புதிய அரசியலமைப்பு குறித்த எதிர்ப்புகள் நாட்டு மக்களிடையே வலுப்பெற்று காணப்படுகின்றன. எல்லா இன மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினையும் புதிய அரசியலமைப்பு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களின் பரவலான கருத்துக்கள் எதிரொலித்தன. எனினும் புதிய அரசியலமைப்பு குறித்து வெளி வருகின்ற கருத்துக்கள் இப்போது திருப்திகரமானதாக இல்லை. குறிப்பாக சிறுபான்மையினரின் கோரிக்கைகள் உரியவாறு புதிய அரசியலமைப்பில் உள்ளீர்ப்பு செய்யப்படாதிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந்நிலையில் மலையக மக்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கோரிக்கைகள் தொடர்பில் மீட்டிப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.
இலங்கையின் கடந்தகால மற்றும் சமகால அரசியலமைப்புகள் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றமை தொடர்பில் நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் எழுச்சிக்கும் ஐக்கியத்துக்கும் வித்திட வேண்டும். இதனாலேயே சாதகமான விளைவுகள் பலவும் ஏற்படும். எனினும் இலங்கையின் அரசியலமைப்பு நிலை மாறி முரண்பாடுகளுக்கும் குழப்ப சூழ்நிலைகளுக்கும் வித்திட்டதாக பல்வேறு முன்வைப்புகள் இடம்பெற்று வருகின்றன. நாட்டு மக்கள் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றனர். எனவே, புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவை என்று பலரும் வலியுறுத்தி இருந்தனர். இதனடிப்படையில் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு தேவை என்று ஏற்றுக்கொள்ளும் சிலர் அரசாங்கம் அவசர அவசரமாக இப்புதிய அரசியலமைப்பினை திணிக்க முனைவதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
வீரத்திற்கான சர்வதேச பெண்கள் விருதினை வென்றவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி. கிஷாலி பின்ரோ ஜயவர்தன இதுபற்றி கூறுகையில், நாட்டு மக்கள் கடந்தகால மற்றும் சமகால அரசியலமைப்புகளில் நம்பிக்கை இழந்துள்ளனர். இவற்றோடு சமகால அரசியலமைப்பில் நாம் பல தடவைகள் திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறோம். இத்திருத்தங்கள் அனைத்தும் புதிய அரசியலமைப்பின் அவசியத்தினையே வலியுறுத்துவதாக உள்ளன. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை. உண்மையில் மக்களின் கருத்தறியும் நடவடிக்கைகள் இன்னுமின்னும் விஸ்தரிக்கப்படுதல் வேண்டும். பொது மக்களுடனான கலந்துரையாடல்கள் போதுமானதாக இல்லை. தென் ஆபிரிக்காவில் அரசியலமைப்பினை உருவாக்குவதில் மக்களின் வகிபாகம் அதிகமாக இருந்தது. கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் என்பன அதிகமாக இடம்பெற்றன. எனினும் நமது நாட்டில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. இது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக உள்ளது என்கிறார் கிஷாலி. உண்மையும் இதுதான். ஒரு நாட்டை பொறுத்த வரையில் அரசியலமைப்பு என்பது ஒரு முக்கியத்துவம் மிக்க ஆவணமாகும். நாட்டு மக்களின் தேவைகள், விருப்பங்கள் என்பனவற்றை அது பிரதிபலிக்க வேண்டும். இது இல்லாத விடத்து பாதக விளைவுகளே மிஞ்சும். அரசியல் நடவடிக்கைகளை மையப்படுத்தி அவசரத்தில் கொண்டு வரப்படும் அரசியலமைப்புகள் எதிர்பார்த்த சாதகமான விளைவுகளை பெற்றுக்கொடுக்குமா? என்பது சந்தேகமே.
வரலாறு எமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. மக்களின் கருத்துக்களை உரியவாறு பெற்றக்கொள்ளாது முன்வைக்கப்பட்ட கடந்தகால, சமகால அரசியலமைப்பின் விளைவுகளையே நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதனை மறந்து இனியும் செயற்படுதல் கூடாதென நினைக்கிறேன். இதற்கிடையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பின் முக்கிய விடயம் மாற்றப்பட்டு, புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுகையில் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு அரசியலமைப்பின் தன்மை மாற்றத்தை தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் என்று பிரதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான செயற்பாடுகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் இருந்தனர். எனினும் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காது என்ற ரீதியிலும் சிலர் கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதனையும் இங்கு கூறியாதல் வேண்டும். தமிழ்க் கட்சிகள் சமஷ்டி மூலமான தீர்வினை புதிய அரசியலமைப்பின் ஊடாக வலியுறுத்தி இருந்தன. எனினும் இது சாத்தியப்படாத நிலையே இப்போது காணப்படுகின்றது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வே முன்வைக்கப்பட உள்ளது. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்ற அம்சமும் மாற்றப்படாது. செனட் சபை போன்று இரண்டாவது சபை ஒன்றினை அமைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை என்று அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவும் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து இனவாத மற்றும் மதவாத அரசியல் நடத்த முனைபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரியெல்ல மேலும் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலான விவாதங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் தனது நிலைப்பாட்டினை பின்வருமாறு வலியுறுத்தி இருக்கின்றார். புதிய அரசியலமைப்பின் கீழ் மாகாண சபைகள் மாகாண அரசுகளாக உருவாக உள்ளன. முழுமையான நிதிக் கையாளுகை அதிகாரம், பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பன மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று புதிய அரசியலமைப்பிற்கான பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுகின்றபோது முதலமைச்சர் ஒரு இனவாதியாக இருப்பாராயின் அவருக்கு சார்பாக இயங்கும் பொலிஸாரை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதுவரையில் இந்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பில் இனவாதம் இருக்கவில்லை. ஆனால், தற்போது உருவாக்கப்பட உள்ள புதிய அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. இது நீதி கட்டமைப்புக்குள்ளும் இனவாதத்தினை திணிக்கும் செயலாகும். தற்போதைய நீதியரசரை நாம் தமிழர் என்று கருதுவதில்லை. அவரை நீதியரசர் என்றே பார்க்கின்றோம். ஆனால் புதிய அரசியலமைப்பானது வேறுபாடுகளுடன் கலந்த சிந்தனைகளை தூண்டுவதாக அமையும் என்று தன் உள்ளக் குமுறலை விமல் வீரவன்ச வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி இருப்பதைப் போல அரசியலமைப்பு என்கிற பிள்ளை பிறப்பதற்கு முன்னதாகவே பலரும் இப்போது பிள்ளை தொடர்பாக ஜாதகம் கூறத்தொடங்கி இருக்கின்றனர். ஜாதகத்தின் பலாபலன்களை பொறுத்திருந்தே பார்க்க வேண்டி இருக்கின்றது.
புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினர் முன்வைத்த கோரிக்கைகள் பல உள்ளீர்ப்பு செய்யப்படவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. இதற்கிடையில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு புதிய அரசியலமைப்பு ஓரளவு வலுச்சேர்த்திருப்பதாகவும் இன்னும் சற்று முன்னேறிச் சென்றிருக்க முடியும் என்ற போதும் இது சாத்தியப்படவில்லை என்று முக்கியஸ்தர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் சிறுபான்மையினர் என்ற ரீதியில் மலையக மக்களும் அரசியல் கட்சிகளும் தமது உரிமையை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டனர். அரசியலமைப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடம் பல்வேறு விதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. மலையகத்தில் உள்ளவர்களும் மலையகத்துக்கு வெளியே இருப்பவர்களும் மலையகத்தவர்களின் நலன் கருதி கோரிக்கைகள் பலவற்றையும் முன்வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக நாம் உற்று நோக்குவோம்.
இலங்கை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு நாடாக இருக்கின்றது. எனவே, இலங்கையானது மதச்சார்பற்ற ஒரு ஜனநாயகக் குடியரசாக இருக்க வேண்டும். இலங்கையில் நான்கு பிரதான இனங்கள் இருப்பதாக யாப்பில் வரையறுத்து கூற வேண்டும். சிங்களவர்கள், வடக்கு கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்பனவே அவையாகும். மலையக மக்களுக்கென்று தனியாக ஒரு மாவட்டம் மேலும் ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக மாற்றமடையும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்குப் பொறுப்பு சொல்பவராக இருத்தல் வேண்டும். அதேவேளை, சிறுபான்மை இனத்தவர்களுக்கென்று மூன்று உப ஜனாதிபதிகள் இருத்தலும் வேண்டும். மலையக மக்கள், வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் என்கிற மூன்று சாராரையும் இவர்கள் பிரதிநிதித்துவம் செய்தல் வேண்டும்.
செனட் சபை, பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் இடம்பெறுதல் வேண்டும். மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற பகுதிகளில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழுகின்றனர். எனவே, இந்த பகுதிகளில் எல்லை மீள்நிர்ணயம் செய்து தனியான ஒரு அதிகார அலகு ஏற்படுத்தப்படுதல் வேண்டும். நிலத்தொடர்பற்ற முறையில் இதனை ஏற்படுத்த முடியும். தேர்தல் முறைமாற்றம் கொண்டுவரப்பட்டாலும் மலையக மக்களின் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கையும் மலையக மக்களின் ஜனத்தொகை விகிதாசாரத்துக்கேற்ப ஏற்படுத்தப்படுதல் வேண்டும். சகல ஆணைக்குழுக்களிலும் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் இடம்பெறுதல் வேண்டும். சிறுபான்மையினரின் நலன்களை பேணும் விதத்தில் செனட் சபையில் ஐம்பது சதவீதம் சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகளாக இருத்தல் அவசியமாகும். சிறுபான்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்படுதல் வேண்டும். மொழி உரிமையை அடிப்படை உரிமையாக குறிப்பிட்டு அதனை மீறுபவர்களுக்கு தகுந்த நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
மலையகத்தில் இருந்து பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறும் வண்ணம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இலங்கை பாராளுமன்றம் இரண்டு சபைகளை கொண்டதாக இருக்கின்ற நிலையில் இரண்டாவது சபையில் அந்தந்த சமூகங்கள் சம்பந்தமான விடயங்கள் வரும்பொழுது அந்தந்த சமூகத்தின் அங்கத்தினர்களின் அனுமதியுடனேயே சட்டங்கள் இயற்றப்படல் வேண்டும். மலையக மக்களின் நலன்கருதி விசேட திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்திய வம்சாவளித் தமிழர்கள் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். தோட்டங்கள் இன்று பலவழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத்துறை தோட்டங்களை நிர்வகிக்கும் வண்ணமாக வழிவகைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். நிலம், முதல், முயற்சி, உழைப்பு என்ற இந்த நான்கு விடயங்களும் மக்களுக்கு சொந்தமாக்கப்படுதல் வேண்டும். தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை வர்த்தகம் என்பனவும் இம்மக்களாலேயே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். கூட்டு ஒப்பந்தம் என்கிற போர்வையில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மறுபக்கத்தில் கூட்டு ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியமுள்ளது. எனவே இது குறித்தும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஆட்சியதிகாரத்தில் மலையக மக்கள் பின்தள்ளப்பட்டிருப்பதனை காண்கிறோம். இனவாதிகள் இம்மக்களை ஆட்சியதிகாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் இறக்கம் காணச் செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே, ஆட்சியதிகாரத்தில் மலையக மக்களுக்கு உரிய பங்கினை வகிக்க இடமளிக்கப்படுதல் வேண்டும். ஆட்சியதிகாரம் பெரும்பான்மையினரிடம் மட்டுமே இருக்க வேண்டியதில்லை. ஜனநாயக ரீதியில் அது மலையக மக்களுக்கும் பகிரப்படுதல் வேண்டும். மாகாண சபைகளுக்கு உரிய பல அதிகாரங்களையும் வழங்க வேண்டும். இதன் மூலம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகள் அதிகமான நன்மையினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தன்னைத்தானே ஆட்சி செய்கின்ற அதிகாரம் மாகாண சபைகளுக்கு அத்தியாவசியமானதாகும். கீழ்மட்டக் குடியரசு என்று சொல்லப்படுகின்ற உள்ளூராட்சி விடயங்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். கிராம இராஜ்ஜியங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளூராட்சி நிறுவனங்கள் சேவை விஸ்தரிக்கப்படல் வேண்டும். மலையக மக்களின் பௌதிக பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். எல்லா மதங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தொழில் வாய்ப்பு நிலைமைகளில் மலையக இளைஞர், யுவதிகள் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். இந்நிலையில் மலையகத்தவர்களின் விகிதாசாரத்துக்கேற்ப சலுகைகள் வழங்கப்படல் வேண்டும். கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு கருதிய விசேட முன்வைப்புகளும் மலையக மக்களை பொறுத்தமட்டில் மிகவும் அவசியமாக உள்ளது. மலையகத்தின் கல்வித்துறை இன்னும் மேம்பாடடைவதால் பல நன்மைகளும் உருவாகும்.
1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளில் மலையக மக்களின் எழுச்சி கருதி உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் புதிய அரசியலமைப்பில் இம்மக்கள் தொடர்பாக உறுதியான சில கட்டமைப்புகளை மேற்கொள்ளல் வேண்டும். வீட்டு வசதிகளிலும் காணி தொடர்பான விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். லயத்துச் சிறைகளுக்குள் நீண்டகாலமாக எம்மவர்கள் முடங்கிக் கிடக்கின்ற நிலையில் தனிவீட்டுக் கலாசாரத்தை துரிதமாக மேற்கொள்ளும் வண்ணம் நடவடிக்கைகள் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
அரச அதிபர் பிரிவு, கிராம சேவகர் பிரிவு என்பன மலையகத்தவர்கள் வாழும் பகுதிகளில் அதிகரிக்கப்பட வேண்டும். சிறுபான்மை இனத்தவர்களின் உரிமை தொடர்பான சோல்பரி அரசியலமைப்பில் இருந்து 29ஆம் சரத்து அதே முறையில் மேலும் வலுவுடையதாக ஆக்கப்படுதல் வேண்டும். பிரதமராக தெரிவு செய்யப்படுபவர் பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவராகவே இருப்பார். இந்நிலையில் சிறுபான்மையினரின் நலன் கருதி உப பிரதமர் பதவிகள உருவாக்கப்படுதல் வேண்டும்.
சகல அரச அலுவலகங்களிலும் அரசகரும மொழிகளுக்கான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். இவர் மூன்று மொழிகளையும் அறிந்தவராக இருப்பதோடு மக்களின் மொழிக்கேற்ப அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஐம்பது சதவீதமாக காணப்படுதல் வேண்டும். மலையகப் பெண்களின் வருமானத்தை உயர்த்தக்கூடியவாறு திட்டங்கள் பலவும் முன்வைக்கப்படல் வேண்டும்.
