வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சரி சரி அவரே இருக்கட்டும்! ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா!

சரி சரி அவரே இருக்கட்டும்! ஓ.பி.எஸ் க்கு ‘விட்டுக்கொடுத்த’ சசிகலா!


2017ம் ஆண்டு இப்படி தொடங்கும் என மொத்த தமிழகமும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஜெயலலிதா இல்லாமல் ஒரு புத்தாண்டு பிறந்திருக்கிறது. ஜெயலலிதா இல்லாமல் மாணவர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
கட்சியின் செயற்குழுவில் மட்டுமே ஜெயலலிதாவால் அனுமதிக்கப்பட்ட சசிகலா, அந்த கட்சிக்கே பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு முன் 2 சந்தர்ப்பங்களில் முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ் எப்போதும் இல்லாமல் நெஞ்சு நிமிர்த்தியபடி சட்டமன்றத்தில் அம்மாவின் இருக்கையை அலங்கரிக்கிறார்.
முதல்வராக இருந்த முந்தைய காலங்களில் கள்ள மௌனத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்க்கும் அவர், அப்படியே சந்திக்கும் அவசியம் எழுந்தாலும் எல்லை மீறிவிடாமல் பேசி வந்தவர், இன்று பேட்டிகளின்போது சிநேகமாய் சிரிக்கிறார்; சீண்டும் கேள்விகளுக்கும் சீற்றமின்றி பதில் தருகிறார்.
நழுவி ஓடும் மீனாக இருந்தவர் நின்று அடுத்து வரும் கேள்விகளை எதிர்நோக்குகிறார். கையை பின்னுக்கு கட்டிக்கொண்டு கம்பீரமாக பேசுகிறார். ஜல்லிக்கட்டு நடக்குமா... என புதுடெல்லி விமானநிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “முதல்வர் நான் சொல்கிறேன். இதற்கு மேல் யார் வந்து சொல்லவேண்டும்” என புன்முறுவலுடன் கடந்தார்.
குடியரசு தினத்தன்று கொடியேற்றும் அதிர்ஸ்டத்தைப் பெற்ற அவர், முத்தாய்ப்பாக குடியரசு தின கலைநிகழ்ச்சியில் மனைவி சமேதராக மேடையில் அமர்ந்தும் விட்டார்.
ஓ.பி.எஸ்ஓ.பி.எஸ் இப்படி! நடராஜன்..? பல ஆண்டுகளாக பத்துக்கு பத்து அறையில் கூட அதிமுக பற்றியும் அதன் தலைமை பற்றியும் பயந்து பயந்து பேசிக்கொண்டிருந்த நடராஜன் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்படும் முன்பே, கட்சியை காப்பாற்றுவோம் என்று கண்ணாடியை இறக்கிவிட்டபடி சூளுரைக்கிறார்.
ஜெயலலிதா எழுந்து வந்துவிட மாட்டார் என்ற அவரது மதிநுட்பத்தை பாராட்டித்தான் இருக்க வேண்டும். இத்தனை சம்பவங்களையும் ஒருவேளை ஜெயலலிதா பார்த்திருந்தால் அவர்களின் நிலை குறித்து நினைக்கவே குலை நடுங்குகிறது. ஆனால் அவர் இல்லாததால்தான் இத்தனையும் நடக்கிறது என்பதுதான் இயற்கையின் நாடகம்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சியை எந்த சிரமுமின்றி கைப்பற்றிக்கொண்டுவிட்டார் சசிகலா. இருக்கும் நாலரை வருடங்களை எளிதில் 'இழக்க'விரும்பாத எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளால் சாத்தியமான ஒன்று இது.
ஆனால் தொண்டனுக்கு எதுவும் இல்லையென்பதால் இன்னமும் 'புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி' என புலம்பிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சசிகலா தரப்பு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கட்சியை கைப்பற்றிக்கொண்டாலும் அரசியலமைப்பு சட்டப்படி அரசு இயந்திரத்தை நிர்வகிப்பதுதானே அந்தஸ்தாக இருக்கும். அதற்கான முயற்சிகள்தான் பல்வேறு வடிவங்களில் எடுத்து வந்தது சசிகலா தரப்பு.
