திங்கள், 2 ஜனவரி, 2017

ஐ.நா. புதிய செயலாளர் நாயகமாக குட்ரஸ் பதவியேற்பு

ஐ.நா. புதிய செயலாளர் நாயகமாக குட்ரஸ் பதவியேற்பு


ஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அன்டோனியோ குட்டரஸ் நேற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.
1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை போர்த்துக்கல் நாட்டின் பிரதமராகக் கடமையாற்றிய இவர், 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளராகவும் கடமையாற்றியிருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி புதிய செயலாளர் நாயகமாக இவர் தெரிவுசெய்யப்பட்டதுடன் நேற்றைய தினம் இவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
"மனித குலத்தில் நம்பிக்கை, - கண்ணியம், முன்னேற்றம் - செழிப்பு என்பன சமாதானத்தில் தங்கியுள்ளது. எனவே 2017ஆம் ஆண்டை சமாதானத்துக்கான ஆண்டாக மாற்றுவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்" . ஐ.நா பொதுச்செயலாளர் என்ற ரீதியில் இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் அகப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு ஐ.நா செயலாளர் நாயகமாக எனது முதலாவது நாளில், எவ்வாறு உதவப்போகின்றேன் என்ற பாரியதொரு கேள்வி எனது இதயத்தில் எழுகிறது. யுத்தத்தில் யாரும் வெற்றியடைவதில்லை. சகலரும் இழப்புக்களை சந்திக்கின்றனர். சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை அழிப்பதற்காக ட்ரில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்படுகின்றன. மலர்ந்திருக்கும் புதிய ஆண்டில் சகலரும் ஒன்றிணைந்து சமாதானத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்" என அழைப்பு விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், புதிய செயலாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கியூலே, நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பாதையை ஏற்படுத்த வேண்டிய நிலையில் சமாதானம் என்பது இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் புதிய வருடத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கை மக்களின் பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுக்ள சபை தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமாகப் பதவியேற்றிருக்கும் அன்டோனியோ குட்டரஸ், 17 ஆண்டுகள் போர்த்துகேய பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவராவார். இவர் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற கவுன்சிலில் பாராளுமன்ற அசம்பிளி உறுப்பினராக 1981 முதல் 1983 வரை இருந்த இவர், சமூக ஜனநாயக அரசியல் கட்சிகளின் பன்னாட்டு அமைப்பான 'சர்வதேச சோசலிச' அமைப்பின் உப தலைவராக 1992ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டுவரை கடமையாற்றியிருந்தார். ஆபிரிக்க குழுவின் இணைத் தலைவராகவும் இவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1949ஆம் ஆண்டு லிஸ்பெனில் பிறந்த குட்டரஸ் பொறியியல் பட்டதாரியாவார்.
இவர் போர்த்துக்கல், ஆங்கிலம், பிரஞ், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவராவார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள