திங்கள், 2 ஜனவரி, 2017

புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் முயற்சி இலங்கையில் தோல்வி

புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தும் முயற்சி இலங்கையில் தோல்வி

சென்னையிலிருந்து வெளிவரும் ‘தினமணி’ தமிழ் நாளிதழ் மாறுமா, மாறாதா? எனும் தலைப்பில் நேற்று வெளியிட்ட ஆசிரியர் தலைப்பில் இலங்கையில் அரசியல் நிலைதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளது.
அதனை முழுமையாக தருகிறோம்.
இலங்கையில் புதிய அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி மீண்டும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இனப் பிரச்சினைக்கு முடிவு கட்டவும், மக்களாட்சி முறையை வலுப்படுத்தவும் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடம் புரளச் செய்ய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் எல்லா முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
இலங்கையில் அரசியல் சட்டத்தை மாற்றுவதும், தேர்தல் முறையை மாற்றுவதும் புதிதொன்றுமல்ல. இந்தியா சுதந்திர
மடைந்த சில மாதங்களுக்குப் பிறகு, 1948 பிப்ரவரி 4-ஆம் திகதி தான் இலங்கை சுதந்திரமடைந்தது. அப்போதும்கூட தொடர்ந்து பிரிட்டிஷ் டொமினியனாகத் தொடர்ந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட அரசியல் சட்டம் 1972 வரை தொடர்ந்தது.
1970-இல் உலகின் முதல் பெண் பிரதமராகப் பதவி ஏற்ற சிறிமாவோ பண்டாரநாயகாவின் ஐக்கிய முன்னணி அரசு, அன்றைய நாடாளுமன்றத்தையே அரசியல் சாசன சபையாக மாற்றிப் புதிய அரசியல் சட்டத்தை 1972-இல் அறிமுகப்படுத்தியது.
ஆறு ஆண்டுகால வரம்புள்ள தேசிய நாடாளுமன்றம், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் அனைத்து அதிகாரங்களையும் பெற்றதாக அமைக்கப்பட்டன. இந்தியாவில் இருப்பதுபோல, குடியரசுத் தலைவர் ஒருவர் பிரதமரால் நியமிக்கப்பட்டு நான்காண்டு பதவி வகிப்பார்.
1973-இல் ஆறில் ஐந்து பங்கு இடங்களை வென்று பதவிக்கு வந்த ஜே. ஆர.ஜயவர்த்தன, சிறிமாவோவின் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவந்து பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்படுத்தி தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார். இப்போது அந்த ஜனாதிபதி முறையை தற்போதைய ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான அரசு மாற்றி, பழையபடி பாராளுமன்ற ஆட்சி முறைக்கு இலங்கை திரும்பி இருக்கிறது.
பொது விவாதம் நடத்தப்பட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைந்த குழு தேர்தல் முறை மாற்றம் குறித்துத் தனது அறிக்கையை அளித்திருக்கிறது. ஆனாலும்கூட, சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கையில் தொடர்ந்து விவாதப்பொருளாக இருக்கும் பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
இப்போது இலங்கையில் 9 மாகாணங்களும், 25 மாவட்டங்களும் இருக்கின்றன. இந்த மாகாணங்கள் இந்தியாவில் இருப்பதுபோல, தன்னிச்சையாகச் செயல்படுவதா வேண்டாமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. இப்போது எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம்தான் குவிந்து கிடக்கின்றன. அதே நிலைதான் தொடர வேண்டும் என்பது மகிந்த ராஜபக்‌ஷ ஆதரவாளர்களின் கருத்து. அதிக அதிகாரங்கள் தரப்பட்டால் மாகாணங்களில் பிரிவினை கோரிக்கை அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் அவர்கள்.
அடுத்தபடியாக, தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாக இயங்க விடுவதா இல்லை ஒரே மாகாணமாக இருக்க விடுவதா என்கிற பிரச்சினை எழுந்திருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். இவர்கள் தனியாக இயங்குவதையே விரும்புகிறார்கள். அப்படி அவர்கள் தனியாக இயங்குவது தமிழர்களின் ஒற்றுமைக்கு நல்லதல்ல என்பது ஒருங்கிணைந்த மாகாணமாக இருக்க வேண்டும் என்பவர்களின் கருத்து.
இந்தியாவைப்போல கூட்டாட்சி முறை ஏற்படுத்தப்பட்டு, தமிழ் பேசும் பகுதிகள் தமிழ் மாகாணங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோருபவர்கள், இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். கூட்டாட்சித் தத்துவத்தையும், மத்திய அரசின் பங்கையும் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, மொழிவாரியாகவோ, இன வாரியாகவோ மாகாணங்கள் அமையக்கூடாது என்பது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷவின் வாதம். பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து வழிகாட்டுதல் குழு எதுவுமே கருத்துத் தெரிவிக்கவில்லை.
தமிழ்பேசும் இந்துக்களும், முஸ்லிம்களும் இலங்கை மதச்சார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பெரும்பான்மையினரான சிங்களத்தவர்கள், இலங்கையை ஒரு பௌத்த நாடாக அரசியல் சட்ட அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இலங்கையை பௌத்த நாடாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சுதந்திரம் அடைந்தது முதலே எழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையில் பௌத்த பிக்குக்களின் ஆதிக்கம் கணிசமானது. 1956-இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டாரநாயக்கா சிங்களம் மட்டுமே அதிகாரபூர்வ மொழி என்றும், பௌத்த மதம்தான் அதிகாரபூர்வ மதம் என்றும் அறிவிக்க முற்பட்டார். அதை அவர் நிறைவேற்றத் தயங்குகிறார் என்கிற ஆத்திரத்தில் ஒரு பௌத்த பிக்குவால் அவர் கொல்லப்பட்டார் என்றால் எந்த அளவுக்கு மத வெறி அங்கே நிலவுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி அரசியல் சாசனத்தைத் திருத்திப் புதிய அரசிலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்த முடியாமல் திணறுகிறது ஜனாதிபதிசிறிசேன தலைமையிலான அரசு. கூட்டணியிலேயே இந்தப் பிரச்சினை பிளவை ஏற்படுத்தி இருக்கிறது. மாற்றம் ஏற்படாவிட்டால் வெளியேறுவோம் என்று ஒரு பகுதியினரும், மாற்றம் ஏற்படக்கூடாது என்று இன்னொரு பிரிவினரும் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
என்ன செய்வது? என்று தெரியாத குழப்பத்தில் ஜனாதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும். இவர்களது குழப்பத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ. இதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள