வியாழன், 29 டிசம்பர், 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்-



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பிரமுகர் ஜோசப் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் வரும் ஜனவரி 9-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகம் உள்ளதால் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக தொண்டர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 27-ம் தேதியன்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
நீதிபதியின் கேள்வி:
இன்றைய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சுவாமி, "ஜெயலலிதா மாரடைப்பு காரணமாகவே இறந்தார். அவருக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இதற்கு முன்னர் இதே கோரிக்கையை முன்வைத்து டிராபிக் ராமசாமி, பிரவீனா ஆகியோர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், "தேவைப்பட்டால் இந்த வழக்கில் நோட்டீஸ் பெற்று அதற்கு விளக்கமளிக்க அரசு தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், "நீதிபதி என்பதை தாண்டியும் ஒரு சாதாரண குடிமகனாக தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் எனக்கு அக்கறை இருக்கிறது.
ஜெயலலிதா நலமுடன் இருப்பதாகவே அவர் உடல்நலன் விசாரித்துவந்த அனைவரும் கூறினார்கள். மத்திய அமைச்சர்கள்கூட இதையே சொன்னார்கள். ஆனால் அவர் திடீரென இறந்தார். அவரது மரணம் குறித்து மத்திய அரசு, எய்ம்ஸ் மருத்துவர்கள் மவுனம் காப்பது ஏன்? ஆளுநர்கூட ஜெயலலிதா உடல்நலனை விசாரித்து வந்தாரே.
மக்களின் அபிமானம் பெற்றவர்களின் மரணம் நிகழும்போது அதைச்சுற்றி சில சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. ஆனால், அத்தகைய சந்தேகத்தைப் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.
எனவே, ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
"ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகும்கூட அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க மாநில அரசு எதுவும் செய்யவில்லை. மர்மங்களை விலக்க அவரது உடலைத் தோண்டி எடுக்க வேண்டுமா?" என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை மேற்கோள் காட்டிய நீதிபதி, ஜெயலலிதாவின் மரணத்தில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்று மத்திய, மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் வினவினார்.
மனுவின் விவரம்:
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் அதிமுக தொண்டன். அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் கூறி வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்தியை பரப்பியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றே கூறின. இதை உறுதி செய்யும் விதமாக பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன.
இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார். இந்நிலையில் திடீரென டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்கிறார். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டுள்ளது, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பொதுவாக இறந்து அதிக நாட்களான உடலுக்குத் தான் இதுபோன்ற பதப்படுத்தும் பணிகள் செய்வது வழக்கம்.
டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்?. அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தாரா? எதற்காக இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளது.
ஏற்கனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப்பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் உள்ளதால், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதுவரை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. ஜனவரி 9- க்குள் இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
Tamil Hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள