போதைப்பொருள் சந்தையாக மாறியிருக்கும் இலங்கை
இலங்கையானது தற்போது போதைப்பொருளுக்கான பெரும் சந்தையாக மாறியிருக்கின்றது. நாள்தோறும் பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்படும் அளவிற்கு இலங்கையின் நிலைவரம் மாறியிருக்கின்றது. கடந்த சில மாதங்களாகவே பெருமளவான போதைப்பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப் போதைப்பொருட்கள் பாவனைக்கு விடப்பட்டிருந்தால் பெருமளவானோர் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு போதைப்பொருட்கள் தொடர்ந்தும் கைப்பற்றப்பட்டு வருகின்ற போதிலும் நாட்டில் போதைவஸ்துப் பாவனைக்கு உட்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1392 கோடி ரூபா பெறுமதியான 928 கிலோ கொக்கெயின் போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலிலிருந்து மீட்கப்பட்டது. இலங்கையூடாக இந்தியாவிற்கு கடத்துவதற்காக கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட கொக்கெயின் போதைப்பொருளே இவ்வாறு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
தென் அமெரிக்காவின் இபதோர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோதே தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தப் பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. கடந்த 30 வருட காலத்தில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருளாக இது விளங்குகின்றது.
இதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக பெருமளவு போதைப்பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கிழக்கில் திருகோணமலை – நிலாவெளிப்பகுதியில் ஒருகோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான 140 கிலோ கேரள கஞ்சா பிராந்திய போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. நிலாவெளி 8ஆம் கட்டை அஸ்மின் வாடி கடற்கரையில் வைத்து இந்தப் போதைப்பொருள் அதிகாலை 3 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளது. வள்ளத்திலிருந்து இறக்கி கல்முனைக்கு கொண்டுசெல்வதற்காக வேன் ஒன்றில் கேரள கஞ்சாப் பொதிகள் ஏற்றப்பட்டபோதே போதைவஸ்து தடுப்புப் பிரிவினரால் இது கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் யாழ். குடாநாட்டிலும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து நேற்று முன்தினம் 62 இலட்சம் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் இருவேறு பகுதிகளில் இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. யாழ்ப்பாணம், புறநகர்ப் பகுதியூடாக கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் பிற்பகல் யாழ். செம்மணி மயானப்பகுதியில் வெளிமாவட்டமொன்றுக்கு கடத்திச்செல்வதற்காக குப்பைமேட்டில் குப்பைகள் போல் போடப்பட்டிருந்த ஏழு கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கஞ்சாப்பொதியும் 2 கிலோ நிறையுடையதாக காணப்பட்டது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியிலும் இதேபோன்றே கேரளக்கஞ்சா நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது. குடத்தனை வடக்கு சுடலைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 8 கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவை ஒவ்வொன்றும் 2 கிலோ நிறையுடையவை என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். இவற்றின் மொத்தப் பெறுமதி 62 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 7 ஆம் திகதி அவிசாவளை – தல்துவ பிரதேசத்தில் 2 கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் நிறையுடைய கொக்கெயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அட்டன் – டிக்கோயா, பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் சீனி கொள்கலன் ஒன்றிலிருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. வெளிநாடொன்றிலிருந்து சீனி இறக்குமதி செய்யும் நிறுவனமொன்றினால் கொண்டுவரப்பட்ட கொள்கலனிலிருந்தே பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது. இவ்வாறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதும் அது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதும் தொடர்கதையாக மாறியிருக்கின்றதே தவிர போதைப்பொருளை தடுப்பதற்கான முழுமையான நடவடிக்கை இன்னமும் எடுக்கப்படவில்லை.
போதைப்பொருள் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டுவரப்படுகின்றது? இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் கண்டறியப்படவேண்டியது இன்றியமையாததாகும். பெருமளவு போதைப்பொருட்கள் திட்டமிட்டவகையில் நாட்டுக்குள் கடத்தப்படுகின்றன என்றால் அதற்கு உடந்தையாக அரசியல் சக்திகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் தேடிப் பார்க்கவேண்டியுள்ளது.
கடந்தவாரம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலிலிருந்து 928 கிலோ கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை தொடர்கின்றது. சர்வதேச ரீதியாக இயங்கும் கொக்கெயின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் இலங்கையர்கள் எவரேனும் இணைந்து செயற்படுகின்றனரா என்றும் அத்தகைய வலையமைப்புடன் தொடர்புடைய மாபியாக்கள் இலங்கையில் உருவாகியுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் நேற்று முன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அறிக்கை சமர்ப்பித்ததுடன் இவ்வாறு கைப்பற்றப்பட்ட கொக்கெயின் போதைப்பொருளை அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்கான அனுமதியையும் அவர்கள் பெற்றுள்ளனர். அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட கப்பலில் கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருள் புதுடில்லிக்கு கொண்டு செல்லப்படவிருந்தது என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
உண்மையிலேயே இந்தப் பெருந்தொகையான போதைப்பொருள் இலங்கையில் விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்டதா? இல்லையா என்பது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தற்போதைய நிலையில் போதைப்பொருள் விநியோகத்தை இலங்கையில் முற்றாக கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமானது தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் விமான நிலையம் மூலமாக சிறிய அளவிலான போதைப் பொருள் கடத்தல்களே இடம்பெற்று வந்தன. ஆனால் தற்போது கப்பல்கள் மூலமும் படகுகள் மூலமும் வெளிநாடுகளிலிருந்து போதைப் பொருட்களை கொண்டுவரும் சூழல் உருவாகியிருக்கின்றது.
இவ்வாறு போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதனால் பெருமளவான மக்கள் போதைவஸ்துக்கு அடிமையாகும் நிலை உருவாகிவருகின்றது. இளம் சந்ததியினர் போதைவஸ்துக்கு அடிமையாகி வாழ்க்கை சீரழியும் ஆபத்தான நிலை உருவாகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு போதைவஸ்துப் பாவனையும் மதுப் பாவனையும் அதிகரித்துள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது போதைவஸ்துப் பாவனை என்பது இல்லாத ஒன்றாகவே காணப்பட்டது. மதுப்பாவனையும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் திட்டமிட்ட வகையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போதைவஸ்துப் பாவனையும் மதுப்பாவனையும் அதிகரிக்கப்பட்டது. தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களை இல்லாதொழிக்கும் வகையிலும் இளம் சந்ததியினரின் உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையிலும் போதைவஸ்து பாவனைக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
தற்போது கடல்வழியாக வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு பெரு மளவு கேரள கஞ்சா கொண்டுவரப்படுகின்றது. நாள்தோறும் அப்பகுதியில் கேரளகஞ்சா கைப்பற்றப்பட்டு வருகின்ற போதிலும் அங்கு போதைவஸ்து விநியோகம் என்பது தங்குதடையின்றி இடம்பெறுவதாகவே தெரிகின்றது. எனவே இவ்வாறான சூழலை நீடிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வடக்கில் மதுப்பாவனை 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். தற்போதைய நிலையில் போதைவஸ்துக்கான சந்தையாக இலங்கை மாறியிருக்கின்றது. எனவே இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு போதைவஸ்துக்களை கடத்துவோர் மற்றும் விநியோகிப்போர், அதன் பின்னணியில் செயற்படுவோர் என சகல தரப்பினரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே இத்தகைய கடத்தல்களை தடுக்க முடியும். அரசாங்கம் இந்த விடயத்தில் தீவிர அக்கறை காட்டவேண்டியது அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள