யுத்தம் அடிப்படை நிலைகளையே ஆட்டம் காண செய்துள்ளது..! சீ.வி.விக்னேஸ்வரன்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பல குடும்பங்களின் அடைப்படை நிலைகளையே ஆட்டம் காண செய்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு சிறிய ரக மீன்பிடி வள்ளங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர்,
பொதுவாகவே மீன்பிடித்தொழில், இறால் கூடு கட்டுதல், நண்டுக் கூடு கட்டுதல் போன்ற தொழில்கள் ஆண்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தம் அடைப்படை நிலைகளையே ஆட்டம் காணச் செய்து பல குடும்பங்கள் குடும்ப தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து நிர்க்கதியான நிலையில் பெண்கள் தமது குடும்பத்திற்குத் தலைமை தாங்கி வாழ்வாதார தேடல்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக வலிந்து ஈடுபட வேண்டி வந்துள்ளது.
பெண்கள் பொதுவாகவே மென்மையானவர்கள். அவர்களின் உடல்வாகும் மென்மையான தொழில்களுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பையே கொண்டது.
இவ்வாறான பெண்கள் காலத்தின் கட்டாயத்தால் தமது பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தோட்ட வேலைகளுக்குச் செல்கிறார்கள், மண்வெட்டி வேலைகள் செய்கின்றார்கள்.
மீன்பிடிக்கக்கூடச் செல்கின்றார்கள். உடல் வெயிலில் வாடி, மழையில் நனைந்து, பனியில் கூதல் எடுத்து எல்லாத் தட்ப வெப்பங்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய தொழில்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இங்கு அவர்கள் செய்கின்ற தொழில்களை சற்று இலகுவாக்கும் நோக்கிலேயே இந்தச் சிறியரக மிதவைகளை காரைநகர், ஊரிக்காடு மற்றும் அராலித்துறைப் பகுதிகளில் இறால்ப் பிடிப்புத் தொழிலில் ஈடுபடும் விதத்தில் ஒவ்வொன்றும் சுமார் ரூபா 107,500.00 மற்றும் ரூபா 74,025.00 பெறுமதிகளில் வள்ளங்களைக் கொள்வனவு செய்து இன்று வழங்குகின்றோம்.
இப்பயனாளிகள் தெரிவு மகளிர் விவகார அமைச்சு மற்றும் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் சிபார்சின் பெயரில் காரைநகர் பிரதேசசபை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஆராயப்பட்டு அவர்களின் தேவைப்பாடு மற்றும் உண்மைத்தன்மை, குடும்ப நிலவரம் ஆகியன உறுதிப்படுத்தப்பட்டே இன்று இந்த உபகரணக் கொடுப்பனவு மேற்கொள்ளப்படுகின்றது.
தரும் உபகரணங்களை பயனாளிகள் உரியவாறு பாதுகாத்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இன்று வழங்கப்படுகின்ற இந்த சிறியரக வள்ளங்கள் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 22 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டில் உலை ஏறுவதற்கு உதவுகின்ற ஒரு நிகழ்வாக அமைகின்றது.
இவ்வள்ளங்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் அவற்றின் உதவியுடன் தங்கள் தங்கள் குடும்ப வருமானங்களைப் பெருக்குவதற்கு முயற்சி செய்யுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள