வியாழன், 2 மார்ச், 2017

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்பாடுகளில் அமெரிக்கா அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்பாடுகளில் அமெரிக்கா அதிருப்தி


 சில நாடுகள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கையாழும் விதம் தொடர்பில் கடுமையாக சாடியிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து கவனத்தில் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்க செயலாளர் எரின் பார்க்கிளே இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையின் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு பேரவை தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன், மாற்றத்துக்கான செயற்பாட்டு ஊக்கத்தையும் செலுத்துகிறது என அவர் குறிப்பிட்டார். பேரவையின் செயற்பாடுகள் ஒழுங்காக முன்னெடுக்கப்பட்டால் நாடுகளின் அர்ப்பணிப்புக்கள் மற்றும் கடப்பாடுகளை நினைவுபடுத்துபவையாக இருக்க வேண்டும்.
அவை அந்த நாடுகளின் பொறுப்புக்கூறல்களை மேற்கொள்ள முடியும். பேரவை இதற்கமைய செயற்பட்டால் மனித உரிமைகளுக்கான வெற்றியாக அவை அமையும். உதாரணமாக, பேரவையின் மறுசீரமைப்புக்கான ஊக்கச் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல்களுக்கான தொழில்நுட்ப உதவிகள். வட கொரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பாதுகாப்புச் சபையின் விசாரணைகள் என்பவற்றைக் குறிப்பிட முடியும் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
பேரவைமீது நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டுமாயின் பக்கச்சார்பான, ஆக்கவளமற்ற செயற்பாடுகளிலிருந்து விலகியதான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மனித உரிமைகளை பாதுகாப்பது என்ற பேரவையின் இலக்கை அடைவதற்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து அதன் அடிப்படையிலேயே பேரவையுடனான எதிர்கால ஈடுபாட்டை தமது அரசாங்கம் தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஸ்ரேல் தொடர்பில் பேரவை ஒருபக்கமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. முழு நிகழ்ச்சி நிரலிலும் இஸ்ரேலவைத் தவிர வேறெந்த நாடும் இடம்பெறவில்லை. சிரியாவில் அசாட் அரசாங்கம் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்துகின்றன. ஈரான் மற்றும் வடகொரியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் கருத்து வெ ளிப்பாட்டுச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் ஸ்ரேலை மாத்திரம் பேரவை ஏன் இலக்கு வைக்கிறது? நிகழ்ச்சி நிரலின் ஏழாவது விடயமாக இஸ்ரேல் உள்ளடக்கப்பட்டிருப்பதானது பேரவையின் நம்பிக்கைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்ரேலை சட்டபூர்வமற்றதாக்க அல்லது ஒதுக்குவதற்கு மனித உரிமைகள் பேரவையில் மாத்திரமன்றி எங்கு முயற்சிக்கப்பட்டாலும் அதற்கு எதிராக அமெரிக்கா நிற்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.