அடிப்படை வசதிகளை இழந்த தவிக்கும் அளிகம்பை வனக்குறவர்கள்
எஸ். எல். எம். பிக்கீர்
பாடசாலையில் தமிழ்மொழி ஆசிரியர்கள் பாடங்களை தமிழில் நடத்துகின்றனர். மாணவர்களோ தெலுங்கு பேசுபவர்கள். பாடசாலை நேரங்களில் தெலுங்கில் தான் தமக்குள் உரையாடுகின்றனர். 12 வயதான பின்னரும் தமிழ் இவர்களுக்கு அந்நிய மொழியாக இருக்க, ஆசிரியர்களோ தெலுங்கில் 'மாட்டலாட' முடியாதவர்களாக இருக்கிறார்கள்'
வறுமைக்கோட்டையும் தாண்டி பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மத்தியில் தம் நாளாந்த வாழ்வை துயரத்துடன் கழிக்கும் அளிகம்பை மக்கள் அடிப்படை வசிதிகளின்றி அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். மேலும் இருக்க வீடின்றி கஷ்டப்படும் இவர்கள் நாளாந்தம் சந்திக்கும் துயரங்களோ ஏராளம். வறுமை என்பதன் வரைவிலக்கணத்தை ஒவ்வொரு மனிதனும் காணக்கூடிய இடமே அளிகம்பை கிராமம்.
நீண்டு பரந்த நெற்காணிகளுக்கு மத்தியில் வேறெந்த கிராமத்துடனும் தொடர்பின்றி தனியொரு கிராமமாக காணப்படுகிறது அளிகம்பை. மலைகளும், ஆறுகளும் நீர்ச்சுனைகளும் தான் இக்கிராமத்திற்கு எழிலுௗட்டுகின்றன. பட்டப்பகலில் யானைக் கூட்டத்தின் நடமாட்டங்களும் இக்கிராமத்தின் தினசரி நிகழ்ச்சிதான்.
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட, அளிகம்பையில், நம் நாட்டின் மகுடி கொண்டு பாம்பாட்டும் வனக்குறவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இங்கு பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் ஒரு பண்பாட்டை காணமுடிகிறது. இரு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமின்றி, சிறந்ததொரு வளமுமாகும். எனினும் இம் மக்களுக்கு உரிய மரியாதை நம் சமூகத்தில் இல்லை.
சுமார் 300 குடும்பங்கள் வாழும் அளிகம்பை கிராமத்தில் முழுக்க முழுக்க நாளாந்தக் கூலித் தொழிலையே தங்கள் வருமானமாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்நாட்டு மக்கள் எவருக்குமே பரிச்சயமற்ற மொழியினைப் பேசும் இவர்கள் வாழ்க்கையில் விதியோடு போராடிக்கொண்டிருக்கின்றனர்.
தமது மனைவியையும், குழந்தைகளையும் நிம்மதியாக தூங்கவைக்க, ஒரு வீடாவது இல்லையே என்பதே இம்மக்களின் ஏகோபித்த அங்கலாய்ப்பாக உள்ளது. மழைக்கும், வெயிலுக்கும் தாக்குப்பிடிக்காத ஓலைக்குடிசைகளில் தங்களின் வாழ்க்கையை உருட்டிக்கொண்டிருப்பதாக 55 வயதான வள்ளியம்மை தெரிவிக்கிறார். அத்துடன் பாம்பு, நண்டு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டத்துக்கு மத்தியிலும் பச்சிளம் சிசுக்களைக் கூட குப்பி விளக்கில் இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். இலங்கைத் திருநாட்டில் அளிகம்பை மக்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள், நம்ப முடிகிறதா?.
நாய்களுடன் காடுசென்று வேட்டையாடுவதுடன், காட்டு புற்றுகளில் காணப்படும் விஷப்பாம்புகளையும் பிடித்து, நச்சுப் பையை அப்புறப்படுத்தி தங்களின் கைக்கேற்றாற்போல் வசப்படுத்துவதிலும் வல்லமை கொண்டவர்களே அளிகம்பைவாசிகள். பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் அளிகம்பை வாசிகளைக் கண்டால் விஷப்பாம்பும் நடுங்கி ஓடி ஒளியும் அளவிற்கு அவர்களின் திறமை உள்ளது. எனினும் காலச் சக்கரம் சுழன்று நாகரீக வளர்ச்சி உயரும் இக்காலத்தில் அளிகம்பை மூத்தோர் காடுகளுக்குச் வெல்வது தற்போது குறைந்திருக்கிறது. பழையன கழிந்து புதியன புகுந்து வருவதையே அளிகம்பையில் காண முடிகிறது. இதனால் பல வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட பாம்புகளே இன்றும் உள்ளன. பாம்பாட்டுவதும் அருகி வருவதை காணமுடிகிறது.
எனினும் ஆண்கள் மகுடி கொண்டு பாம்பாட்டுவதும் பெண்கள் பிரதேச ஆறுகளிலும் குளங்களிலும் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும் இன்றைக்கும் இவர்களின் தொழில்களாக உள்ளன.
தெலுங்கு மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவர்கள் ஏனைய சமூகத்தாருடன் கொச்சைத் தமிழிலும் கொச்சை சிங்களத்திலும் பேசுகின்றனர்.
மேலும் அரசியலில் அநாதைகளாக்கப்பட்டுள்ளமையினாலேயே தங்களின் கிராமத்தில் அபிவிருத்தியைக் காணமுடியவில்லை என்று இவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் காலத்தில் மட்டுமே தாம் அரசியல் வாதிகளுக்கு தேவைப்படுவதாகவும் ஏனைய காலங்களில் தாம் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அளிகம்பை மக்கள் துயரத்துடன் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் உழைக்கும் கூலி வருமானத்தில் முடியுமானவரை மீதப்படுத்தி விரல்விட்டெண்ணக்கூடிய சிலரால் சிறுவீடுகளை அமைக்க முடிந்திருக்கிறது. கணிசமானோர் குடிசை வீடுகளிலேயே தங்கள் காலத்தை கழிக்கும் நிலை உள்ளதையும் காணமுடிகிறது. அரசியல்வாதிகள் அளிகம்பையும் நம்நாட்டின் ஒரு கிராமம் எனக்கருதுவதில்லை எனவும் இம்மக்கள் தெரிவிக்கின்றனர். அரசின் எந்த நிருவாகத்திலும் பங்கில்லாத இவர்களில் ஒருவர் மாத்திரமே படித்து அரச தொழில் புரிகிறார். ஜனாதிபதி மகிந்தவின் அரசு காலத்தில் மின்சாரம் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்டாலும் கணிசமானோர் இதுவரையில் தங்கள் வீடுகளுக்குக் கூட மின் இணைப்பைப் பெறவில்லை. காரணம் மோசமான பொருளாதார நிலை.
இவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்குமொழியின் ஒரு எழுத்தைக்கூட இவர்களால் எழுதவோ படிக்கவோ முடியாது. வீட்டுச் சூழலிலும், கிராம சூழலிலும் தெலுங்குமொழியில் பேசுவதனால் பாடசாலையில் தமிழ் மொழியில் பாடங்களை கற்கும்போது விளங்கிக்கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் கல்வியில் பின்தங்கி நிற்கவேண்டிய நிலை.
இம்மக்களுக்கென 09ம் ஆண்டுவரை உள்ள ஒரேயொரு பாடசாலையில் பணியாற்றும் தமிழ் மொழி ஆசிரியர்கள் தெலுங்கு பேசும் மாணவர்களுக்கு கற்பிப்பதால் உரிய முறையில் கற்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். இப்பாடசாலை மாணர்வர்கள் 12 வயதான பின்னரும் தமிழ் மொழியில் பேசமுடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறான நிலையில் தமிழ் மொழியில் போதிக்கப்படும் பாடங்களை மாணவர்கள் எவ்வாறு விளங்கிக் கொள்வார்கள்?
தமிழ் மொழியில் கல்வி கற்கும் அதேசமயம் இம்மாணவர்கள் பாடசாலை நேரத்தில் தெலுங்கு மொழியிலேயே பேசுகிறார்கள். இதனால் கற்கும் மொழி அந்நியப்பட்டு விடுகிறது. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் பேச்சு விளங்காமல் திக்கு முக்காடுகின்றனர். இதுவே ஆசியர்களினதும், மாணவர்களினதும் தலைவிதியாகிவிட்டது. பாடசாலையில் மட்டும்தான் ஆசிரியர்களுடன் ஓரளவுக்கு தமிழில் பேசும் மாணவர்கள், பின்னர் வீட்டுச் சூழலுக்குச் சென்றதும் தங்களது தெலுங்கு மொழியிலேயே பேச ஆரம்பிக்கின்றனர். தமிழ் மொழியே எட்டாக்கனியாக உள்ள நிலையில் இலவசப் பாடநூல்கள் எதற்கு? எனவும் இங்குள்ள ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இம்மக்களுக்கென வைத்திய சேவைகளோ, போக்குவரத்து வசதிகளோ இல்லாத நிலையில் இம் மக்களின் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வருடம் போல காலத்தைக் கடத்துவதும் நாளாந்த செயற்பாடாகிவிட்டதாக 55 வயதான வள்ளியம்மை தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றார்.
கடந்த 1990 இல் ஏற்பட்ட இரண்டாம் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்ற இவர்கள் மீண்டும் அளிகம்பையில் குடியமர்த்தப்பட்ட பின் வீடு உட்பட ஏனைய அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுமென அரச அதிகாரிகள் வாக்குறுதி வழங்கினார்களாம். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பலதரப்பட்டவர்களையும் சந்தித்த பொழுது ஏன்தான் பிறந்தோம்? இந்த இனத்திற்கு விடிவே இல்லையா? என்ற கேள்விக்கனைகளை எம்மிடம் தொடுத்துக்கொண்டிருந்தனர். இந்தளவுக்கு அளிகம்பை மக்கள் மனமுடைந்து காணப்படுகின்றனர்.
வீட்டு வசதி உட்பட தமது அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்படுமென நம்பியே நல்லாட்சி அரசிற்கு வாக்களித்ததாக கூறும் இவர்கள் எங்களது பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படுவதற்கு ஜனாதிபதியாவது தலையிட்டு விசேட கவனம் எடுக்க வேண்டுமென எதிர்ப்பார்த்துள்ளனர்.