புதிய அரசியல் யாப்பு நாட்டைப் பிளக்கும் ஆவணமல்ல
உத்தேச புதிய அரசியலமைப்பில் நாட்டுக்குத் தீமையை ஏற்படுத்தும் எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது நாட்டைத் துண்டாடும் ஆவணம் இல்லையென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கண்டி தலதாமாளிகைக்கு நேற்றுமுன்தினம்(31) சென்றிருந்த ஜனாதிபதி, மல்வத்துபீட மற்றும் அஸ்கிரியபீட மாகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றபோதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.
அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் மற்றும் அது தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு சிலர் எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், நாட்டின் ஒற்றுமைக்கோ அல்லது பௌத்த மதத்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் எதுவும் அதில் உள்ளடக்கப்படமாட்டாது. அவ்வாறான நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் ஜனாதிபதி கூறினார்.
புத்தாண்டை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, அஸ்கிரியபீட மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தபோதே இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
மகா சங்கத்தினரின் ஆசிர்வாதமின்றி புதிய அரசியலமைப்பை வரைவதற்கு தான் ஒருபோதும் தயாரில்லையென்றும், புதிய அரசியலமைப்பானது தனிப்பட்ட ஒரு சிலரின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக அன்றி மக்கள் பிரதிநிதிகள், கல்வி மான்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆவணமாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.
இருந்தபோதும், புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை அறிய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கை தொடர்பில் பலர் அறிந்திருக்கவில்லையென அஸ்கிரிய பீட மாகாநாயக்க தேரர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். அவ்வாறானவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படுமென ஜனாதிபதி பதில் வழங்கியிருந்தார்.
இந்த விஜயத்தைத் தொடர்ந்து மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி, நாட்டை வறுமையிலிருந்து விடுவித்து அனைத்து மக்களையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ள நிகழ்ச்சித்திட்டங்களையும் விளக்கிக் கூறியிருந்தார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சக்தி பிரச்சினை தொடர்பாக மகாநாயக்க தேரர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதற்கான தீர்வுகளைக் காண்பதற்காக ஏனைய உலக நாடுகள் போன்ற இலங்கையும் முன்னோடியான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டுக்குத் தேவையான பல்வேறு சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருட காலமாக ஜனாதிபதியின் தலைமையில் நல்லாட்சி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த போதும் அது தொடர்பாக மக்களுக்கு சரியாக தெளிவுபடுத்தப்படாத காரணத்தினால் பிரச்சினைகள் எழுவதாகக் குறிப்பிட்ட மகாநாயக்க தேரர், அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நாட்டை போதைப்பொருள் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களை வரவேற்றிருந்த மகாநாயக்க தேரர், சுகாதார அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே ஜனாதிபதி செய்த அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள