சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்
(எம்.எப்.எம்.பஸீர்)
(எம்.எப்.எம்.பஸீர்)
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதை நவீன மயப்படுத்தப்படும் புனர் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் அதனை மையப்படுத்தி பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையிலான சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகளை பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
ஓடு பாதை நவீன மயப்படுத்தப்படும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன. இக்காலப்பகுதியின் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த நவீனமயப்படுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இக்காலப்பகுதியில் விமான நிலையத்தை நோக்கி அதிகமான பயணிகளும் வாகனங்களும் வருகை தர உள்ள நிலையில், இதன் போது ஏற்படும் சிரமங்களைக் குறைக்க நேற்று முதல் இப்பணிகள் நிறைவுறும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரையில் பிற்பகல் 3.00 மணி முதல் மறு நாள் காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுலுக்கு வருவதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பிரதானமாக நான்கு பாதைகள் ஊடாக கட்டுநாயக்கவுக்குள் வருவோரை இலக்காக கொண்டே இந்த சிறப்பு திட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து விமான நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் விமான நிலையத்தின் பிரதான வாயில்களில் 40 ஆம் இலக்க வாயில் ஊடாக உள் நுழைந்து பழைய பீ.வீ.ஜி. வளாகம் ஊடாக விமான நிலையத்தின் உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் பகுதியை அடைய முடியும்.
இதன் போது அதிவேக பாதை ஊடாக 18 ஆம் கட்டை முதல் மினுவாங்கொட மற்றும் குருணாகல் நோக்கி பயணிப்போருக்கும் விசேட பாதை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதன் போது கட்டுநாயக்க - நாயக்கந்த பாதையூடாக பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கும் பொலிஸார் மினுவாங்கொடை, குருணாகல் பகுதி நோக்கி பயணிப்போர், கே - 2 சந்தி ஊடாக எவரிவத்தகர பகுதிக்கு திரும்பி மல்கஸ் சந்தி, கோவிந்த வீதி ஊடாக ஆடி அம்பலம கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ள சந்திவரை பயணித்து மினுவாங்கொடை நோக்கியோ அல்லது ஹினடியன யாகொடமுல்ல ஊடாக மினுவாங்கொடை பாதைக்குள் நுழைந்தோ பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே விமான நிலையத்தில் இருந்து அதிவேக பாதை, 18 ஆம் கட்டை ஊடாக வெளிச் செல்லும் வாகனங்கள் விமான நிலைய பிரதான வாயில் ஊடாகவே வெளிச் செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொடை நோக்கி பயணிப்போர் முதலாம், இரண்டாம் இலக்க வெளிச் செல்லும் வாயில்கள் ஊடாக நாயக்கந்த வீதியூடாக மினுவாங்கொடை நோக்கி செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் குருணாகல் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்கு மட்டும் வருவோர், ஆண்டி அம்பலம முதல் நாயக்கந்த வீதி ஊடாக பயணித்து விமான நிலையத்தின் 37 ஆம் இலக்க உள் நுழையும் பாதை ஊடாக விமான நிலையத்தின் உள் நுழையும் மற்றும் வெளிச் செல்லும் பகுதியை அடைய முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனை விட, கம்பஹா, குருணாகல் பகுதிகளில் இருந்து அதிவேக பாதை நோக்கி பயணிப்போர், குருணாகல் - கொழும்பு வீதியின் யாகொடமுல்ல சந்தி ஊடாகவோ, பீவத்த சிலுவை சந்தியால் திரும்பி மாதவ மல்கஸ் சந்தி வரை பயணித்து ஆண்டி அம்பலம ஊடாக கோவிந்த மல்கஸ் வீதிக்குள் நுழைந்து எவரிவத்த நகர் ஊடாக அதிவேக பாதைக்குள் பிரவேசிக்க முடியும்.
அத்துடன் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்கு அமந்தொழுவ பகுதியில் இருந்து வருவோர், கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வாயில் ஊடாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் 3 ஆம் இலக்க வாயில் ஊடாகவும் உள் நுழைய முடியும்.
இதனை விட மினுவாங்கொடை, கம்பஹா மற்றும் குருணாகல் பகுதிகளில் இருந்து முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் நோக்கி பயணிப்போர், குருணாகல் - கொழும்பு பிரதான வீதியின் யாகொடமுல்ல சந்தி ஊடாக, பீல்வத்த சிலுவை சந்தி, மாது மல்கஸ் சந்தி ஊடாக ஆண்டி அம்பலம சந்தியால் திரும்பி கோவிந்த வீதி, எவரிவத்த வரை பயணித்து கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வாயில் ஊடாகவோ, கே - 2 சந்தியூடாக தொரண சந்தி வரை பயணித்து முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் முதலாம் இலக்க வாயில் ஊடாகவோ உள் நுழைய முடியும்.
அத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலிருந்து வெளியேறும் வாகனங்கள் தொடர்பிலும் தனியான போக்கு வரத்து ஒழுங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அங்கிருந்து வெளிச் செல்லும் வாகனங்கள், எந்த சந்தர்ப்பத்திலும் நாயக்கந்த வீதி ஊடாக மினுவாங்கொடை நோக்கி பயணிக்க அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி வெளியேறும் வாகனங்கள் மல்கஸ் சந்தி, கோவிந்த சந்தி ஊடாக ஆடி அம்பலம் வரை பயணித்தோ அல்லது ஹீனடியன, யாகொடமுல்ல சந்தி ஊடாக மினுவாங்கொடைக்கும் கொட்டுகொடை சந்தி ஊடாக கம்பஹா மற்றும் ஜா எல நோக்கியும் பயணிக்க முடியும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
எவ்வாறாயினும் இந்த சிறப்பு போக்கு வரத்து திட்டத்தின் பிரகாரம் நாயக்கந்த வீதி ஊடாக விமான நிலையத்துக்கு வருவோர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ள போதும், பெரும் வாகன நெரிசல் விமான நிலைய பகுதியில் ஏற்படுமாயின் ஆண்டி அம்பலம முதல் கே - 2 சந்தி வரையிலான பகுதி மூடப்பட்டு கட்டுநாயக்க - மினுவாங்கொடை வீதி முற்றாக மூடப்படும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறான நிலை ஒன்று ஏற்படும் பட்சத்தில் அதிவேக பாதை, விமான நிலையம் நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் கோவிந்த மல்கஸ் சந்தி ஊடாக எவரிவத்த நகருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சீதுவை ஊடாக அதிவேக பாதை மற்றும் விமான நிலையம் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள