மட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரையும் நாளை முதல் சேலை கட்டுமாறு மக்கள் வேண்டுகோள்!
எந்தவொரு வகையிலும் நான் பெரியவன் நீ சிறியவன் என்ற ஒரு பாகுபாடு இருக்கும் வரையில் வீடாக இருந்தாலும் சரி அது நாடாக இருந்தாலும் சரி சீரழிந்தே போகும் என்பது மட்டும் திண்ணம்.
நல்லிணக்க நாடு என்ற வகையில் சர்வதேச ரீதியில் இலங்கை நற்பெயரை பெற்றுக் கொள்ள மட்டும் முயன்றால் போதாது, அது நடைமுறையில் சாத்தியப்படவேண்டும், அப்போதே நாடும் சரி மக்களும் சரி நிம்மதி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு மதக் போக்காளர் கடும் போக்காளராக மாறினால் அதன் விளைவு எப்படி அமையும், என்பது எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
இன்று ஓர் பௌத்த பிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த போது, அவர் தமிழர்கள் மீதும் மக்கள் மத்தியில் மதிக்கத்தக்க அரசாங்க பதவியை வகிக்கும் கிராம சேவையாளர் ஒருவர் மீதும் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாக அமைந்தன.
மக்கள் வேவையாளரான ஒருவர் பொது மக்களின் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதற்கும், அதனை மற்றவர் வேடிக்கை பார்க்கும் நிலையும் ஏற்பட முக்கிய காரணம் அவர் தமிழர் என்பதாலேயே.
“கடந்த காலங்களில் புலியாக நீங்கள் ஆயுதம் ஏந்தி சிங்களவர்களை கொன்றீர்கள், புலித் தமிழர்களா உங்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்கின்றேன் இனியும் சிங்களவர்கள் மீது கை வைக்க நினைக்க வேண்டாம்.
மீறி கைவைத்தீர்கள் ஆயின் என்ன நடக்கும் என்பது தெரியாது, உங்களைப்பார்க்கும் போது உடம்பெல்லாம் பற்றி எரிகின்றது. ஒரு சிங்களவர் மீதாவது அதிகாரம் செய்ய நினைத்தால் தமிழர்களின் அதிகாரங்கள் இனி நிலைக்காது.........”
இவை பௌத்த மதப்பிக்குவான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள். இவற்றில் குறிப்பிட்டுள்ளவை சில மாத்திரமே, இன்னும் ஏராளமான வார்த்தைகள்... ஆனால் அவற்றை ஊடக நலம் கருதி எழுதப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அவருடைய வார்த்தைகளை கேட்டுவிட்டு இவர் எல்லாம் ஓர் பிக்குவா? உண்மையான பிக்கு இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியமை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
முடிந்து போன யுத்தத்தை மீண்டும் மீண்டும் மக்களிடையே பரப்புவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை. இவை முற்று முழுதாக தமிழர்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ள வேண்டும் என சகோதர இனத்தவர்களை தூண்டிவிடும் வார்த்தை பிரயோகங்களே என்பது வெளிப்படை.
அண்மையில் தமிழர்களுக்கு உரிமை சரி சமமாக கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகள் மிகப்பெரிய பிரளயமாக மாறி, கைது கோரிக்கைகளும், போராட்டங்களும் தென்னிலங்கையில் வலுப்பெற்றமை மறந்த விடயம் அல்ல.
ஆனால் இன்று ஒழுக்க விதிமுறைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாருக்கும், நீதிமன்றத்திற்கும் முன்னிலையில் பிக்குவின் வார்த்தை பிரயோகங்கள் வேடிக்கை பார்க்கப்பட்டதே தவிற கட்டுப்படுத்தப்பட வில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.
இங்கு அவர் சரி, இவர் பிழை என கூறப்படுவதனை விடவும், மதங்களே வாழ்க்கை என நினைக்கின்ற மக்கள் வாழ்கின்ற சூழலில் மதக் கருத்துகளை போதிக்க வேண்டிய ஒரு மதப்போதகர் அதுவும் அவர் வார்த்தைகளை மதிப்பு கொடுப்பதற்காக ஓர் கூட்டம் இருக்கின்றது, என்ற நிலையில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
ஒரு வித பதற்ற சூழலில் நாடு பயணித்து கொண்டு இருக்கும் வேளையில், மக்களை தூண்டி விடுவதற்காகவே இவ்வாறாக செயற்பாடுகளை செய்து வருபவர்களை அரசு தரப்பு வேடிக்கை பார்த்து வருகின்றமை மட்டும் வேடிக்கையான விடயம் தான்.
ஒரு தரப்பை தூண்டிவிட்டு மற்றுமோர் தரப்பிற்கு எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்து வரும்போது பாதிக்கப்படுவது மட்டும் முழு நாடும் என்பதே நிச்சயம்.
இதேவேளை தற்போதைய அரசியல் என்பது ஒன்று வடக்கு தமிழர்கள், மற்றொன்று சிங்கள பிக்குகள் இவர்களை அடிப்படையாகக் கொண்டே எண்ணெய் ஊற்றப்படுகின்றது. அத்தோடு ஆங்காங்கே விடுதலைப்புலிகளை தொட்டுப்பார்க்கவும் மறக்கவில்லை தென்னிலங்கை, என்பதனை அண்மைக்கால அரசியல் பாதையினை உற்று நோக்கினால் தெளிவாக தெரிந்து விடும்.
எவ்வாறாயினும் இனவாதம் முற்றாக நாட்டை விட்டு விரட்டப்பட்டு, விஷக்கிருமிகளை நசுக்காவிட்டால் அரசுக்கு அபிவிருத்தியும் நல்லிணக்கமும் நிறைந்த நாடு என சர்வதேசத்திற்கு நிறுவுவது மட்டும் எட்டாக்கனியாகவே அமையும்.
அதனை விடுத்து ஆட்சி மாற்றம், வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துக்கொண்டு வரப்படுமாயின், எத்தனை ஆட்சியும் தலைமைகளும் வந்தாலும் ஒற்றுமை என்பது இலங்கையை பொறுத்த வரை “சீச் சீ... இந்தப் பழம் புளிக்கும் கதைதான்”