வியாழன், 15 டிசம்பர், 2016

இலங்கையில் பிரச்சினைகளுக்கு காரணம் புலம்பெயர் மக்களா?? - தாக்கவும் தயார்..! ஆரம்பமாகும் புதுப் பிரச்சினை


இலங்கையில் பிரச்சினைகளுக்கு காரணம் புலம்பெயர் மக்களா? - தாக்கவும் தயார்..! ஆரம்பமாகும் புதுப் பிரச்சினை

நேற்றைய தினம் இனவாதம் பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த மட்டக்களப்பு சுமனரதன தேரர் பிணையில் விடுதலையாகி இருந்தார்.
எனினும் இந்த விடுதலையின் பின்னரும் மீண்டும் அவர்களுடைய பழைய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதாகவும் குறிப்பாக முன்னரை விடவும் இப்போது அதிக ஆதரவுடன் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பில் அதிக வழக்கறிஞர்கள் முன்னிலையாகி இருந்ததோடு வழக்கு நிறைவடைந்த பின்னர் விஷேட கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பிக்குமார்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் அதனை நேரடியாக சமூக வலைத்தளங்களிலும் பதிய விட்டுள்ளனர். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
இதன் போது கருத்து தெரிவித்த சுமனரதன தேரர்,
நாட்டில் நீதி முறையாக நடைபெறாத காரணத்தினாலேயே இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள ஆனாலும் இதனை இப்படியே விட்டு விடமாட்டேன்.
இன்று எனக்கு கிடைத்தது மாபெரும் வெற்றி, ஆனால் இத்தோடு நிறுத்திவிடக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். என்னை அனைவருமாக சேர்ந்து காப்பாற்ற வேண்டும் எனவும் சுமனரதன தேரர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கில் முன்னிலையான அஜித் பிரசன்ன எனும் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கும் போது,
சிங்களவர்கள் இப்போது சிறுபான்மையின மக்களாக மாறி வருகின்றனர். ஒரு காலத்தில் அதிகமாக சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் இப்போது அவர்கள் அங்கு குறைந்த அளவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
60 வீதமாக தமிழர்களும் முஸ்லிம்களுமே இப்போது இருக்கின்றார்கள். இவ்வாறாக பெறும்பான்மையின மக்களான சிங்களவர்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர்.
மேலும் இப்போது புதிதாக அரசியல் யாப்பு கொண்டு வரப்படுகின்றது. அதிகாரப்பகிர்வு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவாம் ஆனால் இப்போது நாட்டில் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகளும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுமே. புதிய அரசியல் யாப்பு தனிநாடு வேண்டுவது வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த புலிகளே. நோர்வே, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இருந்தே இப்போது காய் நகர்த்தப்பட்டு வருகின்றது.
அவர்களின் தேவை என்ன? ஏன் இலங்கையை ஆக்ரமிக்க நினைக்கின்றீர்கள். இந்தியாவில் ஜெயயலிதா அமைத்த தமிழ்நாடு இருக்கின்றதே அதனை எடுத்துக்கொள்ளுங்கள், இலங்கையை சொந்தம் கொண்டாட நினைக்காதீர்கள்.
புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது அப்படி வந்தால் நாம் சிவில் நீதிகளை மீறுவோம். எதற்காகவும் அஞ்ச மாட்டோம் நாம் எதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றோம்.
இந்த அரசில் யாப்பை தோல்வியடைய செய்ய நாம் எந்த விதமான முடிவுகளையும் எடுப்போம், கலவரங்களை தாக்குதல்களை ஏற்படுத்தவும் தாயாராகவே இருக்கின்றோம் இதற்காக அனைவரும் ஒன்றிணையுங்கள்.
இவை அஜித் பிரசன்ன எனும் வழக்கறிஞர் கூறியுள்ளவை. இவர் ஏற்கனவே பல இனவாத வழக்குகளில் முன்னிலையாகி வரும் வழக்கறிஞர் என்பதும் சிங்கலே போன்ற அமைப்புகளுடன் இணைந்துள்ளவர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதேபோன்ற கருத்தே அதிகமாக அங்கு பலராலும் வலியுருத்தப்பட்டது. இதேவேளை இவர்களது ஒன்று கூடல் மற்றும் உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இவர்களது இந்த கருத்துகள் மூலம் புதிய அரசியல் யாப்புக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதும் அதற்காக எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஓர் அழைப்பாகவே அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் இவ்வாறாக கருத்துகள் பகிரப்படுவதால் அரசியல்வாதிகளை விடவும் இவர்களின் கருத்து நேரடியாக மக்கள் மத்தியில் சென்று விடக் கூடும்.
அதனால் இவை மக்களிடையே எந்தவிதமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்பதும் அறிந்த காரணத்தினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், முதலாவதாக ஒரு பிக்கு தனியாக ஆரம்பித்த இந்தப்பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து செல்வதற்கும், தற்போது அது புதிய அரசியல் யாப்பு புலம்பெயர்ந்த மக்கள் என்ற வகையில் திசை திரும்பவும் இந்த வகையிலான கருத்துகளே காரணம் எனலாம்.
இதேவேளை இப்போது இவர்கள் கையில் எடுத்துள்ள புதிய ஆயுதம் விடுதலைப்புலிகள் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் மூலமாகவே இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது என்பதே ஆகும்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் இனவாதமாக சித்தரிக்கப்பட்டு தமிழர்கள் என்றால் புலிகள் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு வரும் வேளையில் இவ்வாறாக செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது அல்ல.
முடிந்தளவு இதனை கட்டுப்படுத்தப்படாமல் இப்போதைக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அரசு முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியாது என்றே கூறப்படுகின்றது.

தொடர் கதையாகும் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கடத்தல் விவகாரம்


இலங்கையில் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகள் வலுப்பெற்று காணாமல் போனோருக்கான அலுவலகம் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. ஆனாலும் இந்த வேளையில் இலங்கையின் தலை நகரான கொழும்பில் 2006 களில் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு உபவேந்தரைப் பற்றிப் பேச வேண்டிய தேவை இருக்கிறது.
1990 என்பது வடக்கு கிழக்குத் தமிழர்களின் வாழ்நாள்களில் மறக்கப்பட முடியாதது. அக்காலப் பகுதிதான் இராணுவத்தினரால் கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள் கொல்லப்படுவதற்காக அள்ளிச் செல்லப்பட்ட காலமாகும். அதனை விடவும் அச்சமான காலப் பகுதியாக 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு 2009 ஆம் ஆண்டு என்பன இருந்தன. இது கிழக்குத் தமிழர்கள் வரலாற்றில் ஒரு கறை படிந்த காலமாகும். ஏன் இலங்கையின் வரலாற்றிலுமே என்று கூடச் சொல்லலாம். காணாமல் போதல் என்ற எண்ணிக்கையினை அதிகமாக இந்தக் காலப்பகுதியே கணக்கிட்டது. அச்சம், பீதி, பயம் என்கிற அத்தனை வகையான நெருக்குதல்களையும் சுமந்த காலமாகும்.

அந்தக் காலப்பகுதியில் தான் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றிய காலப் பகுதியில் கடந்த 15.12.2006 அன்று கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அக்காலத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த தலை நகர் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டார். இந்த நேரத்தில் இவரது கடத்தலானது மிகப் பெரியளவில் பேசப்பட்டாலும் நம்முடைய விடயம் நமக்குத்தான் பெரியது என்பது போல் காலம் செல்லச் செல்ல அது அக்காலப் பகுதியில் நடைபெற்ற எல்லாக் கடத்தல்கள் போலவே மறக்கப்பட்ட விடயமாகவும் குடும்பத்தாருக்கே உரியதாகவும் ஆகிப் போனது.

‘கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 6 ஆவது உபவேந்தராக இருந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பேரிழப்பாகும். இவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்பது அனைவரதும் வேண்டுகோளாக இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கடத்தல் நடத்தப்பட்டு 10 வருடங்கள் நிறைவில் அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்றும் அமைதிப் போராட்டம் ஒன்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அச்சங்கத்தின் தலைவர் காலாநிதி ஜே.கென்னடி தலைமையில் தற்போதைய உபவேந்தர் ரி.ஜெயசிங்கம் நாட்டில் இல்லாத வேளையில் நடத்தப்பட்டிருந்தது.

