செவ்வாய், 22 அக்டோபர், 2019

குற்றமிழைத்தோரை விடுதலை செய்வது எவ்வகையில் நியாயம்?

குற்றமிழைத்தோரை விடுதலை செய்வது எவ்வகையில் நியாயம்?


ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழியானது நீதிக்குப்  புறம்பான விடயம். இது பற்றி இலங்கையின் பிரபல சட்டவல்லுநர்கள் கூறுகின்ற கருத்துகள்...
 ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள்  யுத்த வெற்றியாளர்களா? குற்றமிழைக்கும்  இராணுவத்தினரைக் காப்பாற்ற ஒருவர் உள்ளார் என்பது நீதிக்கும் புறம்பான ஒரு விடயம் 
தண்டனை பெற்றுள்ள எந்தவொரு  குற்றவாளியையும் விடுதலை செய்யும்  அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு உள்ள ஒரே வழி மேன்முறையிடும் நடைமுறை மட்டுமேயாகும். அதேநேரம் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க விரும்பினால் அதற்காக உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்  என்கிறார் ஜயம்பதி விக்கிரமரத்ன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, அவரது முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போது சிறையில் உள்ள யுத்த வெற்றியாளர்களை விடுதலை செய்வதாகக் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த யுத்த வெற்றியாளர்கள் யார் என்று தெரியவந்த போது அது சில சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை தெரிய வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். கோட்டாபயவின் கைகளில் அளவுக்கு மீறிய அதிகாரம் இருந்தது. அத்துடன் மொத்த இராணுவமும் அவரது சொற்படியே இயங்கியது. கோட்டாபயவின் உத்தரவின் பேரில் இராணுவ அதிகாரிகள் இயங்கினர். பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகள் சிலவற்றில் குற்றவாளியாகக் காணப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யப் போவதாகத்தான் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு முயற்சியும் நிறைவேற்று அதிகாரத்தின் மீறல்களையே புலப்படுத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகம் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தனது முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவரது பேச்சின் போது வழங்கிய வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள 'யுத்த ஹீரோக்கள்' யார் என்று பார்ப்போம்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்தவர்கள், ஊடகவியலாளர் கீத் நோயரை கடத்திச் சென்று சித்திரவதைக்குட்படுத்தியவர்கள், கேலிச்சித்திர வரைகலைஞர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்தவர்களாக கருதப்படுபவர்கள் ஆகியவர்களே அவர்களாவர்.
இவ்வாறான செயல்களை மேற்கொண்டவர்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் மற்றும் சிலருக்கு எதிராக தேவையான சாட்சியங்களை சி.ஐ.டியினர் சேகரித்துள்ள நிலையில், தொடர்ந்தும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்படி வாக்குறுதி தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட அரசியலமைப்பு சட்டத்தரணியான ஜயம்பதி விக்கிரமரட்ன இதுபற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
'தண்டனை பெற்றுள்ள எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு உள்ள ஒரே வழி மேன்முறையிடும் நடைமுறை மட்டுமேயாகும். அதேநேரம் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க விரும்பினால் அதற்காக உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அதேநேரம் அவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படாத நிலையில் அவர்களுக்கு பிணை வழங்குமாறு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் கோட்டாபய ராஜபக்ஷ அவரது வாக்குறுதியை எப்படி நிறைவேற்றப் போகிறார்?
2015க்கு முன்னர் செய்ததைப் போல பொலிஸாரை அழுத்தத்துக்கு உட்படுத்தல், சட்ட மாஅதிபர் திணைக்களத்தை பிணை வழங்குவதற்கு இணங்கிப் போகும் வகையில் அழுத்தத்துக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் மட்டுமே அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்' இவ்வாறு ஜயம்பதி விக்கிரமரட்ன கூறுகிறார்.
2015க்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது அவரது சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஒரு தசாப்தத்துக்கு மேலாக ஜெனிபர் வீரசிங்க உட்பட மற்றும் பல தாய்மார் தமது பிள்ளைகளைத் தேடி வருகின்றனர். ஜெனிபரின் மகனான திலான் ஜமால்தீன் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் கடற்படையினர் சிலரால் கப்பம் கோரி கடத்தப்பட்டனர். அது 2008/2009 காலப் பகுதியில் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சிரேஷ்ட கடற்படையினர் சிலர் தொடர்புபட்டிருந்ததாகத் தெரியவந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் கடற்படைத் தளபதியான வசந்த கரண்ணாகொட. அண்மையில் அவர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரண்ணாகொட மீது கொலை மற்றும் கொலை செய்ய சதித் தீட்டியமை தொடர்பாக விரைவில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் சி. ஐ. டியினருக்கு அறிவித்திருந்த நிலையில், அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் பற்றிய தகவல் அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரண்ணாகொடவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் மறைத்து விட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திலான் ஜமால்தீன் உள்ளிட்ட 10 இளைஞர்களின் கடத்தல், சட்டவிரோத தடுத்து வைப்பு மற்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பற்றிய விவகாரத்தில் சந்தேக நபர்களும், சாட்சியம் அளித்தவர்களும் கடற்படையினர் என்பதால் இந்த வழக்கு அபூர்வமானதாக அமைகிறது.
இந்த வழக்கில் பல திருப்பங்கள் உள்ளன. சந்தேக நபர்கள் பிணையில் வெளியே உள்ளனர். உயர்மட்ட கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் சாட்சிகளின் பதவிகள் குறைக்கப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகள் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். வழக்கில் சாட்சியமளித்த ஒரு கடற்படைவீரர் அவரது சிரேஷ்ட அதிகாரியான தற்போதைய பாதுகாப்பு ஆளணி பிரதானி ரவீந்தர விஜேகுணரட்னவினால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து தலைமறைவான நிலையில் இருக்கிறார்.
மேற்படி இளைஞர்களைக் கடத்திய கடற்படைக் கும்பலின் தலைவனை பொலிஸாரிடம் சிக்காமல் ரவீந்திர விஜேகுணரட்ன பாதுகாத்ததாக மேற்படி கடற்படை வீரர் சாட்சியமளித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் யுத்த ஹீரோக்களை விடுதலை செய்யும் வாக்குறுதியானது ஜெனிபர் வீரசிங்கவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவரது கணவரே ஒரு இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகனை கடத்திச் சென்றவர்கள் 'யுத்த ஹீரோக்கள்' என்று குறிப்பிடப்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“கோட்டாபய ராஜபக்ஷவின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அவர் நீதிமன்றங்கள் தொடர்பாக எந்தப் பயமும் இல்லாதவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. மறுவார்த்தைகளில் கூறுவதானால் இராணுவம் எவரையும் கடத்தலாம், கொல்லலாம் மற்றும் எதனையும் செய்யலாம். அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற ஒருவர் இருக்கிறார்” என்பதை இது காட்டுகிறது என்று ஜயம்பதி விக்கிரமரட்ன மேலும் கூறுகிறார்.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரின் சார்பாக தோன்றிய சட்டத்தரணி சேனக பெரேரா கூறும் கருத்தையும் கேட்டுப் பார்ப்போம்.
'நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள ஒருவர் இவ்வாறு நீதித்துறையின் செயற்பாடுகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறுவது மிகவும் ஆபத்தானது. அவர் வெற்றி பெற்றால் நாட்டை எப்படி ஆளப் போகிறார் என்பதற்கான அறிகுறியே அவரது மேற்படி அறிக்கை என்கிறார் சேனக பெரேரா.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இராணுவம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து 27 பேரை படுகொலை செய்தது. அதே முறை மீண்டும் தொடரப் போகின்றது என்பதைத்தான் கோட்டாபயவின் மேற்படி அறிக்கை கூறுகிறது என்று சேனக பெரேரா குறிப்பிடுகிறார்.
சந்தேக நபர் ஒருவர் மீது தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டு அடிப்படையானதா அல்லது அடிப்படையற்றதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று சிரேஷ்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பில் வாதாடும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், நபர் ஒருவர் மீது தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டு அடிப்படையானதா அல்லது அடிப்படையற்றதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று சிரேஷ்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
'அதேநேரம் சந்தேக நபர்களாக உள்ள படையினரின் எந்த குற்றங்களை கோட்டாபய அடிப்படையற்றவை என்று கூறுகிறார் என்பது சரியாகத் தெரியவில்லை. அந்தக் குற்றங்கள் அடிப்படையற்றவையா என்பதை நீதிமன்றங்கள்தான் கூற வேண்டும். அவை அடிப்படையற்றவை என்று கருதினால் அதனை சவாலுக்குட்படுத்தி நீதமன்ற நடைமுறையை பின்பற்றி மேன்முறையீடு செய்யலாம். ஆனால் அந்த விசாரணைகளில் ஜனாதிபதியோ அல்லது அரசியல்வாதிகளோ இடையீடு செய்ய முடியாது' என்று பெயர் சொல்ல விரும்பாத சட்டத்தரணியொருவர் கூறுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனவர் பிரகீத் எக்னெலிகொட. இவர் ஒரு கார்ட்டூன் வரைகலைஞர். 2010 ஜனவரியில் இவர் கடத்திச் செல்லப்பட்டார். 'அவர் எங்கே இருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்' என்று அதிகாரிகளிடம் கடந்த 9 ஆண்டுகளாகக் கேட்டு வருபவர் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட.
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தேர்தலில் கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானால் தனது கணவரின் காணமற் போனமை தொடர்பான வழக்கு ரத்து செய்யப்படலாம் என்று சந்தியா எக்னெலிகொட கூறுகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ அவரது முதலாவது பிரசாரக் கூட்டத்தில் வெளியிட்ட மேற்படி கருத்து சிக்கலாகியுள்ள நிலையில், கோட்டாபாய கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு சார்பாகப் பேசுகிறார் கேஹெலிய ரம்புக்வெல்ல.
“விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்... குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யுங்கள்... தண்டனையை விதியுங்கள்... அவர்ளைப் பற்றி நீதிமன்றங்களே தீர்மானிக்கட்டும்” என்றுதான் கோட்டாபாய கூறினார். ஊடகங்கள் அவரது பேச்சை திரிபுபடுத்தி விட்டதாக கெஹேலிய ரம்புக்வெல்ல கூறுகிறார்.
மேற்படி குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் உறுதிப்படுத்துமா என்று கேட்கப்பட்ட போது, மேலே கூறப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் யுத்த காலத்தில் இடம்பெற்றவை. உள்நாட்டு யுத்தமொன்று இடம்பெறும் போது புனித யுத்தம் இடம்பெறாது. 2010 இல் யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அது போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றதா? என்று பதில் கேள்வி எழுப்புகிறார் கேஹெலிய ரம்புக்வெல்ல.
ஆனால் பிரகீத் எக்னெலிகொட காணாமற் போனது 2010 ஜனவரி 24ம் திகதியாகும். இது யுத்தம் முடிவுற்ற 7 மாதங்களின் பின்னர் இடம்பெற்ற சம்பவமாகும்.

தமிழுக்கு முன்னுரிமை வழங்கியதாக சீறும் இனவாதக் குழுக்கள்!



இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் கடந்த 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.உள்ளக விமான சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதற் கட்டமாகச் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்' என்ற பெயர்ப் பலகை உள்ளிட்ட விமான நிலையத்திலுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவதாகத் தமிழ்மொழிக்கும், மூன்றாவதாக ஆங்கில மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கமான விடயமாகும்.
இந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்காது தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கியமை பிழையானது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தரப்புக்கு சமூக வலைத்தள பதிவாளர்கள் சிலர் பதிலடி வழங்கியுள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் மொழி தொடர்பான சரத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கான நியாயத்தை அவர்கள் தெளிவூட்டியுள்ளனர்.
'சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும்.
வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ்மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத்தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத்தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் என ஜனாதிபதி பணிக்கலாம்' என அரசியலமைப்பின் மொழி சார் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயத்தை அரசியலமைப்பின் சிங்களப் பிரதியை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்புக்கு அமைய சிங்கள மொழி அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என இலங்கை அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணக் கூடியதாக உள்ளது.
அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், இலங்கை தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் சில வலைத்தள பதிவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக மன்னார், காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கி பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சீன மற்றும் அரபு மொழிகள் நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது சில தரப்பினர் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (BBC)

ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி | Virakesari.lk

ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி | Virakesari.lk: ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி