உலகில்‘கல்வி வல்லரசாக’ பின்லாந்து உயர்ந்தது எப்படி?
வடக்கு ஐரோப்பாவில் ஒரு சிறிய நோர்டிக் நாடான பின்லாந்து இன்று கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஒரு கல்வி வல்லரசாகப் பாராட்டப்படுகின்றது. உலகில் சிறந்த கல்வி முறை பின்லாந்தில் இருப்பதாகவும் கல்வித் துறையில் உலகில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் மிகப்பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசான ஐக்கிய அமெரிக்கா கூட பின்லாந்தின் கல்வி முறையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றது.
பின்லாந்தின் கல்விமுறை சிறந்தது எனக்கருத, ஒரு பிரதான குறிகாட்டி உள்ளது. அண்மைக் காலங்களில் உலக நாடுகளின் மாணவர்கள் பங்கு கொள்ளும் சர்வதேச பரீட்சைகளில், (குறிப்பாக PISA என்னும் பரீட்சை) பின்லாந்து மாணவர் தொடர்ச்சியாக முதலாவது இடத்தைப் பெற்று வருகின்றனர். வாசிப்பு, கணிதம், விஞ்ஞானம் முதலிய பாடங்களிலேயே இப்பரீட்சை நடத்தப்படுகின்றது. இப்பரீட்சைகளில் தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், சீனா (ஷங்காய்) முதலிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் உயர்ந்த புள்ளிகளைப் பெற்று வருகின்றனர். (பார்க்க அட்டவணை( I, 11)
அட்டவணை ( I )
PISA பரீட்சை விபரங்கள் – 2012
பாடங்கள் : கணிதம், வாசிப்பு,விஞ்ஞானம், பிரச் சினை தீர்த்தல், நிதித்துறை அறிவு.
80% உலகப் பொருளாதாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 34 OECD நாடுகள், 31 கூட்டாளி நாடுகளின் மாணவர்கள் பங்கேற்பு
15–16 வயதுக்கிடைப்பட்ட 5,10000 மாணவர்கள் பங்கேற்பு, 65 நாடுகளையும் 28 மில்லியன் 15 வயது மாணவர்களையும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
PISA : Programme for International student Assessment சர்வதேச மாணவர் மதிப்பீட்டு நிகழ்ச்சித் திட்டம்.
OECD நாடுகள் : Organization for Economic Cooperation and Development 34 நாடுகள் உறுப்பினர்.
நவீன சமூகங்களில் பங்குகொள்ள அத்தியாவசியமாகத் தேவையான அறிவு மாணவர்களிடம் உள்ளதா என்பதை இப்பரீட்சை சோதிக்கும்
தாம் கற்றவற்றை அப்படியே தருவதைப் பரீட்சிப்பதில்லை. தாம் கற்றவற்றை வேறு வாழ்க்கைச் சந்தர்ப்பங்களின் போது எவ்வாறு பயன்படுத்துவர் என்பதைப் பரீட்சிக்கும்.
அட்டவணை (II)
பின்லாந்தின் சாதனை PISA –2012
15 வயதுப் பிள்ளைகள் பெற்ற சராசரிப் புள்ளி 524, ஏனைய OECD நாடுகளின் சராசரிப்புள்ளி 496.
கணிதத்தில் பின்லாந்து –519 புள்ளிகள் OECD நாடுகள் –494 புள்ளிகள்.
விஞ்ஞானத்தில் பின்லாந்து –545 புள்ளிகள் OECD நாடுகள் – 501 புள்ளிகள்
சர்வதேச பரீட்சையில் பின்லாந்து மாணவர்கள் பெற்று வந்துள்ள உயர்ந்த சித்தி காரணமாக அந்நாட்டின் கல்வி முறையில் சர்வதேச அக்கறை ஏற்பட்டது. இதேபோன்று சீனா, கொரியா, சிங்கப்பூர், தைவான் முதலிய நாடுகளின் மாணவர்களும் சிறந்த சித்திகள் பெற்றனர். ஆனால், ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் பின்லாந்தின் சாதனை பெரிதும் பாராட்டப்பட்டது. ஏனெனில் சகல மேலை நாடுகளையும் (ஐக்கிய அமெரிக்கா உட்பட) மிஞ்சியதாக பின்லாந்தின் சாதனை அமைந்தது.
இத்தகைய கல்வித்துறைச் சாதனையின் காரணமாக, பின்லாந்தின் வெற்றிக்கான காரணம் என்ன? அந்நாட்டுக் கல்வி முறையில் தனிச் சிறப்பான அம்சங்கள் எவை என்ற விடயங்கள் இன்று ஆராயப்பட்டு வருகின்றன.
பின்லாந்துக் கல்வியியலாளர்கள் தாம் பல புத்தாக்கச் சிந்தனைகளை ஐக்கிய அமெரிக்காவிலிருந்தே பெற்றுக்கொண்டதாகக் கூறுகின்றனர். ஆனால் தாமே அவற்றை முறையாகத் தமது நாட்டில் நடைமுறைப்படுத்தியதாக உரிமை பாராட்டுகின்றார்கள்.
அமெரிக்க மாணவர்கள் கற்பதற்கு அதிக நேரம் செலவழிப்பதில்லை. இந்திய மற்றும் சீன மாணவர்களே அதிக நேரம் கற்பதற்குச் செலவிடுகின்றனர் என்ற கருத்தொன்று உண்டு. சிறப்பாகக் கற்பதற்கு அதிக நேரம் செலவிடப்படல் வேண்டும் என்ற கருத்தைப் பின்லாந்துக் கல்வியியலாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதிக நேரம் கற்றலுக்காகச் செலவிடுவது தேவையற்றது; இத்தகைய சிந்தனை பழைய தொழிற்சாலை உற்பத்திச்சிந்தனையை அடியொற்றி எழுந்தது என அவர்கள் இதனை நிராகரிக்கின்றனர். அதிக நேரம் கற்பதால் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்பதற்கு எதுவித ஆதாரங்களுமில்லை என அவர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் தாம் யார்? தம்மால் என்ன செய்து கொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதற்கே பாடசாலை உதவும். எவ்வளவு கற்றல் நடைபெறுகின்றது என்பது முக்கியமானதல்ல என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பின்லாந்து மக்கள் "சிறிதளவே அதிகமானது –போதுமானது" என்ற தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் (Less is more) அவர்களுடைய இல்லங்கள் சிறியவை; ஆனால் வசதியானவை; எளிமையான வாழ்க்கையை விரும்புபவர்கள் மித மிஞ்சிய நுகர்வாளர்கள் அல்லர், பெரிய வாகனங்கள், அதிக அலங்காரங்கள் நீண்டகாலம் உழைக்கக்கூடிய சில தரமான பொருட்களையே வாங்குவர். பின்லாந்தின் கல்வி முறையிலும் இதே தத்துவம் பிரதிபலிக்கின்றது. அதிக நேரம் செலவிடாமல் கற்றுக்கொள்ள முடியும் என்பது அவர்கள் கொள்கை.
இத்தகைய பின்லாந்தின் எளிமைத் தத்துவத்தைப் பாராட்டும் அமெரிக்கக் கல்வியியலாளர்கள், தமது நாட்டில் எல்லாமே அதிகமாகத் தேவைப்படுவதாகக் குறை கூறுகின்றனர். அதிகமான கற்பித்தல் முறைகள், முயற்சிகள், பரீட்சைகள், வீட்டுப்பணிகள், அதிகமான நீண்ட நேர வகுப்புகள், அதிக மனித அழுத்தம், அதிகவிரக்தி என அமெரிக்கப்பட்டியல் நீண்டு செல்கின்றது.
மேற்கூறப்பட்ட எளிமைத் தன்மையை பின்லாந்தின் கல்வி முறையில் பார்க்கலாம்.
மாணவர்கள் ஏழு வயதிலேயே பாடசாலையில் அனுமதி பெறுகின்றார்கள். வகுப்பறையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதை விட மாணவர்கள் பிள்ளைகளாக இயங்கவும் விளையாட்டு, துருவி ஆராய்தல் மூலம் எதனையேனும் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றார்கள். பிள்ளைகள் கற்க ஆயத்தம் பெறும் நிலையிலேயே பாடசாலை செல்கின்றார்கள்.
பாடசாலைகளில் குறைந்த நேரமே கல்வி வழங்கப்படுகின்றது. காலை 9–9.45 மணியளவில் பாடசாலை தொடங்குகின்றது. ஆய்வு முடிவுகளின்படி பிள்ளைகளுக்குப் போதுமான நித்திரை தேவை. 75 நிமிட நேர வகுப்புகள் 3 அல்லது 4 நடைபெறும். மொத்தத்தில் ஆசிரியரும் மாணவரும் ஓய்வெடுக்கப்போதிய நேரம் வழங்கப்படுகின்றது.
ஆசிரியர்கள் பாடசாலைகளில் நீண்ட நேரம் கற்பிப்பதில்லை. பின்லாந்து ஆசிரியர் ஒரு நாளைக்கு 4 பாடவேளைகள் மட்டுமே கற்பிப்பார்; ஆண்டுக்கு 600 மணித்தியாலங்கள் கற்பிப்பார். அமெரிக்க ஆசிரியர் இதனை விட இருமடங்கு வேலை செய்வர். அதாவது ஆண்டுக்கு 1080 மணித்தியாலங்கள் வேலை செய்வார். இது ஒரு நாளைக்கு 6 மணித்தியால வேலையைக் குறிக்கும். வகுப்பு இல்லாத நேரங்களில் ஆசிரியரும் மாணவரும் கூட பாடசாலையில் இருக்க வேண்டியதில்லை. பின்லாந்துக் கல்வியியலாளர்களின் சிந்தனையின்படி, இதனால் ஆசிரியர்கள் ஓய்வாகவும் சுதந்திரமாகவும் தமது பாடங்களையும் கல்விப்பணியையும் திட்டமிட முடிகின்றது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள