புதன், 16 மார்ச், 2011

மூச்சை நிறுத்தி விடு...

வெண்பாவுக்கும்  படத்திற்கும் சத்தியமா சம்பந்தமில்லை, ரஜனியின் ஸ்டைல்போல் இருந்தது எடுத்துப் போட்டேன்.


கர்ப்பச் சிறை நீங்கிக் காலப் புழுதி படர்
இப்புவிமேல் ஓட்டில் இறங்கிய நாள்-ஒப்பிவந்து 
வாழ்த்திவரித்த சுற்றம் வருந்தும்படி குடியை 
வீழ்த்தி விடப் பெற்றேன் விசர்!

அல்லும் பகலும் அநியாய வன்செயல்கள் 
கொள்ளும் அயல்வீட்டுத் தோழர் குழாம்-சொல்லும் 
படி ஆடிப் பெற்ற பழிபாவம் தாங்க 
முடியாது வேண்டாம் இம் மூச்சு.

நாட்டைக் கெடுக்கும் நடத்தைகளால் ஆட்கொண்ட 
கூட்டைச் சுமக்குங் கொடியோனின் -சீட்டைக் 
கிழித்துக் நரகக் கிடங்கிற்குள் தள்ளா(து)
ஒழித்துள்ள கூற்றே....உணர்!..

பொய்யும் களவும் புரட்டும் அழுக்காறும் 
செய்யும் எனது சிரந்தனைக் -கொய்யும் 
திருநாட் பதிவேட்டைத் தேடித் திருத்தும்
கருமத்தைச் செய்வாய் கடிது.

கள்ளனைய கன்னியரின் கற்பார் மனஉணர்வை
மண்ணாக்கி விட்டே மறுதலித்த -என்னுயிரைக் 
கொள்ளாத கூற்றம் கொடுங்குற்ற மென்றுலகம்
சொல்லாதோ?  வீசாய் சுருக்கு....

சூது சுரண்டல் சுகமற்ற வாதுரைத்தல் 
பாதகரின் பக்கம் பரிந்து நிற்றல் -வேதனையைக் 
கூட்டிப் பெருக்குங் குடிப் பழக்கம் இத்தனையும் 
கேட்டுக் கொள் என்றன் மெய்க் கீர்த்தி!

ஊரைக்க முடியா உலகத்தின் தீமைச் 
சரக்கெல்லாம் சேர்ந்த சரிதம் -ஒறுக்குதின்(று)
ஒட்டிவா கூற்றே உமக்கென் குறைக் கதையைக் 
பாடுகின்றேன் இல்லைப் பயம் .... 
      
(வேறு)

நடை புதிது ...கதை புதிது ...நயந்துரைக்கும் யாப்பின் தொடை புதிது ....
இப்பா, இது வரையும் பிரசுரமோ ஒலிபரப்போ பெற்றதில்லை ..உண்மை !
தடை எதுவும் விதியாமல் தங்கள் கவிதைப் போட்டிப் படையலுக்குள்
சேர்த்தருள்க; பணிந்துரைத்தேன்.
வணக்கம்.

இவ்வண்ணம்,

இடையீடு இல்லாமற் கவிபுனையுந் அடியேன் ...

இராஜ பாரதி.

(எனது குருவின் கவிதை அவர் எழுதிய ஒரு   கையெழுத்துப் பிரதியின் பிரதி வடிவம்.)