புதன், 4 ஜனவரி, 2017


போரில் அழிந்த மக்கள் மீண்டும் அழிவதை தடுக்க முடியாது? இதன் பின்னணியில் யார்?

யுத்தம் முடிந்து பல வருடங்களை கடந்துள்ளது. ஆனால் அழிவு மட்டும் மக்களை காலத்துக்கு காலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
போரில் அழிந்த மக்களை போல தற்போது போதைப் பொருள், கொன்று குவித்துக்கொண்டிருக்கின்றது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் இழுத்தடிக்கப்படுகின்றது.
புத்தாண்டு மலர்ந்து மூன்று நாட்களை முழுமையாக கடந்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள்தான் எஞ்சியிருக்கின்றது.
கடந்த ஆண்டில் நாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டாலும் முழுமையாக இந்த வருடமும் அந்த எதிர்பார்ப்பு தொடரும் என்றே கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், நாட்டில் போதைப் பொருள் பாவனைகள் அதிகரித்து வருவதை காணமுடிகின்றது. போதைப் பொருட்களை ஒழிக்க திடமான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போதைப் பொருள் பாவனை காரணமாக இளம் தலைமுறை சீரழிந்து வருகிறது. நாட்டிற்குள் போதைப் பொருள் பல வழிகளில் வருகிறது.
இலங்கைக்குள் கடல்வழியாகவே அதிகளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடல் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரின் காண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் தந்திரமான முறையில் நாட்டிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் காரணமாக யாழில் கலாச்சார சீரழிவு தலைவிரித்து ஆடி வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். யார் செயற்படுகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கொழும்பு உட்பட தென் பகுதிகளில் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின் விற்பனைகள் பரவியிருந்த நிலையில், தற்போது வடபகுதி போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கான கேந்திர நிலையமாக மாறி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லையெனில் போரில் அழிந்த தமிழ் பேசும் மக்கள் போதைப் பொருளால் அழிவதை எவராலும் தடுக்க முடியாது.
பெற்றோர் தமது பிள்ளைகளில் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து, அவர்களை தமது கண்கானிப்பில் வளர்க்க வேண்டும்.
இல்லையெனில் எதிர்கால சந்ததி, போதை பொருள் என்ற பிசாசிடம் சிக்கி மடிவதை தடுக்க முடியாது போகும். 2017 ஆம் ஆண்டில் நாம் கால்பதித்து கொண்டிருந்த தருணம் பல இடங்களில் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
முதலாம் திகதி அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாக்கிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டார்.
மறைத்து வைத்தநிலையில் அவர் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திவர முற்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தைப்பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் திகதி அன்று வெலிகம, மிரிஸ்ஸ பகுதியில் இங்கிலாந்து பிரஜை ஒருவரும் இலங்கை பிரஜைகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஒரு தொகை போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களிடமிருந்து 05 கிராம் கொக்கேய்ன், 03 கிராம் ஹஷுஸ் மற்றும் தீர்வை வரி இன்றி கொண்டுவரப்பட்ட 224 சிகரெட்டுக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மூன்றாம் திகதி கொழும்பு இரவு நேர களியாட்ட விடுதிகளில் பயன்படுத்துகின்ற "நடனமாத்திரை" என்று கூறப்படுகின்ற எஸ்டர் போதை மாத்திரைகள் ஒரு தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் மதுவரி திணைக்களத்தின் விசேட சுற்றிவளைப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா என விசேட சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பீ.என். ஹேமந்த குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஒரு மாத்திரையின் சில்லறை விலை 3800 ரூபா என்றும், 10 - 20 வரை கொள்வனவு செய்யும் போது 3000 ரூபா வீதம் பெற்றுக் கொள்ள முடிவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக கூறப்பட்டது.
இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதுடன் இதற்கு அடிமையாவதால் மனப்பாதிப்பு ஏற்படும் இதனை அறியாத இளைஞர் சமூகம் தன்னை தானே அழித்து வருகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்லும் தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.
இன்றும் ஊடகங்களை எடுத்துப் பார்த்தால் தற்போது போதை பொருளுடன் கைது செய்யப்படும் பெண்கள் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.
சீதுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு தொடக்கம் சீதுவ வரை பயணித்த முச்சக்கர வண்டியை காவற்துறை பரிசோதனை செய்த போது அவர்கள் ஹெரோயின் வைத்திருந்தமை அறியவந்துள்ளது.
32 மற்றும் 24 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நீர் கொழும்பு மற்றும் மீரிஹான பிரதேசங்களை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடத்தினுள் இலங்கையில் கிட்டத்தட்ட 4 இலட்சம் கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 3 இலட்சத்து மூவாயிரம் பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றவாளிகள் கிட்டத்தட்ட 80 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 ஆயிரத்து 800 கிலோ கிராம் போதைப்பொருளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய கஞ்சா பயன்படுத்தல், அருகில் வைத்திருத்தல் மற்றும் கஞ்சாவுடன் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 319 ஆகும். அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 569 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரோயினுடன் 2015 ஆம் ஆண்டு 26 ஆயிரத்து 468 பேர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய 67 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரால் 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 20 ஆயிரம் கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த 5 வருட காலப்பகுதியில் இலங்கையில் 3 இலட்சத்து 86 ஆயிரத்து 500 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திலாவது போதைப் பொருள் விற்பனை, கடத்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. ஆரம்பித்திருக்கும் புதிய வருடத்திலாவது இது நிறைவேறுமா...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள