உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கான வடிவத்தை தயாரிக்க முயற்சிக்கும் அரசாங்கம்
ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்க தீர்மானம்?
(ரொபட் அன்டனி)
(ரொபட் அன்டனி)
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நஷ்டஈடு வழங்கும் அலுவலகம் ஆகியவற்றுக்கான வடிவங்களை தயாரிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது 34 ஆவது கூட்டத் தொடரில் அரசாங்கம் எவ்வாறு ஜெனிவா பிரேரணையை நிறைவேற்றியது என்பது குறித்த எழுத்து மூல அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் முன்வைக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நஷ்டஈடு வழங்கும் அலுவலகம் ஆகியவற்றுக்கான வடிவங்களை தயாரிக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றது. குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களையும் அமைப்பது தொடர்பில் நல்லிணக்கப் பொறிமுறை குறித்த செயலணி முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. இதற்கான பணிகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டவர்களு க்கு நீதி வழங்குவதற்காக எவ்வாறான நீதிமன்றக் கட்டமைப்பை முன்னெடுப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் அரசாங்கம் இந்த அமைப்புக்களை நிறுவுவதற்கு முயற்சிக்கின்றது.
இது தொடர்பில் அண்மையில் சுவீடனுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்களின் ஆலோ சனைகளைப் பெறுவதற்கு அமைக்கப்பட்ட செயலணி தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதுடன் அதற்கு அமைவாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நஷ்டஈடு வழங்கும் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.