1981 ஆம் ஆண்டிலிருந்து விரவுரையாளராகவும் விடுதிக் காப்பாளராகவும் சிறந்த நிர்வாகியாகவும் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு பல்கலைக்கழகத்தினை சமூகத்துக்குக் கொண்டு சென்றவராக ரவீந்திரநாத் செயற்பட்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராக பதவியேற்றதிலிருந்து பேராசிரியர் ரவீந்திரநாத்தின் பணி முதன்மை பெற்றதாக இருந்தது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் மருத்துவ பீடம் 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் உருவாக்கப்பட்டமை ஒரு மைல் கல்லாக அமைந்த விடயமாகும்.

1986 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகும் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் பேராசிரியர் கே.டி.அருட்பிரகாசம், பேராசிரியர் எஸ்.சந்தானம், பேராசிரியர் ஜீ.எப்.இராஜேந்திரா, பேராசிரியர் எம்.எஸ்.மூக்கையா, பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கலாநிதி என்.பத்மநாதன், கலாநிதி கே.கோவிந்தராஜா ஆகியோர் இதுவரை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களாக கடமையாற்றியிருக்கிறார்கள். பதில் உபவேந்தர்களாக கலாநிதி சி.வை.தங்கராஜா மற்றும் கலாநிதி கே.பிரேம்குமார் ஆகியோரும் கடமையாற்றியிருக்கின்றனர். இப்போது பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் உபவேந்தராக இருந்து வருகிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கிழக்குக்கான கட்டளைத் தளபதியாக இருந்த கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் 2004 ஆம் ஆண்டு மார்ச்சில் பிரிந்தமையானது இலங்கையின் கிழக்கில் மாத்திரமல்ல முழு ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திலும் ஒரு பெரும் அதிர்ச்சிகரமான பாதிப்பொன்றை ஏற்படுத்தியது.

அதனையடுத்து புலிகள் இயக்கத்தின் கிழக்கு பகுதி தளபதி கருணா என்ற முரளிதரன் “கிழக்குப் பகுதி போராளிகளை பிரபாகரன் புறக்கணித்து வருகின்றார். எனவே கிழக்குப் பகுதியில் நாங்கள் தனியாக செயல்படுவோம்” என்று கருணா 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போர்க் கொடி தூக்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு இடையே பிளவு வலுத்த நிலையில் இரு பிரிவினருக்கும் இடையே எந்த நேரத்திலும் பயங்கரமாக மோதல் வெடிக்கும் என்ற சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தின் வெருகலாற்றுப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் கருணா தரப்பினருக்குமிடையில் நடைபெற்ற பாரிய மோதலில் வெருகலாறு இரத்த வெள்ளமானது.

கனரக பீரங்கி மற்றும் இயந்திர துப்பாக்கிகளால் இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக வெருகல் நதிக் கரையில் நடந்த இந்த சண்டையில் இரு தரப்பிலும் 300 க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் பலியானார்கள். கருணா ஆதரவாளர்கள் 300 க்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு இடையே பயங்கரமாக வெடித்த இந்த சண்டை இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் மோதலை தொடர்ந்து இலங்கையின் முக்கிய பகுதிகளில் இலங்கைப் படையினர் ஊசார் படுத்தப்பட்டனர்.

இச்சண்டையானது நிரந்தரமாகவே விடுதலைப் புலிகளின் பிழவினை உறுதிப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் பின்னர் தான் கிழக்கில் விடுதலைப் புலிகள் கருணா தரப்பினரைக் கொல்வதும் அவர்கள் விடுதலைப் புலிகள் தரப்பினரைக் கொலை செய்வதும் என்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உண்மையில் விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைப் புலிகளின் பிளவிலும் பெரும் பங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் வகித்திருந்தது.

