வெள்ளி, 5 மே, 2017

பசுமை நிறைந்த நினைவுகளே....... பறந்து சென்றதே - ஒரு பறவை

பசுமை நிறைந்த நினைவுகளே.......
பறந்து சென்றதே - ஒரு பறவை.

செல்வி.சற்சொரூபவதி நாதன்-B.h. Abdul Hameed
இலங்கை வானொலி வரலாற்றில் 'சொற்சொரூபவதியாய்' போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு 'மூத்த' சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது.
'யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்' அவருக்கு "சகலகலா வித்தகி" எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்குப் பொருத்தமாக, வானொலித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்தி மிளிர்ந்தவர்.
வானொலிக் கலைஞராக, அறிவிப்பாளராக,செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, வானொலி எழுத்தாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலித்துறைக்கான 'பயிற்சிப் பட்டறைகள்' பலவற்றின் நெறியாளராக, பல்கலைக் கழகத்தில் 'ஊடகத்துறைக்கான' பகுதிநேர விரிவுரையாளராக, என அவரது பங்களிப்புகள் பரந்து விரிந்தவை.
சிறிது காலத்திற்கு முன்.........
சென்னைப் பல்கலைக் கழகத்தில், 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு நான் சென்று, கேட்போர் கூடத்துக்குச் செல்லும் மாடிப்படிக்கட்டுகளில் கால்வைத்தபோது, மேல்தளத்துச் சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய படம் ஒன்று வரவேற்றது. அண்ணார்ந்து பார்த்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதலாவது 'பட்டதாரி' C.Y. தாமோதரம் பிள்ளை என, எங்கள் மண்ணின் மைந்தரது பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெருமையால் நெஞ்சமும் நிமிர்ந்தது. கூடவே, இன்னும் யார் யாரெல்லாம் நம் மண்ணிலிருந்து இங்குவந்து கல்விகற்று பட்டம் பெற்றிருப்பார்கள்? என அறிய ஆவல் கொண்டு பார்த்தபொழுது, அவ்வரிசையில் எம் வானொலிக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'சற்சொரூபவதி நாதன்' என்ற பெயரும் இருக்கக் கண்டு இருமடங்குப் பெருமிதம் கொண்டேன்.
தன் 21 வது வயதிலேயே, 'ஜவஹர்லால் நேரு விருது' பெற்றவர் என்ற செய்தியும் அவர் பெருமையினைப் பறைசாற்றியது.
நாடு திரும்பி, கொழும்பு 'பௌத்த மகளிர் கல்லூரியில்' விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் வானொலி கலைஞராக, பங்களிப்பினை வழங்கிவந்தவர், 1965 ம் ஆண்டிலே ஒரு அறிவிப்பாளராகத் தெரிவாகி நிரந்தரமாகவே வானொலியோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டார்.
அவர் அறிவிப்பாளராக இணைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான், நாம் அறிவிப்பாளர்களாக இணைந்தோம். விடலைப்பருவத்தைத் தாண்டிய இளையவர்களான, எம்மைத், தம் வயதொத்தவராக மதித்து, நேசமுடன் பழகியது அவரது பெருந்தன்மை. அறிவிப்பாளரானாலும் வானொலிக்கலைஞராகவும் தன் பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்கிவந்த அவருடன், நம் வானொலி நாடகத் தந்தை திரு. 'சானா' அவர்களது நெறியாழ்கையில் இணைந்து நடித்த நாடகங்கள். திரு. ராஜசுந்தரம் அவர்களது தயாரிப்பில் பங்கெடுத்த 'உரைச்சித்திரங்கள் யாவும், இன்னும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருக்கின்றன.
தமிழ் வானொலி வரலாற்றில் முதல் பெண் அறிவிப்பாளரான, திருமதி. செந்திமணி மயில்வாகனன் அவர்களுக்குப் பின், 'செய்தி' வாசிப்பில் தனி முத்திரை பதித்தவர் சகோதரி சற்சொரூபவதியே என்றால், அது மிகையாகாது. அவரது ஆங்கிலப் புலமை, பின்னாளில் செய்தி ஆசிரியராகவும், எமது வானொலியிலும், ரூபவாஹினி தொலைக்காட்சியிலும், மிக நீண்டகாலம் பங்களிப்பினை வழங்கும் வாய்ப்பினை அவருக்கு உருவாக்கித் தந்தது.
இளைப்பாறிய பின்னரும் ஊடகத்துறையோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டு வானொலி, தொலைகாட்சி எனத் தன் முதுமைக்கும் சவால் விட்டு வாழ்ந்துவந்தவர். கொழும்பு பல்கலைக் கழகத்திலும் அவ்வப்போது 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவருக்கு விரிவுரைகள் ஆற்றிவந்தவர்.
அதுமட்டுமன்றி 'கொழும்பு தமிழ்ச்சங்கத்தின்' துணைத்தலைவர் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். 'பெண்ணியத்தின்' பெருமை பாடவும், மகளிர் மேம்பாட்டுக்காகவும் அயராது உழைத்தவர். சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் 'உண்டா' விருதினை ஒலிபரப்புத்துறைக்காக முதலில் பெற்றவர் எனது ஆசான், திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து 'உண்டா' விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சகோதரி சற்சொரூபவதியே.
சிறந்த ஒலிபரப்பாளருக்கான 'ஜனாபதி விருதினையும்' பெற்றவர்.
"பிறப்பவர் எல்லோருமே என்றோ... ஓர்நாள்
இறப்பதுவும் உறுதி" இது மாற்றவியலா விதி.
மூப்புடன் பிணியும் வாட்டிவைத்திட, தன் 80தாவது வயதில் இறப்பது என்பதை 'ஓர் பேரிழப்பு' என்ற வழக்கமான அனுதாபச் சொல்லோடு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிடாமல், தமிழ் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டினையும், தனது வழிகாட்டலில், 'விழுமியங்கள் பேணும் ஊடகவியலாளர்கள்' உருவாக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவருக்கு நன்றி கூறுவதும், அவரது ஆத்மா, நற்பேறு அடைய, நம் இதயங்களால் பிரார்த்தனை செய்வதுமே நம் கடமை என உணர்வோம்.
அவரை இழந்து துயருறும் இரத்த உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
.