பல்கலைக்கழகத்துக்கு வருடாந்தம் தெரிவுசெய்யப்படுகின்ற மலையக மாணவர்களின் தொகை மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்நிலை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழக அனுமதியில் மலையக மாணவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும். பதிவுப் பிரஜை என்ற நிலையில் மலையக சமூகத்தில் ஒருசாரார் இன்னும் இருந்து வருகின்றனர். இந்த நிலை முற்றாக நீக்கப்படுதல் வேண்டும். சமமான பிரஜைகளாக அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படுதலும் வேண்டும்.பரம்பரை ரீதியான பிரஜைகளாக அனைவரும் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். சகல துறைகளிலும் மலையக மக்களுக்கு சமமான உரிமை வழங்கப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். அரசாங்கத்துறை மற்றும் பொதுத்துறை தொழில் வாய்ப்புகளில் பாரபட்சம் காட்டப்படாது மலையகத்தவர்களுக்கும் இவை உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
பெருந்தோட்ட குடியிருப்புகள் உள்ளூராட்சி அமைப்பில் உள்வாங்கப்படாத நிலைமை இருந்து வருகின்றது. இதனால் எம்மவர்கள் பல அரச உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இது ஒரு வருந்தத்தக்க பாரபட்சமான நிலையாக இருக்கின்றது. எனவே, உள்ளூராட்சி சபையின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெருந்தோட்ட குடியிருப்புகள் அனைத்தும் கொண்டுவரப்படுதல் வேண்டும். பொது நிர்வாக பொறிமுறையின் கீழ் இது அமைதல் வேண்டும். அதிகாரப் பகிர்வு ஒன்று ஏற்படுத்தப்படுகையில் மலையக மக்களின் செறிவான பகுதிகளை ஒன்றிணைத்து ஆளுமைமிக்க அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் ஊடாக அபிவிருத்தி, சமூக அபிலாஷைகள் என்பவற்றை நிறைவேற்றிக் கொள்ள வழிசமைத்துக் கொடுத்தலும் வேண்டும். இதுபோன்ற பல கோரிக்கைகளையும் மலையக மக்களும் ஏனையோரும் வலியுறுத்தி இருந்தனர்.
இதற்கிடையில் வடமாகாண சபையானது அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவு திட்டமொன்றினை ஏற்கனவே தயாரித்திருந்தது. இத்திட்டத்தில் வட, கிழக்கில் மாநில பாராளுமன்றம், அரச கருமமொழி, இனமொழியில் தேசியகீதம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்களையும் வலியுறுத்தியிருந்தது. இவற்றோடு மலையக மக்கள் தொடர்பிலும் கொள்கை வரைவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. சிறுபான்மை சகோதரர்கள் என்ற ரீதியில் இது இடம்பெற்றிருந்தது. இதனடிப்படையில் மலையக தன்னாட்சி பிராந்தியம் குறித்து கொள்கை வரைவு வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் மலையக தன்னாட்சி பிராந்தியத்திற்கு சார்பாகவும், எதிராகவும் கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.
சிறுபான்மையினர் என்கிற ரீதியில் வடபகுதி தலைவர்கள் மலையக மக்களை கருத்தில் கொள்வது வரவேற்கத்தக்கதாகும். மலையக தமிழர்களின் உரிமைதொடர்பாக இவர்கள் நீண்டகாலமாகவே சிந்தித்து வந்துள்ளனர். வடமாகாணசபை காலத்திற்கேற்ற ஒரு கருத்தினை முன்வைத்திருக்கின்றது. நிறுவன ரீதியாக இக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மை ஆட்சியாளர்களினால் தமிழ் மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுமிடத்து அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் அமைதியற்ற சூழ்நிலைகள் என்பன மேலோங்கும். இந்த நிலையில் மலையக மக்களுக்கென்று தன்னாட்சி பிராந்தியம் ஏற்படுத்தப்படுமிடத்து சாதக விளைவுகள் இன்னுமின்னும் அதிகமாக இருக்கும். சுதந்திரத்திற்காக ஒன்று சேர்ந்து இலங்கையர்களாக குரல் கொடுத்தவர்கள் சுதந்திரத்தின் பின்னர் பிரிந்து நின்று செயற்படுவது வருந்தத்தக்கதாகும். மலையக மக்கள் இனவாதிகளின் நெருக்கீடுகளுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றனர். இம்மக்கள் உள்ள சுதந்திரத்தையும் தற்போது இழந்து ஓட்டாண்டியாக உள்ளனர். இந்த நிலையில் மலையக மக்களின் இயல்பு நிலையை நன்குணர்ந்த நிலையில் வடமாகாண சபை தன்னாட்சி பிராந்தியத்தை வலியுறுத்தி இருப்பது சாலச் சிறந்ததாகும் என்று தன்னாட்சி பிராந்திய சபைக்கு ஆதரவானவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வடக்கில் சுயாட்சியை வாங்கிக்கொண்டு, பின்னர் மலையக தன்னாட்சி பிராந்தியம் குறித்து இவர்கள் பேசியிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபை மலையகத்துக்கு குரல் கொடுத்துள்ள நிலையில் தம்மைப் பற்றியும் சற்று சிந்திக்க வேண்டுமென்றும் இன்னும் சிலர் தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் மலையக அமைப்புக்களும், புத்திஜீவிகள் பலரும் மலையகத்துக்கு தனியான அதிகார அலகு கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இது முக்கிய தேவையாகவும் கருதப்பட்டது எனினும், மலையக அரசியல்வாதியொருவர் தனியான அதிகார அலகு தேவையில்லை என்ற பொருள்படக் கூறியிருந்தமை தொடர்பிலும் சர்ச்சைகள் மேலெழுந்தன. எனினும் இக்கருத்து சம்பந்தப்பட்ட கருத்தாகும் என்றும் மலையகத்தின் கருத்தோ அல்லது அவர் சார்ந்த அமைப்பின் கருத்தோ இல்லை என்று பின்னர் சமாதானமும் சொல்லப்பட்டமை உங்களுக்கு நினைவிருக்கக் கூடும்.
மலையக மக்களும், அமைப்புக்களும் ஏனையோரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் அரசியலமைப்பு மாற்றம் குறித்த பொதுமக்கள் கருத்தறியும் குழு அரசாங்கத்திடம் இது குறித்து பரிந்துரைகளை செய்திருந்தது. தன்னாதிக்க அரசியலதிகார அலகு, காணியுரிமை, வீட்டுரிமை, விசேட வசதிகள், பாரபட்சமின்மை தொடர்பான ஆணைக்குழுவின் உருவாக்கம், பகிரங்க சேவை மனக்குறை ஆணைக்குழு என்பன உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் மலையக மக்களின் நலன் கருதி அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தது. மலையக மக்களின் பரிந்துரைகளை அரசாங்கம் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளுமென்று அரசியலமைப்பின் மாற்றம் குறித்து மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ். விஜயசந்திரனிடம் வினவியிருந்தேன். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய அரசில் மலையகத்தவர்கள் முக்கிய இடம் பிடித்துள்ளனர். பரிந்துரையினூடாக மலையக மக்களின் பிரச்சினைகளை ஒரு தேசிய பிரச்சினையாக உருவாக்கி இருக்கின்றோம். பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். எனவே, அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் விலகிச் செல்ல முடியாது. மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார் என்று விஜயசந்திரன் என்னிடம் குறிப்பிட்டுக் கூறினார்.
மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களின் வரலாறு இலங்கையைப் பொறுத்தவரையில் கசப்பானததாகவே இருந்து வந்துள்ளது. இந்த கசப்பான ஒரு வரலாற்றை இனியும் நாம் முன்னெடுத்துச் செல்லக்கூடாது. சிறுபான்மை மக்களின் கருத்துக்கள் உரியவாறு கிரகிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பில் மலையக மக்களின் நலன் சார்ந்த விடயங்கள் உரியவாறு உள்ளீர்ப்பு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் சோ.சந்திரசேகரன் மிகவும் ஆழமாகவே தனது கட்டுரையொன்றில் வலியுறுத்தி இருக்கின்றார். எவ்வாறெனினும் புதிய அரசியலமைப்பானது எல்லா இன மக்களினதும் உரிமைகளுக்கும் கைகொடுப்பதாக இருக்க வேண்டும். மாறாக சிறுபான்மை மக்களை கை கழுவிவிடுவதாக இருக்கக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
துரைசாமி நடராஜா