இந்தப் பிளவு ஏற்பட்டதன் பின்னரான காலப் பகுதியானது பெரும் அச்சம் நிறைந்ததொன்றாகக் காணப்பட்டது. இது சகோதரர்களையே நம்பிக்கையீனத்துடன் பார்க்க வேண்டிய சூழலைத் தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தியிருந்தது. இந்த சிக்கலான சூழலிலே கிழக்கிலிருந்த பெரும்பாலான புத்தி ஜீவிகள் கொல்லப்பட்டதும் கடத்தப்பட்டதும் கடுமையான அச்சுறுத்தல்களின் பின்னர் விடுவிக்கப்பட்டதும் பலருக்கு பல்வேறு முத்திரைகள் குத்தப்பட்டதும் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை உருவானதும் எனப் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

அந்தப் பிளவின் பின்னர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் இலங்கையின் தலை நகரான அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த தலை நகர் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டார். நாட்டில் நடந்த எந்தக் கடத்தலுக்கும் காரணம் வெளிப்படாதது போலவே இந்தச் சம்பவத்தின் உண்மையும் வெளிப்படவில்லை.

வரலாறுகள் பல இருந்தாலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்ற கவனயீர்ப்பை இப்போராட்டம் ஏற்படுத்தியிருந்தது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்களாகின்றன. இந்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்தக் கவனயீர்ப்பு நடத்தப்பட்டமையானது பல கேள்விகளை தோற்றுவித்திருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள், நிர்வாக உத்தியோகத்தர்கள், சங்க உத்தியோகத்தர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், சங்க அதிகாரிகள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.

இந்த போராட்டத்தின் போது கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் காலாநிதி ஜே.கென்னடி, “முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பேரிழப்பாகும். இவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

உண்மைகள் மறைக்கப்படுகின்ற போது அவற்றினை வெளியே கொணருவதற்கான முயற்சிகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும். ஆனாலும் அந்த முயற்சிகள் பயனற்றுப் போகின்ற சந்தர்ப்பங்களே அதிகம் என்பது வரலாறாகும்.

இலங்கையில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டமானது பல்வேறு வடுக்களை இப்போதும் வைத்தே இருக்கிறது. அஹிம்சை வழிப் பேராராட்டங்கள், தந்தை செல்வா காலத்து அற வழிப் போராட்டங்கள், விடுதலைப் புலிகளின் உருவாக்கம் எல்லாம் தோற்றுப் போன நிலையில் நாட்டில் உருவான ஆட்சி மாற்றங்கள் நாட்டின் சமாதானத்துக்கான வழியை உருவாக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக துணிந்து களத்தில் இறங்கிய ஜனாதிபதியின் நெஞ்சுரமே இப்போதும் பாராட்டப்படுகிறது. அதன் பின்னர் அரசில் ஏற்பட்ட புதிய மாற்றமானது எத்தனையோ விடயங்களைச் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதில் ஒன்றுதான் காணாமல் போனோர் தொடர்பான சட்டம்.

இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு விட்டன. இது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களானது காணாமல் போனோரது உறவினர்களாலும் வேறு பலராலும் நடத்தப்படுகின்றன. எது எவ்வாறிருந்தாலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரது கடத்தலானது உலகளவில் கேள்வியை ஏற்படுத்தியது போலவே அச்சத்தினையும் அதிகரித்திருந்த ஒரு விடயமாகும்.

கிழக்கின் அரசியல், சமூக, பாதுகாப்பு நிலைமைகளுக்கு அப்பால் கொழும்பு என்கிற அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் நடைபெற்ற பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கடத்தலுக்கு நியாயம் கேட்டுத் தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் அவரது கல்விச் சமூகத்தால் விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு குற்றம் கண்டறியப்படுமா என்பதே எல்லோருக்கும் எழுந்திருக்கின்ற கேள்விக் குறியாகும்.

T hanks to  Tamilwin 

உச்ச நீதிமன்றத்திற்கு மேலதிகமாக விசேட அரசியலமைப்பு நீதிமன்றம்

  


அடம்பிடிக்கும் கூட்டமைப்பு...! அறிவுரை கூறும் அரசாங்கம்.

அடம்பிடிக்கும் கூட்டமைப்பு...! அறிவுரை கூறும் அரசாங்கம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி என அடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்ட தீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள் பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பதமானது பெரும்பான்மை இனத்தவரிடையே பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டுமெனவும், அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமனதோடு செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், கிடைக்காது எனத் தெரிந்த ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பதை விட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு வடிவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லையென குறிப்பிட்டுள்ள அவர், கூட்டமைப்பு இதனை உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.