செவ்வாய், 27 டிசம்பர், 2016

அதிகாரப் பரவலாக்கலை மக்களிடம் தவறாக உருவகப்படுத்தும் பிரசாரங்கள்!

அதிகாரப் பரவலாக்கலை மக்களிடம் தவறாக உருவகப்படுத்தும் பிரசாரங்கள்!


அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை மெதுவாக நகர்ந்தாலும் நிதானமாகவே நடைபெறுகிறது. இயற்கையாக, வினை என்ற ஒன்றிருந்தால் அதற்கு எதிர்வினையும் இருக்கத்தான் வேண்டும்.
அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறையும் இந்த விதிக்கு தப்பாதது ஆச்சரியமில்லைதான். வினை நிதானமாகவும், உத்வேகம் குறைந்ததாக இருந்தாலும் எதிர்வினையோ ஆத்திரமூட்டுவதாகவும், உணர்ச்சிமயமாகவுமே காணப்படுகிறது.
இந்த எதிர்வினை பிரசாரத்தை முன்னின்று நடத்துவது வேறு யாருமல்ல. கூட்டு எதிர்க்கட்சி என தம்மைக் கூறிக் கொள்ளும் மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களின் அணிதான்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பின்னாலிருந்து இயக்க, அரசியலில் அவரை அண்டிப் பிழைக்கும் ஒரு சிறு குழு தனது தாராளமான பொய்கள், ஏமாற்று வித்தைகள், அச்சுறுத்தல்கள் மூலம் சொந்த நலன்களை அடையும் நோக்கத்தில் மக்களை ஏமாற்றும் இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கிறது.
அதேநேரம், கடந்த அரசாங்கத்தின் கடைசிக் காலப் பகுதியில் காளான்களாக முளைத்த ஒருசில குழுக்களும் மஹிந்த அணிக்கு உறுதுணையாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
மறுபக்கம், இவர்களுடைய சிறுபிள்ளைத்தனமான செயல்களை ஊதிப் பெருப்பிப்பதில் பரபரப்பு மிக்க செய்திச் சந்தையில் சர்ச்சைக்குரிய சம்பவங்களை நம்பி வாழும் ஊடகங்களும் கைகொடுக்கின்றன.
தனது பிரசாரப் போரில் மஹிந்த அணி சரித்திரத்தையும் விட்டு வைக்கவில்லை. சமகால சரி்த்திரத்தின் கற்றுக்கொண்ட பாடங்களும் கிடைத்த அனுபவங்களும் அலட்சியப்படுத்தப்படும் அதேவேளை தமது இனவாத, மதவாத பிரசாரத்துக்கு பழைய சரி்த்திரத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
21ம் நூற்றாண்டு சமூகத்துக்குத் தெரியாத இராவணன் போன்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதிலும் அவர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் அவ்வப்போது அந்த அணி நிரூபிக்கத் தவறவில்லை.
அவர்கள் கேட்கிறார்கள் அரசியல் சாசனத்தில் ஏன் திருத்தம் செய்ய வேண்டும்? என்ன அவசரம்? பெரும்பான்மை இனம் ஆரம்பத்திலிருந்தே அரசியல் சாசனத்தை எதிர்த்தே வந்தது.
இப்போது அதை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே மாற்ற வேண்டும் என்கிறது. பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஒரு எதேச்சாதிகார நடவடிக்கையாகும்.
சரி, மஹிந்த அணிக்கும், அவர்களுடைய துணைக்குழுக்களுக்கும் கவலையளிக்கக்கூடிய நான்கு முக்கிய விடயங்கள் தற்பேதைய அரசியல் சாசன சீர்திருத்த செயல்முறையில் இருக்கின்றன.
அரசின் தன்மை, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை, அதிகாரப் பரவலாக்கம், மனித உரிமைகள் என்ற அந்த நான்கு அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் முக்கிய விவாதப் பொருளாக தற்போது பேசப்பட்டு வரும் நிறைவேற்று முறைமையைப் பற்றி முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன கூறியது நினைவுக்கு வருகிறது.
ஆணைப் பெண்ணாக அல்லது பெண்ணை ஆணாக மாற்றுவதைத் தவிர நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் எதையும் செய்ய முடியும் என அவர் அப்போது கூறியிருந்தார்.
மஹிந்த ரஜபக்ச உட்பட்ட 1994ம் ஆண்டிலிருந்து பதவிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகளுமே அதை நீக்குவதாக வாக்குறுதி அளித்த போதிலும் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை.
18வது திருத்த சட்டத்தின் மூலம் அந்தப் பதவியில் இரண்டு தடவைக்கு மேல் நீடிக்கவே வழி செய்யப்பட்டது.அரசின் தன்மை அல்லது அரசமைப்பு முறைமை என்ற விடயத்தில் பல்வேறு கட்சிகளும் பிடிவாதமான நிலைப்பாட்டில் இருக்கின்றன.
கூட்டாட்சி தெற்கின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் அதேநேரம் ஒரே நாடு என்ற கருத்தியல் அடக்கி ஆளும் தன்மையைக் கொண்டிருப்பதாக வடக்கிலுள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இவை சமகால அனுபவங்களின் அடிப்படையில் கூறப்படும் கருத்தே தவிர வேறொன்றுமில்லை.
தற்போது பல நாடுகளின் அரசமைப்பை எடுத்துக் கொண்டால் அது கூட்டாட்சியையும், ஒற்றையாட்சியையும் கொண்டதாகவே பல அம்சங்களில் கணப்படுகிறது.
பிரித்தானியாவில் ஒற்றையாட்சி அரசமைப்பு இருந்தாலும் ஸ்கொட்லாந்திலும், வட அயர்லாந்திலும் கூட்டாட்சி முறைமையே உள்ளது.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் கூட்டாட்சி அரசியலமைப்பு முறைமையாக இருந்தாலும் மாகாண சபைகள், சட்ட மன்றங்களைக் கலைக்க மத்திய அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பொறுத்த மட்டில் ஒள்றையாட்சியின் அம்சங்கள் அதில் கலந்திருப்பதைக் காணலாம்.
இலங்கையின் விடயத்தில் கூட்டாட்சி ஒற்றையாட்சி எனப் பெயரிடுவதை விடுத்து அரசமைப்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதில் அனைத்து சமூகங்களின் கருத்தொற்றுமையைப் பெற்றுக் கொள்வதுதான் மிக நன்றாக இருக்கும்.
அடுத்த மிக முக்கியமான அம்சம் அதிகாரப்பரவலாக்கமாகும். அது அரசமைப்பை மலிவானதாக்கி இலகுவாக எட்டக்கூடிய தூரத்துக்கு அண்மித்ததாக மக்களைக் கொண்டுவரும் ஒரு ஜனநாயக நடவடிக்கை எனக் கூறலாம்.
மேலும், 30 வருட யுத்தத்தின் பின்னர் அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யவும் அதிகாரப் பரவலாக்கல் உதவக்கூடும்.
இது தொடர்பான பல்வேறு யோசனைகள் பேச்சுவார்த்தைகளின் போது விவாதிக்கப்பட வேண்டும். மாறாக, ஒரு சமூகத்தின் தீர்வை இன்னொன்றில் திணிக்கக்கூடாது.
அதிகாரப் பரவலாக்கம் உதட்டளவிலேயே பேசப்படுகின்றது. செயலில், பெரும்பான்மையினத்தை விழுங்கும் பாம்பாகவும், நாட்டைப் பிரிக்கும் ஒரு செயல்முறையாகவுமே அதற்கு விளக்கம் கொடுக்கப்படுகின்றது.
அதிகாரப் பரவலாக்கம் என்பது மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதாக இருக்க வேண்டும்.
இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கான பரஸ்பர அதிகாரங்கள் கொண்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பற்றி பேசப்படுகின்றது.
இதை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அது சாத்தியமானதா என ஆய்வு செய்வது பிரயோசனமாக இருக்கும்.
கடைசியாக மனித உரிமைகள், விவகாரம் முன்பு போல ஆட்கடத்தல்கள், சட்டத்தை மீறுகின்ற கொலைகள், தண்டனைக்கு தப்பும் வசதி, இன, மத பாகுபாடுகள் என்பன இடம்பெறாமலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மிக மோசமான பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகால ஏற்பாடுகள் என்பன நீக்கப்படுவதும் முக்கியம்.
ஜயதிலக டி சில்வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள