சனி, 29 ஜனவரி, 2011

இலங்கைச் சரித்திர சூசனம்:-1



விஜயவமிசகாலம்.
க. அதிகாரம்.
இதன் முற்பகுதியைப் படிப்பதற்கு இங்கு செல்லவும்.
(விஜயராஜன் வந்தது முதல்; முத்த சிவ ராஜன் ஆண்டது பரியந்தம்)
 இச் சரித்திரத்தை செவ்வொழுக்காய் நடத்தி முடிக்கவேண்டி,இலங்கைக்கு
(wijayo ) விஜயராஜன் வந்தமையை, ஆதி சம்பவமாகக் கொண்டு சொல்லுவாம்.

இவ்வரசனுடைய பிறப்பை ஆராயுமிடத்து,தந்தை வழி,வங்க நாட்டு அரச
குலமென்றும், தாய் வழி,கலிங்க நாட்டு அரச பத்தினி வமிச மென்றும்
தெரிய வருகிறது.இவனுடைய மூதாயானவள்,இழிகுலத்தவனாகிய
சிங்கனேன்பவனை விய பிரசார மார்க்கமாய்க் கூடிச் சிங்கவாகு என்பவனைப்
பெற்றாள்.(Singhabahu ) சிங்கவாகு இவ் விஜய ராஜனைப் பெற்றான்.இவ்வுண்மையை
அறியாதார் உள்ளபடியே சிங்கத்தையணைந்து பெற்றாள் என்பார்.

*சிங்கவாகு என்பவன்,மகத தேயத்திலேயுள்ள லாலாநாட்டைக் கட்டிக்கொண்டு,
அதற்கு அரசனாகிச் சிங்க புரமென்னு  நகரத்திளிருந்தரசு செய்து வருகையில்
அவனுடைய மூத்த குமாரனாகிய விஜய ராஜன்,துன் மார்க்கனும் தன்போலிய
துஷ்டர் பலரைச் சேர்த்துக் கொண்டு சனங்களுக்குத் துன்பஞ  செய்பவனுமா
யிருந்தான்.அதனால் ஜனங்கள் சிங்கவாகுவிடத்திலே போய் முறையிட,
சிங்கவாகு,உடனே விஜயராஜனை எழுநூறு மெயக்காப்பாளருடன்,கடல் தாண்டி
யப்புறம்போய் பிழைக்கும்படி அனுப்பிவிட்டான்.விஜயராஜனும் அவ்வாறே
புறப்பட்டு இந்தியக்கரையிலேயே வேறோர் இடத்தையடைய முயன்றும் ,வாய்க்காமையால்,ஈற்றில்,இலங்கையை நாடிச் சென்று புத்தளத்திற்குச்
சமீபத்தேயுள்ள தம்ப பண்ணை என்னுமிடத்தை அடைந்தான்.



சிங்கள சரித்திரகாரர் தமது நாட்டுக்கு பெரிய தொரு விஷேசங் கற்பிக்கு நோக்கமாய்
இச் சம்பவ நிகழ்ச்சிக்கு காலவரையறை கூறவேண்டி ,கிறிஸ்து பிறக்க 543 வருஷங்களுக்கு முன், புத்தர் இறந்த அற்றை ஞான்றே விஜயன் இலங்கை சேர்ந்தான்
என்பர்.இதனை நம்புவதற்கு போந்த ஆதாரமில்லையென்பது பின்னால்
உணர்த்தப்படும்.

*சிங்கவாகு வமிசத்தாரால் ஆளப்பட்டமையின் இலங்கைக்குச் சிம்ஹளத்துவீபம்
என்னும் பெயர் நிலைத்ததென்பர் சிலர்.அது பொருந்தாது. சமஸ்கிருதத்திலே 
சிம்ஹளம் என்பதன்  பொருள்  பட்டையாதலின்  சிங்களத்தீவு என்பது  பட்டைத்தீவு எனப் பொருள்படும்.அந்நாட்டிற் கறுவாப்பட்டை விசேஷமாக உற்பத்தியாதலின் அப்பெயர்
பெற்றதென்க.  


இப்பால் விஜய ராஜன்,இலங்கையிலிருந்த பிரதானி ஒருவனுடைய 
புத்திரியாகிய குவேனி என்பவளை விவாகம் பண்ணிக்கொண்ட பின்னர் 
முழு நாட்டையும் தனதாணைக்குள்ளாக்க முயன்றான்.அதற்கு அவன் பத்தினியுமுடன் பட்டவளாகிச் சமயம் பாத்திருக்கும் நாளில், அவளுடைய 
செல்வாக்குக் காரணமாக, ஒரு சிரேஸ்ட பிரதானி, தன் கல்யாணத்திற்கு 
இவர்களை அழைக்கவும்,     இவர்கள் விருந்தினராக அங்கு போகவும் நேர்ந்த்தது.அங்கே குவேனி தன் பரிவாரருக்கு ஒரு சமிக்கைகாட்ட 
அவர்க்களுமுடனே ஐயமற்றிருந்த சிரேஷ்ட பிரதானி முதலியோர் மேல் 
விழுந்து, சர்வ சங்காரம் செய்தார்கள்.இவ்வாற்றால், இலங்கை முழுவதும் 
விஜயராஜனுடைய ஆணையின் கீழாயிற்று


ஆயினும்,என்னை! துரோகச்செயலுடைய குவேனி செய்த தீமையெல்லா 
மீற்றில் அவள் தலைக்கே ஆயின.விஜய ராஜன் தனது ராஜ மகத்துவத்துக்கு 
விருப்பமுடையவனாகித் தனக் கினை எனத்தகும்.ஒரு பாரியைத் தேட 
முயன்று, பாண்டியனிடத்துக்கு ஒரு தூதனை அனுப்பி அவன் மகளைத் 
தனக்கு, மணமுடித்துத் தரும்படி கேட்பித்தான். அதற்கு அவனுமியைந்து 
தன் மகளை அநேக தோழியருடனும்,பரிவாரங்களுடனும் அனுப்பினான்.
அவள் வந்து சேர்ந்தமாத்திரத்தில்,குவேனியையும்,அவள் வயிற்றில் 
தனக்குப் பிறந்த,இரு பிள்ளைகளையும், அப்புறப் படுத்தினான்,அவ்வாறு 
தள்ளி விடப்பட்ட குவேனி,தன் புத்திர புத்திரிகளோடு இயக்கருடைய 
இலங்கா புரியை நோக்கி அலைந்துலைந்து காடு மலை தாண்டிச் செல்கையில் 
அவளை அவள் தீச்செயலாலறிந்த ஒரு குடியானவன் கண்டு கொலை செய்தான்.மற்றப் பிள்ளைகளிருவரும்,அகப்படாது காட்டுக்  கோடினார்கள்.
அவர்களுடைய சந்ததியாரே தற்காலத்து இலங்கையிலுள்ள வேடர் எனக் கன்ன பரம்பரையாய்க் கூறுவர் சிலர்.
     
இங்கனமாக,விஜயராஜன் தான் வந்து இறங்கிய,நாட்டிலேயே தனக்குப் 
பின் வரும்,அரசருக்கு உபயோகமாகுமென்னுநோக்கத்தொடுபோலுங்
தமனா வென்னுமொரு பட்டணத்தையுண்டாக்கித் தனக்கு இராஜதானியாக 
வைத்துக்கொண்டான். ஆயினும் அவனுக்குப் பின்வந்த அரசர் பற்பல 
விடங்களிலும் வந்து குடி கொண்டமையால் அவன் எண்ணம் பயன் 
படவில்லை.


விஜயராஜன்,தானிறக்கச் சிறிது காலத்துக்கு முன்னே,தன் தம்பிக்கு ஓர் 
ஓலை அனுப்பி, அவனை வந்து அரசுரிமையைக் கையேற்கும்படி
கேட்டான்.அதற்கிடையில்,சிங்கவாகு இறந்துபோக அவ்வரசுரிமை,
அவன் இரண்டாம் குமரனும் விஜய ராஜனுக்குத் தம்பியுமாகிய 
சமித்துவுக்காயிற்று,சமித்துவ்ம், இலங்கையின் அரசாட்சியைத் 
தன் குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையால் 
தன் கடைசிக் குமாரனாகிய பந்துவாசனை அனுப்பினான்.


(Panduwasa ) பந்துவாசன் வரும்முன்னே விஜயராஜன் இறக்க.சிரேஷ்ட 
மந்திரியாகிய,(Upatissa ) உபத்தீசன் இராஜாவாகித்,தன்பெயரால் ஒரு 
நகரத்தை நவமாய்ச் சமைத்துத் தனக்கு இராஜதாணியாக்கிக் கொண்டான்.
அப்படி அவன் செய்தபோதிலும், ஒரு வருடங் கழித்துப் பந்துவாசன் 
வந்தவுடன்,சிறிதும் முரணாது இராஜாதிகாரத்தை அவனுக்கே கொடுத்தான்.


பந்துவாசனும் விஜய இராஜனைப்போல, இந்தியாவினின்றும் தனக்கொரு,
மனைவியைச் சம்பாதித்துக்கொள்ள வகை தேடினான்.அவ்வாறே,அவனுக்கு ஒரு பாரி கிடைத்தாலும், அவன் அவளைத் தன் பட்டத்து மனைவியாக்கினான்.
அவளோடு வந்த அவன் சகோதரர் ஆறு பேரும், ஆறு குறு நில ராஜதானிகள்
கட்டி,  அவற்றுள் சிலவற்றைச் சுயாதிபத்திய மாக்கிக்கொள்ளப் பார்த்தார்கள்.
அன்னகரங்கள்-இராமன் கட்டிய "இராமகுணம்",உருகுணன் கட்டிய 
"உருகுணை" நிக்காயணன் கட்டிய "திக்கமதுளை"உறுவல்லி கட்டிய  
"மாவிலிகமம்",அநுரதன் கட்டிய "அநுரதபுரம்",உச்சிதன் கட்டிய "உச்சிதபுரம்"
என்பனவாம். 


இப் பந்துவாசனாற்றான் அநுரதபுரத்திற்குச் சமீபமாயுள்ளதும்,சிங்கள 
சரித்திரத்தில் முதன்மையாகக் கூறப்பட்டுள்ளதுமான "அபையவாவி"
என்னுங் குளங் கட்டப்பட்டது.இவன் முப்பது வருஷ காலம்,யாவருங் 
களிகூரச் செங்கோல் செலுத்தி, பத்துப் புத்திரரையும் ஒரு புத்திரியையும் 
பெற்று நற் கீர்த்தியோடு இறக்க,அவன் மூத்த குமாரனாகிய,(ABHAYO )
அபயன் சிம்மாசனமேறினான்.


இவன் அரசுபுரிந்துவருகையில், அவன் சகோதரி புத்திரனாகிய,
(Pandukabhayo ) பந்துகாபயன் என்பவன் ஒரு தனவந்தனாகிய பார்ப்பானுடைய 
பொருளுதவி கொண்டு,கஜதுரகபதாதிகளடங்கிய ஒரு சேனையைச் 
சேர்த்து, மகா வலி கங்கா தீரத்தில் ஒரு கோட்டையுங் கட்டிக்கொண்டு 
கலகம் செய்ய ஆரம்பித்தான்.இதைக்கண்ட அபயராஜன் அச்சங்கொண்டு
இரகசியமாய், அவனுக்கு ஒரு பாகங் கொடுக்க ஒருப்பட்டான். அதனை 
அபயராஜன் சகோதரர்கள் அறிந்து.கோபாதிக்கராய் அவனை ராஜ பதத்தின் 
நின்றும் நீக்கிவிட்டுத், தம்முள்ளொருவனாகிய,தீசனை அரசனாக்கினர் 
.பின்னர், பந்துகாபயன் இயக்கரைத் துணைக்கொண்டு தன் மாதுலருள் 
எண்மரைக் கொலைசெய்து, உடனே தீச ராஜனையும் துரத்தினான்.
அங்கனமும் அரசு ஒருவழிப்படாமல் பந்துகாபயனுடைய கலகத்தில்
பதினேழுவருஷம் அலைவுகொண்டு நின்று ஈற்றில் அவன் கைப்பட்டது 
உடனே பந்துகாபயன் உபத்தீச புரியினின்று இராஜாசனத்தைப் பெயர்த்து 
அநுரதபுரிக்குக் கொணர்ந்து அங்கே ஸ்தாபித்தான். நாளடைவிலே 
அநுரத புரியைப் பொன்னகர் என அலங்காரம் செய்வித்து, அநேக 
குளங்களைக்கட்டி, சூழ்ந்த காடுகளையும் சிறந்த நாடுகள், கிராமங்கள்,
வயல்கள்,தோட்டங்களெனத் திருத்தினான்.


விஜயராஜன் இலங்கைக்கு வந்தகாலம்,வழக்கமாய்ச் சொல்லப்படும் 
காலத்திற்குப் பிந்திய காலமென நிதானிக்கப்படுகின்றது.பந்துகாபயன் 
இருபதாம் வயதில் விவாகம்பண்ணி முப்பத்தேளாம் வயதில்.தன்    மாதுலனை வென்று எழுபது வருடம் அரசு செய்தானெனச் சொல்லப்பட்டிருத்தலின் அவனிறந்தது, 107ம் வயசில் என்பது சித்தம் 
பின்னரும் அவன் குமாரன் 60வருஸம் ஆண்டானாம். இது எவ்வாறு கூடும் 
கூடாதாகலின் சிறு பிழை யுறுமாதலால் பௌத்த மதம் இலங்கைக்கு 
வந்ததற்கும், விஜயராஜன் குடிகொண்டதற்கும்,இடைப்பட்ட காலத்தை 
சற்றே குறுக்கல் அவசியகமாகும். ஆகவே,விஜயராஜன் இலங்கைக்கு 
வந்தது கி.பூ 477ம் வருஷத்தில் என்பது நிச்சயமாகும்.அது நிற்க,


பந்துகாபயன் இறக்க,அவன் சேஷ்ட புத்திரன் (Ganatissa ) கணத்தீசன்*
இராஜாவாகி 13 வருடமாண்டான்.அதன்பின்பு, அவன் தம்பி
(Muttasiva ) முத்தசிவராஜன், அரசனாகி, பத்துப் புத்திரரையும் இரு 
புத்திரிகளையும் பெற்று, 47வருடமாண்டான். இவனாற்றான்,
"மகாமேகம" என்னும் அலங்காரத்தோட்டம், அமைக்கப்பட்டது.
அத்தோட்டம் செப்பனிட்டு முடிந்தவுடன், அகால மழை பிரவாகமாய்ப் 
பொழிந்தது பற்றியே அதற்கு "மாகமேக" மென்னும் பெயர் கிடைத்தது.


விஜயன் ....................................அரசு செய்த காலம் *கி.பூ  543 -- 38 . வருடம்
உபத்தீசன் ......................................................................................505 --01
பந்துவாசன் ...................................................................................504 --30
அபயன் ...........................................................................................474 -- 20 .        
அரசியின்றி இருந்தகாலம்....................................................--------17 .
பந்துகாபயன் ................................................................................437 --70 .
கணத்தீசன் ....................................................................................367--13 .
முத்தசிவராஜன் .........................................................................354 --47 .


*கி.பூ கிறிஸ்து பிறப்பதற்கு முன்.
விஜயன் இறக்கும் தருவாயில் எழுதிய கடிதம் இந்தியாவிற்குச் சென்று,அவன்தம்பி சமித்து 
வராமல்,அவனது கடைசி மகன் பந்து வாசனை இலங்கைக்கு அனுப்பியதற்குள் நடந்த ஒரு
சிங்கள வரலாறு இங்கேயுள்ளது வாசித்துப் பாருங்கள்.அதற்குரிய படம்தான் மேலே 
காணப்படுவது.  படமும் கதையும்.Sunday observer நன்றிகள்.
தொடர்ந்து இரண்டாம் பகுதிக்குச் செல்ல. 
தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள