வியாழன், 26 ஜனவரி, 2023

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரத் தயார் – ஜெய்சங்கர் வந்த சூட்டோடு ரணில் சம்பந்தனுக்கு உறுதியளித்தார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்குத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்து திரும்பியதை அடுத்து அவசர அவசரமாக நேற்றுமுன்தினம் பிற்பகல் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தேசிய காணி ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைவு தயாராகி வருகின்றது. அது நிறைவடைந்தவுடன் காணி அதிகாரங்கள் மாகணங்களுக்கு வழங்கப்படும். மாகாணங்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் எண்ணிக்கையை 10 ஆக வரையறுப்பதற்கும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது மாகாணங்களுக்கும் தலா ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரும், கொழும்பு மெற்றோபொலிட்டன் பிரிவுக்கு ஒருவருமாக பத்து நியமனங்கள் வரையறுக்கப்படவுள்ளன. அதன் பின்னர் அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரா. சம்பந்தனிடம் உறுதியளித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.