வெள்ளி, 30 செப்டம்பர், 2022

எண்ணிய எண்ணம் எங்கே?

 





நமது எதிர்பார்ப்புகள், தவிடுபொடியாகும் வேளைகளில், எனது மனதில் இந்த

பாடல் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்கும். எழுதியவர் யார் என்றே தெரியாது.

ஆனால்,எனக்கு மிகவும் பிடித்த பாடல்,ஏன் என்றால் எதிர்பார்ப்புகளால் 

கடுமையாக பாதிக்கப்படும்போதெல்லாம் இப் பாடல் மனதில்  

ஓடிக்கொண்டிருக்கும். படித்துப் பாருங்கள்  உங்களையும்  கவரலாம்.


எண்ணிய எண்ணம்  எங்கே

இலக்கண குமாரன் எங்கே

கண்ணனும் தேரும் எங்கே

கண்கொள்ளாச் சேனை எங்கே


கட்டிய கோட்டை எங்கே

காண்டிபம் எங்கே

வீரம் எங்கே தீரம் எங்கே 

ஆற்றல் எங்கே அறிவு எங்கே


எல்லாமே  போனதடா நம்மை விட்டு..... 


செவ்வாய், 27 செப்டம்பர், 2022

வெளிநாட்டுப் பயணம் 1

     


சோதிபூராடமசுவினியிலிரா கிருக்கச்

சொல்லுமகம் பூசமதில் சனியிருக்கு மேனும்

மேதில்பூ ரட்டாதி ஆயில்யம் அதனில்

இராகு நிற்கச் சித்திரையில் சனியிருந்திட்டாலும்

மோதிய பத்துடையோனும் அங்கிசத்துளோனும்

ஓங்கு சர  ராசிதனில் உகந்திருக்கு மேனும்

கோதிலாச் சரராசி விஷயத்தில் பலமின்றி

கொடும்பகைஞ ருடன் சாமி கூடில் பர தேசம்.

(சாதக சிந்தாமணி)


சுவாதி,பூராடம்,அசுவினி நட்சத்திரக் கால்களில் இராகு இருக்க.மகம்,பூச நட்சத்திரக்  கால்களில் சனி இருந்தாலும்  பூரட்டாதி,ஆயில்ய நட்சத்திரக்கால்களில்

இராகு இருந்தாலும, சித்திரை நட்சத்திரக்காலில் சனி இருந்தாலும். பத்தாமிடத்திற்கு அதிபதியும் அவன் அங்கிசத்தில் இருப்பவனும் சர இராசியில் 

இருந்தாலும், சர இராசி அல்லது பன்ணிரண்டாமிடத்தில்  பலமின்றி பாவக்கோளுடன் இலக்கனாதிபதி கூடி இருந்தாலும் வேறு நாட்டிற்கும் செல்வான்.


#வெளிநாட்டு பயணம்,1  இராகு,சனி ,பத்தாமிடம்.சாதக சிந்தாமணி.#

























வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வெளிநாட்டுப் பயணம்.




சீரான ஒன்றேழில்  இராகுவிருந்தாலும்

செய்யபத்தில் புதனிருக்க வியமதியுற்றாலும்

நேரான சாமிக்கு வியத்தோன்துர்ப் பலமாய்

நின்றாலும் இரவிமதி சனிகூடினாலும

தாரான இலக்கனமும் உதயநாயகனும்

சாற்றுமங்கி சாதிபரும் சரத்திலிருந்தாலும்

பேரான  சரத்துடையோன் சுவாமிக்கே நட்பாய்

பேசுதயம் நின்றாலும் பரதேச வாசம்.

                       ( சாதக சிந்தாமணி).


இலக்கினம்,ஏழாமிடம் இவைகளில் இராகு இருந்தாலும்.

இலக்கனத்திற்கு  பத்தாமிடத்திற் புதனிற்க, இலக்கினத்திற்கு பண்ணிரண்டாம்

இடத்தில் சந்திரன் இருந்தாலும்,  இலக்கினத்திற்கு பன்ணிரண்டாம்  இடத்ததிபன்

துர்ப்பலமாக இருந்தாலும். சந்திரன் சூரியனுடன்  சனி கூடி 

இருந்தாலும்.இலக்கினாதிபதி சர ராசியில் இருந்தாலும், அங்கிசாதிபதியும் சர

இராசியில் இருந்தாலும். சர இராசியதிபதி இலக்கனாதிபதியுடன் நட்பாக 

இருந்தாலும், இச் சாதகன்  வேறு நாட்டிற்கு பயணமாவான். 


சர ராசிகள்  : மேஷம், கடகம், துலாம், மகரம்.

  இதைப் போல இன்னும், ஒன்பது  பாடல்கள் இவைபோன்றுள்ளது, 

அவைகளையும்ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.










புதன், 14 செப்டம்பர், 2022

அனுபவம் #,அவமானம்#மனம்#

 தென்றலைத் தீயாக்கி ,தீன் சுவைத்,

தேன் வதையை நஞ்சாக்கி.-பன்பற்ற

வஞ்சகர் கூட வாழ்வது வாழ்வல்ல,

கொஞ்ச நொடியாகும் நில்லாதே.


எதிர்பார்ப்புகள் தவிடு பொடியானால்,

எதிர்காலம் எப்பொழுதும்  கேள்விக்குறி-சதிராடும்

நெஞ்சே, எது வந்தபோதும்,கலங்காதே,

கொஞ்சமும் அசையாதே, விலகியே, போ!


உறவுகள் கலைந்து,உணர்வுகள் தொலைந்து,

துறவிகள் போல வாழும், மணிதா!-மரபுகள்

மறந்து,பண வரவுகள் தேடி, உந்தன்

சிறப்புகள்  மறந்து, சிரிக்காதே செல்.


பணம் ஒன்றுதான் பாக்கிய மென்று,

பிணமாக மாறிவிட்ட  மகா  பதரே, -குணம்

ஒன்று  குறைகின்றதே, செல்லாது

உன்வாழ்வு, சிறக்காது  பார். 


#அனுபவம் #,அவமானம்#மனம்# வெளிப்பாடு#












தாய்.

 



தாய் தமக்கு ஒப்பில்லை தாரணியில் எப்பொருளும்
சேய் நம்மைச் சீராட்டி செந்நீரைப் பாலாக்கி,
வாய் வழியாய்த் தாமூட்டி வாழ்விக்கும் தெய்வமொன்று,
தாய்போலும் உண்டாமோ, தான்.
,

 

பிறந்த நாள் வாழ்த்துகள்.!!! (13-09-2022.)

பிறந்த நாள் வாழ்த்துகள்.!!!
          (13-09-2022.)



வாழ்த்துவதற்கு வார்த்தைகள் வரவில்லை,!
வந்த வார்த்தைகளை   வடித்திட முடியவில்லை!
பேரெடுத்து நீ வாழ,பெரிதாக வணங்குகிறோம்,
பார் போற்ற நீவாழ்வாய், பல்லாண்டு!

அன்புடன்,
அக்கா,அத்தான். 














வியாழன், 8 செப்டம்பர், 2022

அழுகை.!

 இதயத்தின் வலி ஏற்படுத்தும் தாக்கம்

எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகும் தருணம்,

உறவுகளால் ஏற்படும் மன உழைச்சல்

தாறுமாறான தவிர்க்க முடியா நினைவுகள், 

ஆற்றொனாத் துன்பம் அடி மனதில்

ஏற்றிய வலி இதயத்தில் இருக்கும்  வரை,


தங்கத்தை நெரிப்பிட்டு தரமாக்கி

தரத்தை நிர்ணயம் செய்வதுபோல்

உள்ளத்தை உருக்கி உணர்வுகள்  அழிந்து

வெள்ளத்தைப்போல கண்ணீர் புரண்டு

நெஞ்சத்தை தாக்கி யழித்து என்னையும்

கொஞ்சம் அழ வைத்துவிட்டது.


இறைவன்  அழுகையின்   மூலம்,

எதை நமக்கு உணர்த்துகிறான்,

வேதனனையைப் பிழிந்து,

கண்ணீராக்கி மன வலிகளைக் குறைக்கின்றது..

அனுபவம் எவ்வளவு பெரிய ஞானி,

அனுபவித்துப் பாருங்கள்  புரியும்.

  

மனைவிக்குப் பின்.!!!

படித்ததில் பிடித்தது
#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, 
நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்...


Facebook#பதிவு# படித்ததில் பிடித்தது #