ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இடமளியோம்
உள்ள பதவியும் இல்லாமல் போகும் என்கிறது ஐ.தே.க.
(எம்.எம்.மின்ஹாஜ்)
இலங்கை வரலாற்றில் பொருளாதார, அரசியல் ரீதியாக பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்தும் வருடமே 2017 ஆம் ஆண்டாகும். இந்த வருடத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இத்தகைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ புதுவருடத்தில் ஆட்சியை கவிழ்ப்போம் என்று கூறுவது பகல் கனவாகும். எக் காரணம் கொண்டும் ஆட்சி மாறாது. இவரது கூற்றுக்கு நாம்
அஞ்சபோவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார். புத்தாண்டு முதல் சதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.க நல்லாட்சியை ஒற்றுமையுடன் முன்னெடுத்து செல்லும். நல்லாட்சிக்கு காலக்கெடு விடுக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு புத்தாண்டில் தற்போது உள்ள பதவிகள் கூட இல்லாமல் போகும் .முன்னாள் ஜனாதிபதியின் கருத்து குறித்து அலட்டிகொள்ள தேவையில்லை.மஹிந்த ராஜபக்ஷ அடுத்த கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தயாராகி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது என்ன செய்வது என்பது தெரியாமல் தட்டுத்தடுமாறிய வண்ணம் செயற்படுகின்றார். 2017 ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்போம் என வீரவசனம் பேசி திரிகின்றார். நல்லாட்சியை 2017 இல் கவிழ்க்க முடியும் என பகல் கனவு காண்கின்றார். தற்போது இவரினால் பகல் கனவு மாத்திரமே காணமுடியும்.
2017 ஆம் ஆண்டு ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் பயணம் தொடர்ந்து செல்லும். அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இவர்களினால் செய்ய முடியாததை கூறி மனதை ஆற்றிக்கொள்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் 2017 ஆம் ஆண்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடமாகும். இலங்கை அரசியலில் பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன் பொருளாதார துறையில் பல்வேறு இலக்குகளையும் வெற்றிகளையும் அடைந்து கொள்ளும் திருப்பு முனைக்குரிய ஆண்டாகும். புது வருடத்தில் துரித அபிவிருத்திக்கான பல்வேறு திட்டங்கள் அமுல்ப்படுத்தப்படவுள்ளன. இதற்கு நல்லாட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் என்ற வகையில் நாம் தயாராக உள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் திட்டங்களுக்கான திருப்புமுனையாக அமையும் அடுத்த வருடத்தில் நல்லாட்சியை கவிழ்ப்பதாக கூறுவது நகைப்புகுரியது மாத்திரமின்றி அது மஹிந்த ராஜபக்ஷவின் பகல் கனவாகும். இந்த வீரவசனங்களுக்கு நாம் அஞ்சப்போவதில்லை. இவரது கூற்றை நல்லாட்சி அரசாங்கம் அலட்டிக்கொள்ளாது.
2017 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு காலக்கெடு விடுக்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு புதுவருடத்தில் தற்போது இருக்கும் பதவிகள் கூட இல்லாமல் போகும். மஹிந்த ராஜபக்ஷ அடுத்த கூட்டுறவு சங்க தேர்தலில் எப்படி வெற்றி பெறமுடியும் என்ற முயற்சியில் களமிறங்கியிருக்கின்றார். அவரினால் ஒருபோதும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்க முடியாது.
அடுத்த வருடம் முதல் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் ஒற்றுமையான பயணத்தை ஆரம்பித்து நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள