வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சம்பந்தன் முன்னிலையில் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி! நிறைவேற்றுவாரா?


நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவர இருக்கும் புதிய அரசியலமைப்பு எந்த வகையிலும் இந்த தேசத்தை பிளவுபடுத்த மாட்டாது என தனது கிழக்கு மாகாண விஜயத்தின் போது தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பினூடாக ஐக்கிய இலங்கைக்குள் இன நெருக்கடிக்கான நிரந்தரமானதும் சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான தீர்வு எட்டப்படுமெனவும் அதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
நேற்று முன்தினம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டபோது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தான் ஒரு சமூகத்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை என அழுத்திக் கூறியதோடு நாட்டின் ஜனாதிபதியாக என்னைத் தெரிவு செய்வதில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமுகங்களுக்கு பெரும் பங்களிப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு சிறுபான்மைச் சமுகங்களின் எதிர்பார்ப்புகள் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிரணி சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த ஜனாதிபதி, எதிரணியினரின் ஆட்சிக் கவிழ்ப்புக் கனவு வெறும் கனவாகவே முடிந்துவிடுமெனவும் அது ஒருபோதும் நனவாகப் போவதில்லையெனவும் தெரிவித்ததோடு தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும், எதிரணியினரின் பொய்ப் பிரசாரங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தனக்கு ஆதரவளித்த கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அந்த மக்களை நேரில் சந்திக்கவே இந்த விஜயத்தை பயன்படுத்திக் கொண்ட ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடன் தாம் மேற்கொண்ட பேச்சுக்கள் தொடர்பாகவும் மக்களுக்கு பகிரங்கமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் நல்லதொரு புரிதலுடன் காணப்படுவதாகவும் அவரதும் தமிழ் மக்களதும் எதிர்பார்ப்பும் எமது அரசின் எதிர்பார்ப்பும் ஒன்றாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜனாதிபதி, ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன, மத மக்களும் சமாதான சக வாழ்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் இலக்கு என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மிக முக்கியமாகத் தேவைப்படுவது புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகும்.புரிதல்களின்றி எதனையும் சாதித்து விட முடியாது.
அந்தப் புரிதல்களுடன் செயற்பட்டால் மட்டுமே மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியும். மக்களது மனங்கள் வெற்றிகொள்ளப்படாவிட்டால் எத்தகைய திட்டங்களைத் தீட்டினாலும் அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்க முடியாது.
மனங்கள் வெல்லப்படுவதற்கு நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகும். அத்தகைய நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவதற்கே நல்லாட்சி அரசு முன்னுரிமை கொடுத்து வருவதைக் காணமுடிகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும், ஜனநாயக வழி மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமும் இணைந்து செயற்படும்போது அதனை குழப்பும் வகையில் எந்தத் தரப்பும் செயற்பட முனையுமானால் அது துரோகச் செயலாகவே அமையமுடியும்.
சிலர் சுய அரசியல் இலக்குகளை அடையும் நோக்கில் பொய்ப்பிரசாரங்களையும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஒரு கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களை தவறாக வழி நடத்த முற்பட்டுள்ளது.
இவர்களின் போலி வேஷங்களை நாட்டு மக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். இந்த வேஷங்கள் மிக விரைவில் கலையப்பட்டுவிடும். அதற்கான காலம் அண்மித்துக்கொண்டிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டுமானால் அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தோற்கடிக்கப்ட்ட சக்தியால் அதனைச் செய்ய முடியாது.
அந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி உறுதியாகக் கூறுகிறார். 2020 ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சியை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியாது.
நல்லாட்சி அரசு மக்கள் சக்தியைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசாகும். எதிரணியினரின் பசப்பு வார்த்தைகள், ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.
மீண்டுமொருதடவை பாதாளத்துக்குள் வீழ்ந்து விடக் கூடாது.ஜனாதிபதி கிழக்கில் தெரிவித்திருக்கும் மற்றுமொரு விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் நலன் கருதி சில தீர்மானங்களை எடுக்க நிர்ப்பந்திக்கப்படலாம். சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.
இன்றிருக்கும் எமக்குமட்டுமல்ல எமது நாளைய எதிர்கால சந்ததிகளுக்குமானதொரு சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதே எமது இலக்கும், இலட்சியமாகும் என்றவாறு ஜனாதிபதியின் பேச்சு அமைந்துள்ளது.
செழிப்பான நாளைய எதிர்காலத்துக்குரிய அர்ப்பணிப்பைச் செய்வதற்கான கடப்பாட்டை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம்.
இதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என வேறுபட முடியாது.தெற்கு போன்று வடக்கும், கிழக்கும் ஏன் ஒட்டுமொத்த தேசமும் வளமடையவேண்டும்.
இதில் இனம், மதம், மொழி பேதம் இருக்க முடியாது. பிரதேசவாதம் இருக்க முடியாது.
ஒரே நாடு, ஒரே இனம் (One Nation, One Country) என்ற கோட்பாட்டில் நாம் இலங்கையர் என்ற நிலையில் ஒன்றுபடுவதன் மூலம் அனைத்துச் சவால்களையும் வெல்ல முடியும் என்ற உறுதிப்பாட்டில் இணைந்து பயணிப்போம்.
Tzmilwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள