சனி, 26 நவம்பர், 2016




தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள்... முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த குடி நம் தமிழ்குடி! பகிருங்கள்
==================================================================================================================
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்று நாம் காலரைத் தூக்கி பெருமைபட்டுக்கொள்ள மேலும் ஓர் ஆதாரம் கிடைத்துள்ளது. சென்னையிலிருந்து 58 கிலோமீட்டர் தூரத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது நடந்துவரும் அகழ்வாராய்ச்சியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், உலகம் முழுக்க தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகளும் நம் வணிகச் சிறப்பை பறை சாற்றுகின்றன. பட்டறைப் பெரும்புதூர் சென்று இறங்கினோம்.
சுற்றுமுற்றும் ஆளரவமற்ற பொட்டல் வெளி. தூரத்தில் விறகுகட்டை தூக்கிக் கொண்டு வந்த ஒருவர் அகழ்வாராய்ச்சி நடைபெறுமிடத்திற்கு வழி சொன்னார். ஊர் மக்கள் எல்லோருக்குமே அகழ்வாராய்ச்சி பற்றி தெரிந்திருக்கிறது. பெரும்பாலான ஊர் மக்கள் அங்கேதான் கூடி அகழ்வாய்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரை சந்தித்துப் பேசினோம்.
ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வோம். இதுவரையிலும் தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் குழு 38 இடங்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறது. கடந்த வருடம் ராமநாதபுரம் அழகன்குளத்தில் களஆய்வு நடத்தினோம். இந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதியிலிருந்து இங்கே ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த மாவட்டம் கற்கால வரலாற்றில் முக்கியமான மாவட்டமாக விளங்குகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டுமே இதுவரையிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது.
கொசஸ்தலை ஆறு ஓடும் பகுதியாக பட்டறை பெரும்புதூர் இருப்பதால் இந்த ஊரிலும் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சூழல்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், கடந்த ஆண்டு இங்கே முதற்கட்ட ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த ஊரில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த ஊரிலுள்ள ஆணைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய மூன்று இடங்களில் ஆய்வுகள் செய்வதற்கான 12 குழிகள் அமைக்கப்பட்டது.
இதில் கற்கால மனிதர்கள், இரும்புக்கால மனிதர்கள் மற்றும் சங்ககால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட மண்பான்டங்கள், காவி வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள், வழவழப்பான மண்பாண்டங்கள், பாறை ஓவியங்களில் வரையக்கூடிய மண்பாண்டங்கள், கல்மணிகள், சுடுமண்ணாலான மணிகள், செம்புப்பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், கூம்பு வடிவ ஜாடிகள், யானை தந்தத்தினாலான ஆபரணங்கள் ஆகியவையும் தமிழ்பிராமி எமுத்துகள் கொண்ட பானை ஓடுகளும் ரௌலட்டட் மண்பானைகளும் துளை கொண்ட கூரை ஓடுகளும் கிடைத்தன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பழங்கற்காலம், இடைக்கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகிய மூன்று பண்பாடுகளையும் கொண்ட கற்கருவிகளும் கற்கோடாரிகளும் இந்த ஊரில் ஒன்றாக கிடைத்திருப்பதுதான்.
மேலும் சுடுமண்ணாலான உறை கிணறுகள் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்திலேயே மிக அதிகஎண்ணிக்கையிலான உறைகிணறுகள் இங்குதான் கிடைத்திருக்கிறது.
இதுவரையிலும் முப்பத்தி இரண்டை தாண்டிக் கொண்டே போகிறது. தண்ணீர் ஊற்றெடுப்பதால் மற்ற ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுமே என்று அதை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறோம்.
தமிகத்திலேயே மிக அரிதாக கிடைக்கக்கூடிய இரண்டு பக்கமும் கூர்மையான முனைகளைக் கொண்ட கத்தி இங்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் கடைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடு கிடைத்திருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில்தான் ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக இங்கு கிடைத்திருக்கிறது.
30 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தை கடைக்கற்காலம் என்றும் 10 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை முன்கற்காலம் என்றும் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 3 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலத்தை புதிய கற்காலம் என்றும் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை இரும்புக் கற்காலம் என்றும் வரையறுக்கிறோம். அதன் அடிப்படையில் பார்த்தால் இங்கு தொடர்ச்சியாக மனித இனம் வாழ்ந்து வருவதற்கான அனைத்து சான்றுகளும் கிடைத்திருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே இந்த ஆராய்ச்சி குறிப்பிடத்தக்க முக்கியமான ஆராய்ச்சியாகத் திகழும். இன்னும் ஒருசில தினங்களில் இந்த ஆராய்ச்சிப்பணிகளை முடித்துவிட்டு தமிழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிடம் ரெக்கார்டு கொடுத்துவிடுவோம். அதன்பிறகு, திருவள்ளுரிலுள்ள மியூசியத்தில் இந்த பொருட்கள் அனைத்தையும் மக்கள் பார்வைக்காக வைத்து விடுவோம் என்கிறார் பாஸ்கர்.
தமிழக தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி இயக்குனரான துளசிராமனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது,
திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பூண்டிக்கு அருகே அள்ளிக்குழி என்ற மலைத்தொடரில் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல் திருவள்ளுரைச் சுற்றிலும் பல இடங்களில் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. தற்போது கொசஸ்தலை ஆறு ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் பாலாறுதான் ஓடிக்கொண்டிருந்தது. காலப்போக்கில் அது தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வழியில் சென்றுவிட்டது. இப்போதும் கூட கொசஸ்தலை ஆற்றை பழைய பாலாறு என்று அழைப்பார்கள்.
சங்ககாலத்தில் காஞ்சிபுரம் பெரிய தலைநகரமாக விளங்கியது. தொண்டைமான் இளந்தரையன் எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வணிகர்களும், வழிப்போக்கர்களும் வடநாட்டிலிருந்து காஞ்சிக்கு பண்பாடு மற்றும் வணிகப் போக்கிற்காக வருவார்கள். அந்த வழியாக வருபவர்கள் வடுகப்பெருவழி அதாவது பட்டறை பெரும்புதூரில் தங்கிச் செல்வார்கள். வடுகப்பெருவழி என்று சொல்லக்கூடிய இடத்தில் குடியிருப்புகளும், உறைகிணறுகளும் அமைந்திருக்கும்.
நான் தொல்பொருள் ஆய்வாளராகப் பணியாற்றியபோதே பட்டறைப் பெரும்புதூரில் மேற்பரப்பு ஆராய்ச்சி செய்தோம். அப்போதே 2 ஆயிரம் ஆண்டிற்கு முந்தைய கருப்பு மற்றும் வெள்ளைப் பானைகள் கிடைத்தன. தற்போது கொசஸ்தலை ஆறு ஓடும் பகுதிகளில் 12 அகழாய்வுக்குழிகள் தோண்டப்பட்டன. ஒரு அகழாய்வுக்குழி என்பது 4 க்கு 4 மீட்டர் அளவாகும். இதில் அடுக்கடுக்காக குழிகள் தோண்டப்படும். முதல் அடுக்கில் சோழர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்தன. இரண்டாம் அடுக்கில் பல்லவர்கள் வாழ்ந்த சுவடுகளும் மூன்றாம் அடுக்கில் சங்ககாலத்தைச் சேர்ந்த சுவடுகளும் நான்காம் அடுக்கில் கற்காலத்தைச் சேர்ந்த சுவடுகளும் ஐந்தாம் அடுக்கில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளும் கிடைத்தன.
இந்த ஆராய்ச்சியில் மிகவும் ஆச்சரியமான பல சுவடுகள் கிடைத்தன. அதில் கண்ணிற்கு மை தீட்டக்கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட செப்புத்தகடு ஒன்றும் கார்நீலியன் எனும் விலையுயர்ந்த அலங்காரம் செய்யப்பட்ட மணிகளும், கார்நீலியன் கண்ணாடி மணிகளும், சங்கு வளையல் துண்டுகளும் முக்கியமானவை.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி அணிந்திருக்கும் சங்கினாலான வளையத்தை போன்ற சங்கு வளையல்கள் அதிகமாக கிடைத்தன. இதுபோன்ற மணிகளையும் அணிகலன்களையும் செல்வந்தர்கள் மட்டும்தான அப்போது உபயோகித்திருக்கிறார்கள். இங்கே அது ஏராளமாக கிடைத்திருப்பதால் அந்த காலகட்டத்தில் எல்லோரும் நல்ல வசதி படைத்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சுடுமண்ணால் ஆன சதுரங்க காய்கள் கிடைத்தன. வழிப்போக்கர்களாக வருபவர்கள் பொழுதுபோக்குவதற்காக அப்போது சதுரங்கம் விளையாடி இருக்கிறார்கள்.
கொசஸ்தலை ஆற்றில் படகுமூலமாக வாணிபம் செய்ய வந்தவர்கள் தாங்கள் உபயோகப்படுத்திய மண்பானைகளில் பாய்மரப் படகின் உருவத்தையும் துடுப்பையும் வரைந்திருக்கிறார்கள். அந்தப்பானைகளும் இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
எப்போதும் ஆற்றிற்கு சென்று தண்ணீர் எடுத்து வர முடியாது என்பதற்காக தங்களது குடியிருப்பிற்கு அருகிலேயே குழி தோண்டி சுடுமண்ணையிட்டு உறை கிணறுகள் அமைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் காஞ்சிபுரம், மாமல்லபுரம் அருகேயுள்ள வசவசமுத்திரம், பாண்டிச்சேரி அருகேயுள்ள அரிக்கைமேடு, மதுரை அருகேயுள்ள கீழமேடு, தூத்துக்குடியிலுள்ள கொற்கை மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் மட்டும்தான் உறைகிணறுகள் இருந்தன. இவற்றிற்கடுத்தபடியாக பட்டறை பெரும்புதூரில் கண்டெடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இங்குதான் அதிகளவில் உறைகிணறுகள் கிடைத்திருக்கிறது.
நாங்கள் மிகவும் வியந்துபோன தமிழகத்திலேயே முதன்முதலாக கிடைக்கப்பெற்ற ஒரு பொக்கிஷம் என்பது நறுமணப் புகைக்கலம்தான். 2 அடி நீளமுள்ள கூம்பு வடிவிலான குடுவை. அதன் மீது சிறிய துளைகள் போடப்பட்டிருக்கின்றன. சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை உள்ளே வைத்து புகைமூட்டும்போது துளைகள் வழியாக வெளிவரும் புகையில் நறுமணம் வீசும் விதமாக இது செய்யப்பட்டிருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.
மேலும், தமிழ்நாட்டுடன் ரோமானியர்கள் கொண்டிருந்த தொடர்பினை வெளிப்படுத்தும் விதமாக ரோமானியர்கள் பயன்படுத்தும் ரௌலட்டட் மண்பானைகள் கிடைத்திருக்கின்றன.
தமிழகத்திலேயே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் முக்கியமானதாக பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி இருக்கும். காரணம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆராய்ச்சி நடந்தபோது அங்கே சோழர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் மட்டும்தான் கிடைத்தது. கீழடியில் ஆராய்ச்சி நடத்தியபோது அங்கே சங்ககாலத்தைச் சேர்ந்த மனிதர்களின் சுவடுகள்தான் கிடைத்தது. இதுபோலத்தான் தமிழகத்தில் நடந்த ஆராய்ச்சிகள் எல்லாவுமே. ஆனால், பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடைக்கற்கால மனிதர்களில் தொடங்கி, முன்கற்காலம், புதியகற்காலம், இரும்புக்கற்காலம் வரையிலான மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அனைத்தும் ஒன்றாக இங்குமட்டும்தான் கிடைத்திருக்கிறது. அதனால், பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையிலேயே முக்கியமானதாகத் திகழப்போகிறது என்கிறார் துளசிராமன்.
திருவள்ளுர் மாவட்டத்தில் இதற்கு முன்னதாக நடைபெற்ற பல ஆராய்ச்சிகளில் இதுபோன்ற மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் அதிகளவில் கிடைத்திருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் சுவடுகள் தமிழகத்தில் உள்ள வேறுசில இடங்களிலும் கிடைத்திருக்கிறது. கொற்கை, அழகன்குளம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல்வேறு ஊர்களில் நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சிகள் நமக்கு உணர்த்துவது ஒன்றை மட்டும்தான்.
அவை நகரம் முழுவதும் ஒரே மாதிரியான கலாசாரம், பண்பாடுகளை நம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள் என்பதுதான். தமிழக அரசின் தொல்லியல் துறையானது இந்த ஆராய்ச்சியை இத்தோடு நிறுத்திவிடாமல் மேலும் தொடர்ந்தால் நம்மால் 50 மற்றும் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைச் சென்றடைய முடியும். அதன் மூலம் மனித இனத்தின் நீண்ட பாரம்பரியத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்.