை. ஏனைய பிள்ளைகளின் புள்ளிகளுடன் ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் ஏசுகின்றார்கள். சில வேளைகளில் பைத்தியக்காரர்கள் போன்று நடந்துகொள்கின்றார்கள். சில பெற்றோர்கள் ஒரே பாடத்துக்கு இரண்டு இடங்களுக்கு ரியூஷன் அனுப்புகின்றார்கள்.
ஒரு நாள் ஒரு தாய் முன்பள்ளியில் இருந்து மிகவும் கோபமாக வெளியே வந்தார். “பாருங்கள் நான் பிள்ளையை வகுப்புக்கும் அனுப்புகின்றேன்.
ஆனாலும் கணித பாடத்துக்கு குறைந்த புள்ளியே எடுத்திருக்கின்றான் என்று அருகிலிருந்த இன்னொரு தாயாரிடம் கூறிக்கொண்டு பிள்ளையை இழுத்துச் சென்றார். பிள்ளை அம்மா ஐஸ்கிறீம் என்று ஜஸ்கிறீம் கடையைப் பார்த்துக் கேட்டது. அதற்கு அவர் ‘உனக்கு ஐஸ்கிறீம் மட்டும் தான் குறையாகவுள்ளது” என்று இழுத்துச் சென்றார். இந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என எண்ணிய எனக்கு மிகவும் கவனலையாக இருந்தது.
பெற்றோர் செய்யும் இன்னுமொரு தவறு தங்களின் துன்பம் நிறைந்த கடந்த காலத்தைப் பற்றி ஆவேசமாக பிள்ளைகள் முன்னால் கூறுவதாகும். நாம் இவ்வாறு தான் சாப்பிட்டோம். இவ்வாறுதான் உடுத்தோம். நாம் இவ்வாறுதான் கஷ்டப்பட்டோம். உங்களுக்கு எல்லாரும் கைக்கு காலுக்கு அருகில் கிடைக்கின்றது. ஏன் உங்களால் படிக்க முடியாது? நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உங்களை படிப்பிக்கின்றோம் என்று அநேகமான பெற்றோர்கள் கூறுகின்றார்கள். இதனால் ஏதும் நன்மை ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்தால் இல்லையென்றே கூறவேண்டும்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியுள்ள மன அழுத்தத்தைப் பற்றி கூறத்தேவையில்லை. சில பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள பாடசாலைக்கு செல்வது காலையில் ஆறரை மணிக்காகும். வீட்டுக்கு வருவது மாலை ஆறரைக்கு. பாடசாலையிலும் ஒரே பாடசாலையிலுள்ள ஐந்தாம் தரம் வகுப்புகளுக்கிடையேயும் பெரும் போட்டியே நிகழ்கின்றது.
அதே போல் வார இறுதி நாட்களிலும் பிள்ளைகளுக்கு ரியூஷன் வகுப்புகள் நடைபெறும். இது தான் அவர்களின வாழ்க்கையாகும். எனக்கு தெரிந்த இரண்டு மாணவர்கள் கடந்த வருடம் சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளார்கள். இறுதி மாதங்களில் அவர்கள் வீட்டிற்கு இரவு பண்ணிரண்டு மணிக்கே வந்தாரகள். அவர்கள் பாடம் படிக்கவில்லை. ரியூஷனுக்கே சென்றார்கள்.
நான் அறிந்த ஒருவரின் மகள் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினான்.
அவனுக்கு பெற்றோர் வைத்த இலக்கு கொழும்பு ரோயல் கல்லூரியாகும். அவன் இரவு பகலாக அந்த இலக்ைக அடைய போராடினான். புலமைப் பரிசில் பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் கத்தியை எடுத்து தோட்டத்திற்குச் சென்று பூச்செடிகள் அனைத்தையும் வெட்டினான். தாய் எதுவும் கூறவில்லை. இறுதியில் அவன் பரீட்சையில் வெற்றி பெற்றிருந்தான். ஆனால் அவன் ரோயல் கல்லுரி இலக்கை அடையவில்லை. நல்லவேளை அவனது பெற்றோர்கள் தமது தவறை உணர்ந்து அவனைப் பாராட்டி பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார்கள்.
இன்னொரு தாய் கதவைப் பூட்டிக்கொண்டு தனது முன்பள்ளி செல்லும் பிள்ளையை அடித்ததற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார்.
வீட்டு வேலை செய்வதில்லை. இவர்கள் கல்வி கற்காவிட்டால் சமூகத்தில் துன்பப்படவேண்டி நேரிடும். அதைவிட சிறந்தது என்னிடம் அடி வாங்கி திருந்துவது. ஏனென்றால் நான் தாய்தானே என்று கூறினார்.
பெரியவர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பிள்ளைகளின் உலகம் அவர்களை விட்டு விரைவாக விலகிப் போய்க்கொண்டிருக்கின்றது. வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், பூக்கள், வண்டுகள் என்பவற்றைப் பார்த்துக்கூட அவர்களுக்கு நேரமில்லை.
பூக்களின் நறுமணத்தை உணர, மரத்திலிருந்து கனியை பறித்து உண்ண, கடற்கரை மணலில் ஓடி ஆடி விளையாட, பட்டத்தின் பின்னால் ஓட அவர்களுக்கு நேரமில்லை.
எனக்கு இந்த நேரம் ஞாபகம் வருவது சிறந்த எழுத்தாளரான மார்டின் விக்ரமசிங்கவின் இளமைக் காலமே.
‘அபே கம’ என்னும் நூலில் அவர் தமது குழந்தைப் பருவம் பற்றி மிகவும், மகிழ்ச்சியுடன் நினைவு கூருகின்றார். தரம் ஐந்துவரையும் பாடசாலைக் கல்வி கற்ற அவரால் பின்னர் எழுதப்பட்ட நூல்கள் இன்னும் பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. “அபே கம” என்னும் தனது நூலில் தனது குழந்தைப் பருவம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.
“நான் மாத்திரமல்ல சிறு பிள்ளைகளில் நூற்றுக்கு 90 பேர் அழகானவை மீது ஆசைப்படுகின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.
சிறு பராயத்தில் சிப்பி ஓடுகள் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். அழகானவற்றை காணும் ஆசையின் பலனே அதுவென எண்ணுகின்றேன்.
அழகானதை ரசிப்பது மனதுக்கு இனிய உணவாகும். பலவிதமான வடிவங்களிலான சிப்பி ஓடுகள் நிறைந்த கடற்கரை சிறு பிள்ளைகளுக்கு அபூர்வமான பொருட்கள் நிறைந்த அருங்கட்சியகமாகும்.
இந்த சூழலின் அழகை ரசிக்க அன்று போல் இன்று பிள்ளைகளுக்கு நேரம் இருக்குமா என நானறியேன்.
ஆனால் நிச்சயமாக அவர்களும் அதனை ரசிக்க விரும்புவார்கள் என நான் அறிவேன். எமது பிள்ளைகள பரீட்சையில் சித்தி அடைகின்றார்கள். ஆனால் வாழ்க்கை ஒரே இடத்திலேயே உள்ளது.
அதில் அநேகமான வெற்றிடங்களை ஏற்படுத்தியது யார் என்னும் கேள்விக்கு பெற்றோர்களிடமோ, கல்வி அதிகாரிகளிடமோ பதிவிருக்கும் என நான் எண்ணவில்லை. ஆனால் நீண்டகாலம் எடுக்காமல் பிள்ளைகள், பெற்றோர்கள் அறியாத நிலைமைக்கு தள்ளப்பட்டன. அதன் குற்றவாளிகள் பிள்ளைகள் அல்லவென்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
 சுமேதா நவரத்ன
தமிழில்: வீ.ஆர்.வயலட் நன்றி தினகரன்.