ஆனால் அதற்கு ஓ.பி.எஸ்ஸிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கவில்லையாம். மத்திய அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் ஆதரவு ஓ.பி.எஸ் க்கு இந்த தைரியம் தந்தது என்கிறார்கள்.
தமிழக வரலாற்றில் அரசியல் களத்தையே அதிர்ச்சியும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாக்கிய மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை அனுமதித்தது ஓ.பி.எஸ் மீது தமிழக மக்களிடையே ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.
முந்தைய ஆட்சியாக இருந்திருந்தால் இப்படி ஒரு போராட்டத்திற்கு இத்தனை லட்சம் மக்களை ஒருங்கிணைய அனுமதித்திருப்பார்களா என்ற சிந்தனையில்தான் ஓ.பி.எஸ் -ன் அணுகுமுறை புரிந்திருக்கும்.
ஆச்சர்யம் என்னவென்றால் போராட்ட வடிவம் திசைமாற்றப்பட்டு ஒரே நாளில் தமிழகத்தின் பல பகுதிகள் கலவர பூமியாக மாறிய போதும் இன்றுவரை காவல்துறையின் மீதுதான் விமர்சனங்களும் கண்டனங்களும் வைக்கப்படுகின்றன.
எரியும் தீப்பந்தங்களுக்கு மத்தியில் அத்தனை சூட்டிலும் முதல்வர் ஓ.பி.எஸ் எரியாமல் இருப்பது ஆச்சர்யம்தான். ஓ.பி.எஸ் பெரும் அதிர்ஸ்டக்காரர்தான் போல.தங்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவர் தற்போது தங்களின் முன்னே அதிகாரம் மிக்க பதவியை அலங்கரிப்பது யாருக்கும் எரிச்சல் தரும் விஷயம்.
ஜெயலலிதாவின் சமாதியின் ஈரம் காயும் முன் பங்காளி சண்டை வேண்டாம் என பொறுத்தே இருந்தது சசிகலா தரப்பு. ஆனால் இது தொடர்வதை விரும்பாததால் நேரடியாக அவரை பதவி விலகச் சொல்லி சசி தரப்பு கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
அதற்கான எழுத்துபூர்வமான கடிதத்தையும் கேட்கப்பட்டதாம். ஆனால் “இப்போது வரை உங்களுக்கு கட்டுப்பட்டவனாகத்தான் நான் இருக்கிறேன். நீங்கள் எப்போது தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தாலும் அந்த கணத்தில் வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன்.
அதற்கு கடிதம் தேவையா” என அதற்கு மறுத்துவிட்டாராம் ஓ.பி.எஸ். ஜல்லிக்கட்டு பிரச்னை புதாகரமாவதற்கு சில தினங்களுக்கு முன் இது நடந்ததாம்.சசிகலாஓ.பி.எஸ்ஸின் இந்த வார்த்தையை நம்பியே தலைமைச் செயலகத்தில் சசிகலா முதல்வராவதற்கான முன்னோட்டங்களாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல்வர் ஓ.பி.எஸ் அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள தங்கள் துறையின் அனைத்து .பைல்களையும் ஓரிரு தினங்களில் திரும்பப்பெற்றுக்கொள்ளவும் எனவும், கொஞ்சநாட்களுக்கு புதிய ஃபைல்களை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம்” என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்.
கூடவே ஒவ்வொரு துறைகளிலும் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட இருக்கும் கட்டிடங்கள், வழங்கப்படாமல் உள்ள நலத்திட்டங்கள் இவற்றை திரும்ப துாசி தட்டித் தயாராக வைத்திருக்கும்படியும் எல்லா துறைகளின் செயலாளர்களுக்கும் உத்தரவு போனதாம். தேவைப்பட்டால் அவைகளுக்கு தேதியை ரிசர்வ் செய்யவேண்டியதிருக்கும்.
எதற்கும் தயாராக இருக்கும்படி சொன்னது உத்தரவு.“அவசர காலத்தில் நீங்கள் தற்காலிகமாக இந்த இடத்தில் அமரவைக்கப்பட்டாலும் சும்மா வந்துவிடவில்லை இந்த தகுதி. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி நீங்கள்.
தகுதியில்லாமலா அம்மா உங்களை இந்த இடத்திற்கு கொண்டுவந்தார்.? அம்மாவிற்குப் பிறகு தமிழக மக்களுக்கு உங்கள் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. அப்படியிருக்க இன்னும் நீங்கள் இரண்டாம் இடத்திலிருந்தே செயல்படவேண்டுமா... என இந்த சமயத்தில் நெருக்கமான வட்டாரங்கள் அவருக்கு துாபம் போட்டதாக சொல்லப்படுகிறது.
“மத்திய அரசு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்” என்றதோடு, சசிகலா மீதான வழக்கு இன்னும் உயிருடன் இருப்பதையும் அவர்கள் அப்போது நினைவுபடுத்தி 'கலகம் பிறந்தால் வழி பிறக்கும்' எனச் சொல்லிமுடித்தார்களாம்.ஓ.பி.எஸ்அதிலிருந்துதான் தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்தார் ஓ.பி.எஸ் என்கிறார்கள்.
எதிர்பார்த்தபடி ஓ.பி.எஸ்ஸிடமிருந்து சமிக்ஞை கிடைக்காததால், நேரடியாகவே, “எப்போது பதவி விலகப்போகிறீர்கள்” என சசி தரப்பு கேட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த முறை ஓ.பி.எஸ் பதில் வேறுமாதிரி இருந்திருக்கிறது. “எல்லாம் நன்றாய்த்தானே போய்க்கொண்டிருக்கிறது. கட்சிக்கு உங்களை எந்த பிரச்னையுமின்றி தேர்ந்தேடுத்து விட்டோம்.
ஆட்சியை நான் பார்த்துக்கொள்கிறேன். இதிலும் உங்கள் குறுக்கீடு இருந்தால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு எழும். அது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லதல்ல.
ஏற்கனவே தீபா பிரச்னை. இதில் நாமும் சலசலப்பை எழுப்புவது நல்லதல்ல” என்ற தொனியில் ஓ.பி.எஸ் பேசியதாக கூறப்படுகிறது.சசிகலா தரப்பு கொஞ்சம் இன்னும் அழுத்தம் கொடுத்த போது, ஓ.பி.எஸ் சொன்ன வார்த்தைகள் அதிர்ச்சி தந்ததாம். “எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
நீங்கள் அழுத்தம் கொடுத்தால் இப்போதே பதவி விலகுகிறேன். ஆனால் அடுத்த நொடியிலிருந்தே உங்களுக்கு பிரச்னைகள் உருவாகும். அதை சமாளிக்க முடியுமா என பார்த்துக்கொள்ளுங்கள்” என்றபோது விக்கித்து போனதாம் சசி தரப்பு. ஓ பி எஸ்அன்று முதல்தான் இரண்டு கடிதங்கள்,
இரண்டு அறிக்கைகள், என ஓ.பி.எஸ்க்கும் சசி தரப்புக்கும் பனிப்போர் துவங்கியது என்கிறார்கள். ஓ.பி.எஸ் ஸை பொறுத்தவரை கட்சியின் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் மத்தியில் அவர் அம்மாவால் வைக்கப்பட்ட கொலு பொம்மை என்ற பிம்பம்தான் இன்றுவரை உள்ளது.
அதனால் ரெமோவிலிருந்து அந்நியனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தந்திரங்களை அவர் இப்போது கையாளத்துவங்கிவிட்டார் என்கிறார்கள்.
கட்சியும் ஆட்சியும் சசிகலாவினால் ஒரு பிரச்னையுமின்றி நிர்வகிக்கப்படுகிறது என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியாகத்தான் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திவாகரனை குறிவைத்ததும் காரசாரமாக அவர் கடந்த மாதத்தில் பேட்டி அளித்ததும் என்கிறார்கள்.
கட்சியில் இன்னொரு தலைமை மேலெழும்பும்போது அதிருப்தியாளர்கள் எளிதாக அதன் கீழ் ஒன்றிணைவார்கள் என்பது ஓ.பி.எஸ் தரப்பின் எண்ணம். ஆனால் அதை திணிப்பதுபோல் அல்லாமல் கலகக்குரல், பரபரப்பு பேட்டிகள், என அடுத்தடுத்து மூவ் மூலம் இயல்பான ஒரு விஷயமாக மாற்றி சாதிக்க நினைக்கிறது என்கிறார்கள்.
