காலக்கெடு முடிந்தது: கனவு தான் பலிக்கவில்லை....!
இலங்கைத்தீவு சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ் தேசிய இனம், சிங்கள தேசிய இனத்தின் பௌத்த மேலாதிக்கவாதிகளால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
ஜனநாயக ரீதியாக சமவுரிமை, சம நீதி கேட்டு போராடிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்களது கோரிக்கைகளும், மகஜர்களும் வெற்றுக் காகிதங்கள் போல் தூக்கி வீசப்பட்டன.
ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்த மக்கள் பிரதிநிதிகள் கூட சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளால் இலக்கு வைக்கப்பட்டனர். தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் இனக்கலவரம் என்ற பெயரில் அடித்து விரட்டப்பட்டனர்.
தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் கூட நிம்மதியாக வாழ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்விளைவு இந்த நாடு 30 வருடம் ஒரு ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சிங்கள தேசிய இனமும், தமிழ் தேசிய இனமும் கைகோர்த்து சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இரு தேசிய இனங்களும் தமக்குள் மோதிக் கொண்டதன் விளைவு இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியது. 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் இந்த போர் மௌனிக்கப்பட்டிருக்கிறது.
சமநீதி, சமவுரிமை என்பவற்றை பெற்று இந்த நாட்டில் இறையாண்மையுள்ள ஒரு தேசிய இனமாக தமிழ் மக்களும் வாழ வேண்டும், அதற்கு போரின் மூலம் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்களின் பெரும்பாலனவர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால் பூகோள அரசியல் நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மேற்குலகம் மற்றும் அயல் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அதனால் அதனைக் கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திற்கு அவை உதவியிருந்தன.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை எனவும் உரிமைக்காக போராடிய தமிழ் மக்களது போராட்டம் நசுக்கப்பட்டது.
ஆயுத வழிப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களது தெரிவாகியது.
மீண்டும் ஜனநாயக ரீதியாக தமது அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அமைப்பாக மக்கள் வேறு வழியின்றி அதனையே ஆதரிக்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டனர்.
தமிழ் மக்களும் இந்த நாட்டில் ஒரு தேசிய இனம். அவர்களும் இந்த நாட்டில் தனித்துவ இறையாண்மை உண்டு என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் இந்த நாட்டின் இன்னொரு தேசிய இனமாகிய சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதனை பிரிக்கப்படாத நாட்டிற்குள் வடக்கு- கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி மூலம் வழங்க வேண்டும் என்ற கோசத்துடன் 2009 முதல் இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் நடைமுறையில் இருக்கின்ற அத்தகைய சமஸ்டி முறை தீர்வுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமது இறைமையை வழங்கி வருகிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தின் போது 2016ம் ஆண்டு டிசம்பர் மாத்திற்குள் நிரந்தர அரசியல் தீர்வு என்ற கோசத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
காலம் கனித்து வருகிறது. இதை குழப்பி விடாதீர்கள். 2016 இற்குள் தீர்வு காண்பதற்கு ஒட்டுமொத்த மக்களின் ஆணையையும் அவர் கோரினார். வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சாரை சாரையாக திரண்டு வந்து தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கினர்.
இதன் எதிரொலியாக தீவிர தமிழ் தேசியத்துடன் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனி கூட்டமைப்பில் இருந்து பிரிந்த பின்னர் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது.
எதிர்பார்த்ததை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இரா.சம்மந்தனின் இந்தக் கூற்று தற்போதைய சூழலில் பார்க்கும் போது வெறும் தேர்தல் இராஜதந்திரமா என்று எண்ணத் தோன்றுகின்றது.
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து 15 மாதங்களும் கடந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய 2016 டிசம்பர் மாதமும் முடிவடைகிறது. ஆனால் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
65 ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப் போயிருக்கும் ஒரு அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை ஒரு இரவில் வழங்கி விடவோ அல்லது பெற்று விடவோ முடியாது என்பது உண்மை.
ஆனால் அந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கூட 15 மாதமாக உருவாக்க முடியாத நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இருக்கிறது.
இது மக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால பலமான இருப்பைக் கூட கேள்விக்குட்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
ஏனெனில், கடந்த 2015 ஜனவரி மாதம் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
தமிழ் பேசும் மக்கள் பெருவாரியாக வழங்கிய வாக்கின் மூலமே நல்லாட்சி உதயமாகியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் புதிய நல்லாட்சி அரசாங்கம் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
பாராளுமன்ற தேர்தலின் பின் நன்றிக்கடனாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, கூட்டமைப்பு பங்காளிக் கடசி ஒன்றின் தலைவர் ஒருவருக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் பதவி என்பன அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது.
இது அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவை தான். ஆனால் தமிழ் மக்கள் 65 வருடத்திற்கு மேலாக இந்த பதவிக்காக போராடவில்லை.
ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புக்களும், தியாகங்களும் பதவிக்கானவை அல்ல. அவை ஒரு இலட்சியத்திற்கானவை. ஒரு இனத்தின் விடிவுக்கானவை. அவை உரிமைக்காக, சமநீதிக்காக, இறைமைக்காக போராடும் மக்களுக்கானவை. இதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வப்போது தமிழ் மக்கள் தொடர்பாக ஆசுவாசுப்படுத்தக் கூடிய கதைகளை பேசுவதால் மட்டும் இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கத்தையோ அல்லது நல்லாட்சியையோ ஏற்படுத்திவிட முடியாது.
அது அரசாங்கம் மற்றும் தென்னிலங்கை மக்கள் பிரதிநிதிகளின் மனதில் இருந்து வரவேண்டும். அதற்கான வேலைகள் இன்று வரை நடந்திருக்கின்றதா என்ற கேள்விக்கு தான் விடை காணமுடியாமல் இருக்கின்றது.
இந்த டிசம்பருக்குள் தீர்வைத் பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறைந்த பட்சம் சில அடிப்படை பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாத நிலையில் உள்ளது.
மக்களின் விருப்பப்படி ஒரு அபிவிருத்தியைக் கூட முன்னகர்த்த முடியாத நிலையில் இருக்கின்றது.
குறிப்பாக காணாமல் போகச் செய்யப்படடோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு என்பவற்றில் தமிழ் மக்கள் திருப்திப்படும் படியாக எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மறுபுறம் பௌத்தமயாமக்கல், திட்டமிட்ட குடியேற்றங்கள், இனப்பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் என்பன மிகவும் சூட்சுமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதாக கூறுகின்ற போதும் அதனை தமிழ் மக்களினதோ அல்லது தமிழ் மக்களின் ஆணைப்படி இயங்கும் மாகாணசபையினதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளில் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினதோ விருப்பப்படி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
வவுனியாவிற்கு கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் கூட அதனை எங்கு அமைப்பது என்ற முடிவு எட்டப்படவில்லை.
அரசாங்கம் அதனை கூட்டமைப்பின் அல்லது வடமாகாண சபையின் விருப்பதற்கு அமைய அமைக்க விரும்பவல்லை. அதனால் பல சாட்டுப் போக்குகளைக் கூறி இழுத்தடிப்பு செய்து வருகிறது.
மறுபுறம் மீள்குடியேறிய மக்களுக்காக அரசாங்கம் 65,000 பொருத்து வீடுகளை வழங்கவுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் பொருத்து வீடுகள் தமது பகுதிக்கு பொருத்தமற்றவை என வலியுறுத்தி வருவதுடன், இது தொடர்பில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
ஆனாலும் அரசாங்கம் மக்களதும், மக்கள் பிரதிநிதிகளினதும் ஜனநாய கருத்துக்களை மதிக்காது அதனை அதனை மக்கள் மீது திணிக்கவே முயல்கிறது.
ஆக, ஒரு சாதாரண அபிவிருத்தி திட்டத்தில் கூட இந்த நல்லாட்சி அரசாங்கமும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத தன்மையே உள்ளது. மறுபுறம் தமிழ் மக்கள் தமக்கான அபிவிருத்தியைக் கூட தீர்மானிக்க திராணியற்றவர்களாகவுள்ளனர்.
இவ்வாறான நிலையில் எவ்வாறு தீர்வு குறித்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதமுடியும்.ஆக, இந்த நாட்டில் தீர்வைப் பெற்று தருவோம் எனக் கூறியவர்களால் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் உள்ளது.
அபிவிருத்தியை மக்கள் விருப்பப்படி திட்டமிட முயடியாமல் உள்ளது. இந்த நிலையில் தீர்வு திட்டம் குறித்து எப்படி நம்பிக்கையாக செயற்பட முடியும் என தமிழ் மக்கள் மனங்களில் எழும் கேள்வி நியாயமானதே.
இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி ஐ.நா அழுத்தங்களில் இருந்து காப்பாற்றி இந்த ஆண்டுக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இனி என்ன சொல்லப் போகிறது...?
ஏமாற்றமே மிஞ்சியதாய் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் எழும் கேள்விகளால் தடுமாறும் நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதே உண்மை.
சிவ.கிருஸ்ணா..-Tamilwin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள