வியாழன், 2 பிப்ரவரி, 2017


இலங்கை அரசியலில் மற்றுமொரு இடதுசாரி சக்தி உருவாகும் - திடுக்கிடும் அரசியல் பின்னணி


ஜே.வி.பி என்று சுருக்கமான அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மறைவாக இருந்து உயிரூட்டிய அதன் இரகசியமான தலைவராக இயங்கிய பிரேமகுமார் குணரட்னத்திற்கு இலங்கையின் குடியுரிமை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இடதுசாரி அரசியல் களத்தில் குமார் குணரட்னம் அண்மை காலத்தில் பரவலாக பேசப்பட்ட தலைவர்.குமார் குணரட்னம் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் அவருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் எஸ்.பி. நாவின்ன இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவரை மீண்டும் நாடு கடத்தப் போவதில்லை எனவும் கூயிருந்தார். இதனடிப்படையில் குமார் குணரட்னத்திற்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
நேயேல் முதலிகே என்ற பெயரில் அறியப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் திரைக்கு பின்னால் இருந்து செயற்பட்டவர் என்ற வகையில் குமார் ஒரு காலத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தார்.
அரசியல் சூழ்நிலைகள் காரணமாக 2006 ஆம் ஆண்டு நேயேல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற அவர் 2011ம் ஆண்டு இலங்கை திரும்பிய பின்னர் செய்திகளை உருவாக்கும் நபராக மாறினார்.
குமார் குணரட்னம் வேறு யாருமல்ல 1988ம் 89ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது சமவுடமைவாத கிளர்ச்சியில் முக்கிய செயற்பட்டாளராக இருந்தவர் என்பது நாட்டில் பலருக்கு தெரியாத உண்மை.
2011ம் ஆண்டு மீண்டும் இலங்கை திரும்பிய குணரட்னம் அன்றைய அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்ட அவுஸ்திரேலியாவின் கடும் அழுத்தங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இதனையடுத்து 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் நாடு திரும்பிய குமார் குணரட்னம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில் அவர் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் விடுதலையானார்.
வடக்கை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெற்றோருக்கு பிரேமகுமார் குணரட்னம் கேகாலையில் 1965ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிறந்தார்.
இவரது தாய் ஒரு ஆசிரியர்.1971ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதல் 1980 ஆண்டு வரை டிசம்பர் வரை கேகாலை புனித மேரி கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றார்.
இதனையடுத்து 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1985ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பின்னவல மகாவித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர் தரம் பயின்றார்.
இதனையடுத்து 1985ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் நுழைந்தார்.
குமார் குணரட்னம் பேராதனை பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்திற்கு செல்லும் போது அவரது மூத்த சகோதரர் ரஞ்சிதம் குணரட்னம் பீடத்தில் சிரேஷ்ட மாணவராக இருந்தார்.
ரஞ்சிதம் குணரட்னம் பின்னவல மகாவித்தியாலத்தில் உயர்தர வகுப்பு மாணவராக இருந்த போது அதாவது 1981ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.
ரஞ்சிதம் குணரட்னம் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக இருந்த போதிலும் அவரது சகோதரர் குமார் குணரட்னம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை.
தனது சகோதரர் நன்றாக கல்வி கற்று ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என ரஞ்சிதம் குணரட்னம் எதிர்பார்த்தார்.
1988-89ம் கிளர்ச்சியின் போது அரச படையினரால் ரஞ்சிதம் குணரட்னம் படுகொலை செய்யப்பட்டா்.
இந்த நிலையில், பிரேம குமார் குணரட்னம், சிசிர குமார தேவப்பிரிய என்ற அன்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரபல மாணவ செயற்பாட்டாளர் ஊடாக நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கங்களில் இணைந்து செயற்பட்ட குமார் குணரட்னம் மாணவர்கள் மத்தியில் பிரலமிக்க பாத்திரமாக மாறினார்.
மாணவ சங்க அரசியலில் ஈடுபட்டிருந்த போதே குமார் குணரட்னத்தின் மனைவியான அன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட மாணவியாக இருந்த சம்பா சோமரத்னவுடன் தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 1987ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி தமிழ், சிங்கள புது வருட நாளின் நடு இரவில் கண்டி பல்லேகலையில் உள்ள இராணுவ முகாம் மீதான தாக்குதல் காரணமாக குமார் குணரட்னத்தின் பெயர் களத்திற்கு வந்தது.
1987ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கலகெதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1988ம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளில் பல்லேகலை இராணுவ முகாமில் ஆயுதங்களை கொள்ளையிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறான பின்னணியில் குமார் குணரட்னம் சிறையில் இருந்து தப்பிச் சென்றார்.1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருகோணமலை மங்கி பிரிஜ் இராணுவ முகாமில் இருந்த இராணுவ வீரரிடம் இருந்து செய்தி ஒன்று கிடைத்தது.
குமார் குணரட்னத்திற்கு சில ஆயுதங்களை வழங்குவதாக அந்த இராணுவ வீரர் உறுதியளித்திருந்தார். ஆயுதங்களை பெற இராணுவ முகாமுக்கு சென்ற அவரை படையினர் கைது செய்தனர்.
அப்போது அங்கு ஒரு முக்கிய நபரை அவர் சந்தித்தார். அவர் வேறு யாருமல்ல முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா.
இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் குமார் குணரட்னத்திற்கு எந்த தொந்தரவும் கொடுக்கப்படவில்லை. இராணுவத்தினர் அவரை நன்றாக கவனித்துக் கொண்டனர். இதற்கு வேறு அரசியல் பின்னணிகள் காரணமாக இருந்திருக்கலாம்.
இலங்கையில் இருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் குமார் குணரட்னம் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டார்.
சில காலம் தடுப்பில் இருந்த பின்னர் குமார் குணரட்னம் உட்பட புனர்வாழ்வு பயிற்சி பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 15 உறுப்பினர்களுக்கு அரசாங்கம் ஜப்பானில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
ஜப்பான் செல்லாத குமார் குணரட்னம் மீண்டும் தலைமறைவாகி அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1990ம் ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் மீள் ஒருங்கமைப்பு பணிகளில் குமார் குணரட்னம் முக்கிய பங்காற்றினார்.
அங்காங்கே சிதறி கிடந்த முன்னணியின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து மக்கள் விடுதலை முன்னணி மீள் உருவாக காரணமாக அமைந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியுடன் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து வெளியேறி முன்னிலை சோசலிசக் கட்சி உருவாகவும் அவர் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil win

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள