வியாழன், 15 டிசம்பர், 2016

இலங்கையில் பிரச்சினைகளுக்கு காரணம் புலம்பெயர் மக்களா?? - தாக்கவும் தயார்..! ஆரம்பமாகும் புதுப் பிரச்சினை


இலங்கையில் பிரச்சினைகளுக்கு காரணம் புலம்பெயர் மக்களா? - தாக்கவும் தயார்..! ஆரம்பமாகும் புதுப் பிரச்சினை

நேற்றைய தினம் இனவாதம் பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த மட்டக்களப்பு சுமனரதன தேரர் பிணையில் விடுதலையாகி இருந்தார்.
எனினும் இந்த விடுதலையின் பின்னரும் மீண்டும் அவர்களுடைய பழைய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதாகவும் குறிப்பாக முன்னரை விடவும் இப்போது அதிக ஆதரவுடன் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பில் அதிக வழக்கறிஞர்கள் முன்னிலையாகி இருந்ததோடு வழக்கு நிறைவடைந்த பின்னர் விஷேட கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பிக்குமார்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் அதனை நேரடியாக சமூக வலைத்தளங்களிலும் பதிய விட்டுள்ளனர். காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
இதன் போது கருத்து தெரிவித்த சுமனரதன தேரர்,
நாட்டில் நீதி முறையாக நடைபெறாத காரணத்தினாலேயே இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள ஆனாலும் இதனை இப்படியே விட்டு விடமாட்டேன்.
இன்று எனக்கு கிடைத்தது மாபெரும் வெற்றி, ஆனால் இத்தோடு நிறுத்திவிடக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். என்னை அனைவருமாக சேர்ந்து காப்பாற்ற வேண்டும் எனவும் சுமனரதன தேரர் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கில் முன்னிலையான அஜித் பிரசன்ன எனும் வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கும் போது,
சிங்களவர்கள் இப்போது சிறுபான்மையின மக்களாக மாறி வருகின்றனர். ஒரு காலத்தில் அதிகமாக சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் இப்போது அவர்கள் அங்கு குறைந்த அளவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
60 வீதமாக தமிழர்களும் முஸ்லிம்களுமே இப்போது இருக்கின்றார்கள். இவ்வாறாக பெறும்பான்மையின மக்களான சிங்களவர்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர்.
மேலும் இப்போது புதிதாக அரசியல் யாப்பு கொண்டு வரப்படுகின்றது. அதிகாரப்பகிர்வு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவாம் ஆனால் இப்போது நாட்டில் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகளும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுமே. புதிய அரசியல் யாப்பு தனிநாடு வேண்டுவது வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த புலிகளே. நோர்வே, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் இருந்தே இப்போது காய் நகர்த்தப்பட்டு வருகின்றது.
அவர்களின் தேவை என்ன? ஏன் இலங்கையை ஆக்ரமிக்க நினைக்கின்றீர்கள். இந்தியாவில் ஜெயயலிதா அமைத்த தமிழ்நாடு இருக்கின்றதே அதனை எடுத்துக்கொள்ளுங்கள், இலங்கையை சொந்தம் கொண்டாட நினைக்காதீர்கள்.
புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது அப்படி வந்தால் நாம் சிவில் நீதிகளை மீறுவோம். எதற்காகவும் அஞ்ச மாட்டோம் நாம் எதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றோம்.
இந்த அரசில் யாப்பை தோல்வியடைய செய்ய நாம் எந்த விதமான முடிவுகளையும் எடுப்போம், கலவரங்களை தாக்குதல்களை ஏற்படுத்தவும் தாயாராகவே இருக்கின்றோம் இதற்காக அனைவரும் ஒன்றிணையுங்கள்.
இவை அஜித் பிரசன்ன எனும் வழக்கறிஞர் கூறியுள்ளவை. இவர் ஏற்கனவே பல இனவாத வழக்குகளில் முன்னிலையாகி வரும் வழக்கறிஞர் என்பதும் சிங்கலே போன்ற அமைப்புகளுடன் இணைந்துள்ளவர் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதேபோன்ற கருத்தே அதிகமாக அங்கு பலராலும் வலியுருத்தப்பட்டது. இதேவேளை இவர்களது ஒன்று கூடல் மற்றும் உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இவர்களது இந்த கருத்துகள் மூலம் புதிய அரசியல் யாப்புக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதும் அதற்காக எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஓர் அழைப்பாகவே அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சமூக வலைத்தளங்களில் இவ்வாறாக கருத்துகள் பகிரப்படுவதால் அரசியல்வாதிகளை விடவும் இவர்களின் கருத்து நேரடியாக மக்கள் மத்தியில் சென்று விடக் கூடும்.
அதனால் இவை மக்களிடையே எந்தவிதமான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என்பதும் அறிந்த காரணத்தினாலேயே இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், முதலாவதாக ஒரு பிக்கு தனியாக ஆரம்பித்த இந்தப்பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து செல்வதற்கும், தற்போது அது புதிய அரசியல் யாப்பு புலம்பெயர்ந்த மக்கள் என்ற வகையில் திசை திரும்பவும் இந்த வகையிலான கருத்துகளே காரணம் எனலாம்.
இதேவேளை இப்போது இவர்கள் கையில் எடுத்துள்ள புதிய ஆயுதம் விடுதலைப்புலிகள் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் மூலமாகவே இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்படுகின்றது என்பதே ஆகும்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் இனவாதமாக சித்தரிக்கப்பட்டு தமிழர்கள் என்றால் புலிகள் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு வரும் வேளையில் இவ்வாறாக செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது அல்ல.
முடிந்தளவு இதனை கட்டுப்படுத்தப்படாமல் இப்போதைக்கு புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அரசு முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியாது என்றே கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள