செவ்வாய், 18 ஜனவரி, 2011

இலங்கையின் முதல் இனக் கலவரம்.



சாதனைகள்  படைத்த இலங்கையின் இனக்கலவர வரலாற்றை,பிள்ளையார் சுழி போட்டுத் 
தொடங்கி வைத்தவர்களே,இலங்கையின் முதல் பிரதமரும்,அவருடைய சகாக்களும்தான்.இந்த இனக்கலவரம் மூலமாகத்தான் இவர்கள் சிங்கள  மக்களின் கதாநாயகர்களாக அவதாரம் எடுத்தார்கள்.ஆனால், இவர்களை முதலாம்  உலகப்போர் நடக்கின்ற நேரம் என்றும் பாராமல் 
இலண்டன் வரைச் சென்று போராடி,இவர்களைச் சிறை மீட்டதும் ஒரு தமிழன்தான். எப்படி இருக்கிறது இந்த வரலாறு.   

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.
இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. அதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு டி.எஸ்.சேனநாயக்கா, டீ.ஆர்.விஜேவர்த்தன,Dr காசியஸ் பெரேரா,E .T .D .சில்வா,F .R .டயஸ்
பண்டாரநாயக்கா,A .H .மொலமூர் ,H .அமரசூரியா  உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. சேர் பொன் இராமநாதன் இங்கிலாந்து சென்று பிரித்தானிய  மகாராணியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அச்சிங்களத் தலைவர்களை விடுவித்தார்.திரு. இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை தேரை இழுத்துச் சென்றனர்.12 குதிரைகள் பூட்டிய தேரில் அவரை வரவேற்க முயன்று, இறுதியில் உற்சாக மேலீட்டால் சிங்களவர்கள் தமது கரங்களினால் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கொழும்பில் வாட் பிளேசில் இருந்த அவரின் "சுகஸ்த்தான்"வீடுவரை இந்தத் தேர் இழுப்பு நடைபெற்றதாம். அவ்வாறு கொழும்பு பிரதான வீதிகளினூடாக ஊர்வலம் வருகின்ற போது அப்பகுதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனங்கள்  சேதமாக்கப்பட்டன. இந்தப் புகைப்படம் கொழும்பு நூதனசாலை உள்ளிட்ட பல அரச அலுவலகங்களிலும் மற்றும் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன..

D .S .சேனநாயகா இலங்கையின் முதல் பிரதமராக பதவியேற்றுப் பேசிய வரவேற்பில்,திரு 
சேர்.பொன்.இராமநாதனை,(“the Greatest Ceylonese of all times”).  "இலங்கையின் மாமனிதன் என்றும் இவர்தான்" என்று போற்றிப் பேசியதாக வரலாறு.அதே வேளையில் ஸ்டேட் கவுன்சில்,மந்திரி சபையின்  தலைவராக இருந்த ஸ்ரீ பரோன் ஜய திலக்க ஒரு படி மேலே போய் (“as the Greatest man Ceylon has produced in the past fifty years.”)"இலங்கையின் ஐம்பது வருட வரலாற்றில் மிகவும் சிறந்த மனித பொக்கிஷம்" என்று பாராட்டினார்.இவைகள் ஸ்ரீலங்கா வரலாற்றில் மறையாத இடம் பிடித்தவை.படங்கள் மறையலாம் சரித்திரங்கள் தொடரும்.

சேர்.பொன் இராமநாதன் .

பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராக கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் கற்றார். 

13 ஆவது வயதில், பிரெசிடென்சி கல்லூரியில் கல்வி கற்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவிவகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். 

அரசியல் சேவை 

1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டநிரூபண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். 

சமூக சேவை 

இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. 

சமய சேவை 

அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். 

தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கோயில் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார்.இன்றும் இவரது பெயரின் நினைவாக் கொச்சிக்கடையில்,இலங்கைப் புகையிலைக் கொம்பனி இருக்கும் வீதியின் பெயர்,"இராமநாதன் வீதி" என்ற பெயர்ப் பலகையைக் காணலாம்.  

1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். 

யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். 

அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காக கொழும்பில் பழைய 
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருமையுடைய சேர்,பொன்.இராமநாதனை அரசியலில் இருந்து,ஓரம் கட்ட வைத்தவர்களும்,எமது சிங்கள நண்பர்கள்தான். 

நன்றி:தமிழ் விக்கி பீடியா 

வெள்ள நிவாரணம் படும் பாடு.

வெள்ள  நிவாரணம்  படும்  பாடு. எனது பிரதேசத்தில்,வெள்ளம் வந்து வடிந்து,அது வந்த
சுவடும்கூட அழிந்து மறைய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் பட்ட பாடு,பரமசிவனால் கூடப் பார்க்க முடியாது.உடுத்த  உடையுடன்,எடுத்த பையுடனும்,ஓடித்தப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன்,வீட்டைக் கூடத் திரும்பிப் பார்க்காமல்,வீதிக்கு வந்தவர்கள்தான் இந்த மக்கள்.சுனாமி கொடுத்த அனுபவங்கள் பின்னால்  விரட்ட,சொத்துச் சுகங்கள் தேவையில்லை,உயிர் தப்பினால் போதும். என்ற எண்ணத்தில்,தங்கள் அன்றாடத் தேவைக்குத் தேவையான எதையும் கூடக் கவனியாமல்,தற் காலிக நிவாரண முகாம்களுக்குள் காலடிஎடுத்து வைத்தவர்கள் இவர்கள்.இவர்களின் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நான் விபரிக்கத் தேவையில்லை.

நிவாரணம்,பத்திரிகைகளிலும்,வானொலிகளிலும்,தொலைக் காட்சிகளிலும்.வெகு 
பிரமாதமாக வழங்கப்படுகிறது.பாக்கிஸ்தான் வழங்கியது,சீன வழங்கியது,இந்தியா 
வழங்கியது,இப்படி பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது.சமைத்த உணவு வழங்கியதுடன்,பாடசாலைகளில் தங்கியிருந்தவர்களின் நிவாரணம் முடிந்தது,என்பதை 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  ஒருவர்,மனவருத்தத்துடன் அறியத் தந்தபோது,மனதுக்கு 
வெகு கஷ்டமாகத்தான் இருந்தது.

எனது நண்பர் ஒருவர்,கிராம அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில்,பொறுப்பான பதவியிலுள்ளார்.இவர் இரவு பகலாக கொப்பியும்,பென்னுமாக,அலைந்து திரிந்தார்,
என்ன விஷயம்,ஏதாவது கவிதை கட்டுரை எழுதுறீங்களா? என்று கேட்டேன்.இல்ல 
நமது பகுதிக்கு,வெள்ள நிவாரணமாக,ஒரு தொகைப் பணம் கிடைத்துள்ளது,அதை எப்படி 
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, பகிர்ந்தளிப்பது,என்ன,சாமான் வாங்கிக்
கொடுக்கலாம்.என்று தலையை பிய்த்துக்கொண்டு,திரிவதாகாவும்,எல்லோருக்கும் 
நிவாரணம் சரியாகக் கொடுத்து முடிக்கும்வரை தனக்குப் பெரிய மன உளச்சலாக,
இருப்பதாகவும்,சொன்னார்.

இன்று காலை,அவரைக்கண்டேன்,என்ன, எங்கே,போகிறீர்கள் என்று கேட்டேன்?
சங்கத்தால் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டிருப்பதாகவும.அந்தக் கூட்டத்திற்கு,தன்னையும் 
கலந்து கொள்ளுமாறு,அவசர அழைப்பு வந்ததாகவும்,துண்டைக்காணோம் துணியைக்காணோம். என்று அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருந்தார்.நானும்,அக்கம்,பக்கம் 
உள்ளவர்களிடம்,நாளை,அல்லது,மறு நாள்,எல்லோருக்கும் வெள்ள நிவாரணம் 
கிடைக்கும், என்று உசுப்பேற்றி விட்டு விட்டேன்.அனைவரும் நியாயமான எதிர் பார்ப்புகளுடன் காத்திருந்தோம்.நேரம் ஆக ஆக,எதிர்பாப்புகளும் கூடியது.

நேரம் மாலை ஏழு மணியைத்  தாண்டியது.எல்லோரும் பொறுமையைத் தாண்டி,அதற்கு
அப்பாலும் சென்று விட்டார்கள்.நண்பரின் தலை தெரியத் தொடங்கியதும்,எல்லோர் முகங்களிலும் ஒரு சந்தோசம்,ஒரு ஆர்வம்.கற்பனை கலந்த ஒரு கனவு.நண்பர் நெருங்கி
வந்துவிட்டார்,நண்பரின் முகத்தையும்,அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதின் எதிர் பார்ப்பு,எல்லோர் முகங்களிலும் தெரிந்தது.

நண்பர் சுரமற்ற   குரலில்,சொல்லத் தொடங்கினார்,நிவாரணம் வழங்க வந்த பணம்,
பெரிய அரசியல் வாதியின் தேவைக்குப் பயன் படுத்த வேண்டியுள்ளதாம்,நிவாரணம் நாங்கள்,வழங்கியதாகவும்,நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டதாகவும்,கையெழுத்து வைத்துத் தரும்படி,அரச ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும்,நண்பர் நடந்தவைகளை
தொங்கிய முகத்துடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.