அதன் முன்னோட்டம்தான் கே.பி முனுசாமி - திவாகரன் மோதல் விவகாரம். முனுசாமி முந்தைய ஆட்சியில் ஓ.பி.எஸ் உடன் இணைந்த நால்வர் அணியில் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவராக இருந்தவர்.
திவாகரனுடனான மோதலில் அவர் அளித்த பேட்டியில் திவாகரனை வசைபாடிய அவர், கூடவே ஓ.பி.எஸ் நிர்வாகத்திறமையை புகழ்ந்து தள்ளியதையும் கவனித்திருக்கலாம்.
அதைத்தொடர்ந்தே அப்போது ஒரு விழாவில் பேசிய நடராஜன், தமிழகத்தில் உள்ள சிலரின் சதித்திட்டத்திற்கு மோடி பலியாகிவிடக்கூடாது என காட்டமாக தெரிவித்திருந்தார்.
ஓ.பி.எஸ்எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல், டெல்லி விஜயத்தில் ஓ.பி.எஸ் தனித்தன்மையுடன் நடந்துகொண்டது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக எம்.பிக்களை மோடி தவிர்த்து விட்டு ஓ.பி.எஸ்க்கு மட்டும் அப்பாயிண்மென்ட் வழங்கியது என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் எல்லாம் சசி தரப்பை எரிச்சலடையச் செய்திருக்கிறது.
அதனால்தான் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான முடிவுகளை மோடி எடுத்த நிலையிலும், சசியின் குரலாக தம்பிதுரை பாஜக வை கடந்த வாரம் வறுத்தெடுத்தது என்கிறார்கள்.ஜல்லிக்கட்டு விவகாரம் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக கலவரத்தில் முடிந்தது,
இதில் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உருவாகியது. இதை வைத்து ஓ.பி.எஸ்-யை ஓரங்கட்டலாம் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அதுவும் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
முதல்வராக பலம்பொருந்திய பதவியில் ஓ.பி.எஸ்ஸை தொடரச் செய்வது கட்சியில் அவருக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கி கட்சியில் இன்னுமொரு அதிகாரம் மையம் உருவாகிவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கும் அதேசமயம், ஓ.பி.எஸ்க்கு டெல்லித் தலைமை அளிக்கும் முக்கியத்துவத்தையும் கூர்ந்து கவனிக்கிறது.
இதனால் அச்சத்துக்குள்ளாகியிருக்கும் சசி தரப்பு, ஓ.பி.எஸ் ஸை மென்மையான அணுகும் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான் இப்போதைக்கு விவகாரத்தை ஆறப்போட முடிவெடுத்திருக்கிறதாம்.
ஓ.பி.எஸ்முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பி.எஸ்ஸை ஓரம்கட்ட சட்டமன்றத்தின் உள்ளேயே எம்.எல்.ஏக்கள் மூலம் சகல வித்தைகளையும் காட்டமுடியும் என்றாலும், அது மக்களிடையே உள்கட்சி விவகாரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும் என்பதால் கொஞ்சகாலம் பொறுமை காப்பது நல்லது என முடிவெடுத்திருப்பதோடு, அதை பட்டவர்த்தனமாக கடந்த வாரம் நடராஜன் மூலம் ஒருமேடையில் 'ஓ.பி.எஸ்ஸை இப்போதைக்கு மாற்றும் எண்ணம் இல்லை' என்று கூறி தற்காலிகமான முதல் பாதி ஆட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு என்கிறார்கள்.
- Vikatan

சம்பந்தன் முன்னிலையில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி! நிறைவேற்றுவாரா?


நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய அரசியலமைப்பு எந்த வகையிலும் இந்த தேசத்தை பிளவுபடுத்த மாட்டாது என தனது கிழக்கு மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பினூடாக ஐக்கிய இலங்கைக்குள் இன நெருக்கடிக்கான நிரந்தரமானதும் சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான தீர்வு எட்டப்படுமெனவும் அதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டபோது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தான் ஒரு சமூகத்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை என அழுத்திக் கூறியதோடு நாட்டின் ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்வதில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமுகங்களுக்கு பெரும் பங்களிப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு சிறுபான்மைச் சமுகங்களின் எதிர்பார்ப்புகள் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிரணி சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி, எதிரணியினரின் ஆட்சிக் கவிழ்ப்புக் கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடுமெனவும் அது ஒருபோதும் நனவாகப் போவதில்லையெனவும் தெரிவித்ததோடு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும், எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தனக்கு ஆதரவளித்த கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அந்த மக்களை நேரில் சந்திக்கவே இந்த விஜயத்தை பயன்படுத்திக் கொண்ட ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் தாம் மேற்கொண்ட பேச்சுக்கள் தொடர்பாகவும் மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் நல்லதொரு புரிதலுடன் காணப்படுவதாகவும் அவரதும் தமிழ் மக்களதும் எதிர்பார்ப்பும் எமது அரசின் எதிர்பார்ப்பும் ஒன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன, மத மக்களும் சமாதான சக வாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் இலக்கு என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மிக முக்கியமாகத் தேவைப்படுவது புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகும்.புரிதல்களின்றி எதனையும் சாதித்து விட முடியாது.
அந்தப் புரிதல்களுடன் செயற்பட்டால் மட்டுமே மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியும். மக்களது மனங்கள் வெற்றிகொள்ளப்படாவிட்டால் எத்தகைய திட்டங்களைத் தீட்டினாலும் அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது.
மனங்கள் வெல்லப்படுவதற்கு நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகும். அத்தகைய நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவதற்கே நல்லாட்சி அரசு முன்னுரிமை கொடுத்து வருவதைக் காணமுடிகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், ஜனநாயக வழி மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமும் இணைந்து செயற்படும்போது அதனை குழப்பும் வகையில் எந்தத் தரப்பும் செயற்பட முனையுமானால் அது துரோகச் செயலாகவே அமையமுடியும்.
சிலர் சுய அரசியல் இலக்குகளை அடையும் நோக்கில் பொய்ப்பிரசாரங்களையும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஒரு கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களை தவறாக வழி நடத்த முற்பட்டுள்ளது.
இவர்களின் போலி வேஷங்களை நாட்டு மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். இந்த வேஷங்கள் மிக விரைவில் கலையப்பட்டுவிடும். அதற்கான காலம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டுமானால் அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தோற்கடிக்கப்ட்ட சக்தியால் அதனைச் செய்ய முடியாது.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி உறுதியாகக் கூறுகிறார். 2020 ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சியை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியாது.
நல்லாட்சி அரசு மக்கள் சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசாகும். எதிரணியினரின் பசப்பு வார்த்தைகள், ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.
மீண்டுமொருதடவை பாதாளத்துக்குள் வீழ்ந்து விடக் கூடாது.ஜனாதிபதி கிழக்கில் தெரிவித்திருக்கும் மற்றுமொரு விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் நலன் கருதி சில தீர்மானங்களை எடுக்க நிர்ப்பந்திக்கப்படலாம். சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
இன்றிருக்கும் எமக்குமட்டுமல்ல எமது நாளைய எதிர்கால சந்ததிகளுக்குமானதொரு சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதே எமது இலக்கும், இலட்சியமாகும் என்றவாறு ஜனாதிபதியின் பேச்சு அமைந்துள்ளது.
செழிப்பான நாளைய எதிர்காலத்துக்குரிய அர்ப்பணிப்பைச் செய்வதற்கான கடப்பாட்டை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம்.
இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என வேறுபட முடியாது.தெற்கு போன்று வடக்கும், கிழக்கும் ஏன் ஒட்டுமொத்த தேசமும் வளமடையவேண்டும்.
இதில் இனம், மதம், மொழி பேதம் இருக்க முடியாது. பிரதேசவாதம் இருக்க முடியாது.
ஒரே நாடு, ஒரே இனம் (One Nation, One Country) என்ற கோட்பாட்டில் நாம் இலங்கையர் என்ற நிலையில் ஒன்றுபடுவதன் மூலம் அனைத்துச் சவால்களையும் வெல்ல முடியும் என்ற உறுதிப்பாட்டில் இணைந்து பயணிப்போம்.
Tzmilwin

அவுஸ்திரேலியாவில் தேசிய மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம்..!


அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்மைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், செல்வம் அடைக்கலநாதன் அந்நாட்டு பிரதமருக்கும், அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புலம்பெயர் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை அங்கீகரித்து அவுஸ்திரேலிய நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை மற்றும் உலகம் பூராவும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துகொள்கின்றேன் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.