சனி, 26 அக்டோபர், 2019

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி

ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversary
இலங்கை அரசியல் வரலாற்றில் 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மறக்க முடியாத நாளாகும். ஏனெனில் அன்றைய தினம் தான் அரசியல் யாப்புக்கு முரணாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். சூழ்ச்சிகரமான முறையில் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் வரையான செயற்பாடுகள் இந்நாட்டு வரலாற்றில் கரும்புள்ளியாகப் பதிவாகியுள்ளது. அதனால் சட்ட ரீதியான பிரதமர் தலைமையிலான அரசாங்கம் போலி பிரதமர் தலைமையிலான கும்பலுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்தது.
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversary
இதேவேளை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதை வாக்கெடுப்பின் மூலம் உறுதிப்படுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார். என்றாலும் சூழ்ச்சிக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தைக் கருத்தில் கொள்ளாது பாராளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பு பாராளுமன்றம் கலைக்கப்படுவதைத் தவிர்த்தது.
அதேநேரம் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற குழு என்றும் சிவில் செயற்பாட்டாளர்களது வழக்கு தீர்ப்பின் படி போலி அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.
என்றாலும் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு இவ்விருண்ட கரும் புள்ளியை இந்நாட்டு வரலாற்றால் மறக்க முடியாது.
அதனால் அது தொடர்பில் திரும்பி பார்ப்பது பயன்மிக்கதாக இருக்கும்.
இவ்வாறான ஒழுக்க மீறல்களிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் விதம் குறித்து சிந்திக்க வேண்டும்
சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன்
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇலங்கையானது சிறந்த ஜனநாயகத்தை முன்னெடுக்கும் நாடொன்று அல்ல. இது மிகவும் பின்னடைந்த நாடாகும். கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வை மிகவும் கவலைக்குரிய கெட்ட நிகழ்வாகவே நான் நோக்குகின்றேன். இது நாட்டு ஜனாதிபதி இந்நாட்டு அரசியலமைப்பை மீறிய ஒரு சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னரும் இந்நாட்டு ஜனாதிபதிகள் அரசியலமைப்பை மீறியுள்ளனர். நீதிமன்றமும் அரசியலமைப்பை மீறியுள்ளன. பாராளுமன்றமும் அரசியலமைப்பை மீறி இருக்கின்றன. ஆனால் உலகில் நன்நடத்தை மிக்க நாடுகள் தம் அரசியலமைப்பை மிக உயர்வான  ஒன்றாகவே கருதி செயற்படுகின்றன. எனினும் அரசியலமைப்பு மீறப்படுவதை கூட்டு மனித படுகொலையை விடவும் பயங்கரமான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அரசியலமைப்பை மீறும் செயல் அன்றாடம் இடம்பெற்ற போதிலும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்காத சாதாரண விடயமாகவே உள்ளது. இந்நாட்டு அரசியல்வாதிகளும் சமூகத்தினரும் தான் இந்நாட்டை இந்நிலைக்கு உள்ளாக்கின்றனர். உதாரணமாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மிக முக்கிய விடயம் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாற முடியாது என்பதாகும். அவ்வாறு கட்சி மாறினால் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதாகும். எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதனை மீறினார்.  அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்திலும் அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்றன.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பிரதம நீதியரசர் வெளியேற்றப்பட்ட விதம் முற்றிலும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இவ்வாறான நெருக்கடிகள் உருவாவது தொடர்பிலும் ஜனநாயகம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் காணப்படும் குறைந்த அறிவும் புரிந்துணர்வின்மையுமே இவற்றுக்கு காரணமாக அமைகின்றன. இவ்வாறான நிலைமைக்கு நாடு உள்ளாக அவ்வாறான ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் மக்களும் காரணகர்த்தாக்களாக உள்ளனர். அதனால் இவ்வாறான நற்பண்புகளற்ற நிலைமைகள் நாட்டில் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும்.
சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பது வெளிப்பட்டது
பேராசியர் சந்ரகுப்த தேனுவர
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryநாம் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்கினோம். என்றாலும் அரசாங்கத்தின் தலைவரே அரசியலமைப்பை மீறி யாப்புக்கு எதிராக செயற்பட்டு பிரதமரை நீக்கினார். அவர் மக்களின் வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதமராவார். இதனை அரசியல் கலாசாரம் எதிர்கொள்ளும் சவாலாகவே நான் பார்க்கின்றேன். அதேநேரம் இது தொடர்பில் நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற தேவை மக்களிடம் எவ்வளவு தூரம் இருந்தது என்பதையும் எம்மால் காண முடிந்தது. இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் பலவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அவ்வாறு செயற்பட்டதன் விளைவாக நீதித்துறையின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அரசியலமைப்பின் பாதுகாப்பை உச்ச நீதிமன்றம் நிறைவேற்றியது. அத்தோடு சுயாதீன நீதித்துறையையும் மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விடயத்தைப் பாராளுமன்றம் மேற்கொண்டது.
இதன் பயனாக முதற்தடவையாக கடமையாற்ற தடை விதிக்கப்பட்ட பிரதமராகவும் பாராளுமன்ற குழுவாகவும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உள்ளாகினர். இது சட்டத்தை பிழையாகப் பாவிப்பதற்கு எதிராக மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.  சட்டத்திற்காகப் போராடிய தரப்பினர் தமது பலத்தை உரசிப்பார்க்க இதனூடாக வாய்ப்பு கிடைத்தது. அது வெற்றிக்கும் இட்டுச்சென்றது. இந்நிகழ்வுகளை ஒரு வருடம் முடிந்துள்ள இந்நிலையில் திரும்பிப் பார்க்கும் போது அவ்வாறான துரதிஷ்டகர நிகழ்வுகளும் மோசமான அனுபவங்களும் நாட்டில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் நினைவுக்கு வருவதைப் போன்று அதற்கு எதிராக மக்கள் எழுச்சி பெற்றமை மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான சூழ்ச்சிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஓக்டோபர் 26ஆம் திகதி இடம் பெற்ற நிகழ்வோடு நாடு சீரழிந்தது. அந்த 52நாட்களில் நாடே சீரழிவு நிலைமையை அடைந்தது. என்றாலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்போடு மீண்டும் ஜனநாயகம் வெற்றி பெற்றது. அதன் ஊடாக தோற்றம் பெற்ற ஜனநாயக அரசியல் விவாதத்தை உரிய முறையில் பாவிப்பதற்கு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்ட தரப்பினரால் வெற்றி பெற முடியாமல் போனது. எனினும் இலங்கையில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. அச்சூழ்ச்சியினால் ஏற்பட்ட பின்னடைவு நிலையோடு ஜனநாயகத்திலும் பின்னடைவைக் காண முடிந்தது. அதனை மீண்டும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவதானம் தற்போதைய ஆளும் தரப்பினரிடம் குறைவடைந்துள்ளது. ஜனநாயகத்தில் பின்னடைவைப் போன்று அதிகாரிகள் வாதமும் மேலெழுந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்போடு நீதித்துறை அரசியலமைப்பை பாதுகாத்ததாக எமக்கு விளங்கியது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறலாம். எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடுகளைப் பாவித்து பல்வேறு தரப்பினரும் இவ்வாறான சூழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் ஈடுபட முடியும். அதனால் எதிர்வரும் தேர்தலில் எவர் வென்றாலும் தோற்றாலும் அரசியலமைப்பிலுள்ள குறைபாடுகள் காரணமாக மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படலாம்.
ஆகவே இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாதிருக்கக்கூடிய வகையில் யாப்பில் சீரமைப்பை ஆட்சிக்கு வருபவர் முன்னெடுப்பாராயின் அதுவே நல்லது.
சுதந்திரத்திற்கு பின் ஜனநாயகத்தில் இருண்ட 52 நாட்கள்
புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஎமது நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் பேரழிவிலிருந்து நாட்டைப் பாதுகாத்த நிகழ்வுகளாக ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னரான நிகழ்வுகளை நான் நோக்குகின்றேன். என்றாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நாம், நாடு என்ற வகையில் இன்னும் முகம் கொடுக்கின்றோம். அந்த 52நாட்களிலும் நாடு சென்ற இருண்ட பாதை எவ்வாறானதென்று குறிப்பிடுவதாயின் அது விலைமதிக்க முடியாத நஷ்டமாகும். இந்த சூழ்ச்சியின் பின்னர் அரச கட்டமைப்பு செயலிழந்தது. அதன் ஊடாக நாடு சீரழிந்தது. பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக அரசியல் முறைமை முழுமையாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற பயங்கர அரசியமைப்பு சூழச்சியாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
1963இல் இவ்வாறான அரச விரோத சூழ்ச்சியொன்று முன்னெடுக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அதனை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டதால் அந்த சூழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதன் விளைவாக எவ்வித பின் விளைவுகளும் ஏற்படவில்லை. ஆனால் இந்த சூழ்ச்சியின் ஊடாக ஜனநாயகத்தில் பெரும் கறைபடிந்தது. அத்தோடு நாட்டின் பொருளாதாரமும் பின்னடைவுக்கு உள்ளானது. சுதந்திரத்தின் பின்னரான ஜனநாயகம் ஏழு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும் இந்த 52நாட்களையும் நான் இருண்ட நாட்களாகவே நோக்குகின்றேன். நீதிமன்றம் அரசியலமைப்பை பாதுகாத்தது. அதன் மூலம் சூழ்ச்சியை தோற்கடிக்க முடிந்தது. என்றாலும் அதன் பின்னர் இதிலிருந்து மீட்சி பெற முடியாதுள்ளது. இவ்வாறான ஒன்றை ஜனநாயக நாடொன்றில் மேற்கொண்டால் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அது இங்கு இடம்பெறவில்லை. அது ஒரு குறைபாடாகும். 
நீதித்துறை தொடர்பான நம்பிக்கை உறுதியானது
ஊடகவியலாளர் கபில எம். கமகே
ஒக்டோபர் 26; வரலாற்று கரும்புள்ளி-October 26-despicable power grab Anniversaryஇந்த சம்பவத்தை அசிங்கமான அரசியல் காரணமாக ஏற்பட்டதாகவே நான் பார்க்கின்றேன். பொதுவாக அரசாங்கம் ஒன்றின் அதிகாரம் சட்டப்படி ஜனநாயக முறையில் தான் மாற்றப்படும். ஆனால் இங்கு வேறுவிதமாகவே ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. அரசியல்வாதிகளுக்கு சட்டம் குறித்த தெளிவு கிடையாது. அந்த தெளிவின்மை காரணமாக அவர்கள் இவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றனர். என்றாலும் நீதிமன்றம் அவர்களுக்கு சட்டம் இது தான் என தெளிவுபடுத்தியது. நீதித்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாதீனத்தன்மையின் பிரதிபலனாவே நான் அத்தீர்ப்பை பார்க்கின்றேன். நீதித்துறை சுயாதீனத்தன்மையை நாம் பாராட்ட வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அதனை மிகவும் சிறந்த தீர்மானமாக நோக்க முடியும். அத்தீர்ப்பின் ஊடாக நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது ஜனநாயக ரீதியிலான தீர்ப்பாகும். அதனால் இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாதிருக்க முழு சமூகமும் பொறுப்பாக இருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன்.
நன்றி :முயலகன்   தினகரன் 

வெள்ளி, 25 அக்டோபர், 2019

கோட்டாபய விஞ்ஞாபனம் வௌியீடு: இலங்கையில் ஒற்றையாட்சியே; விரைவில் பொதுத்தேர்தல்

கோட்டாபய விஞ்ஞாபனம் வௌியீடு: இலங்கையில் ஒற்றையாட்சியே; விரைவில் பொதுத்தேர்தல்

Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மக்களிடம் கருத்துக்கணிப்பை மேற்கொள்ள ஜனாதிபதி தேர்தலை சந்தர்ப்பமாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபன வௌியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ‘கோட்டாபய நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய 10 விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கல், கலப்பு மற்றும் அணிசேரா வெளிநாட்டுக்கொள்கை, தூய்மையான அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசியல் அமைப்பு திருத்தம், சிறந்த பிரஜை , வளமான மனித வளம், மக்களை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரம், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம், பௌதீக வள அபிவிருத்தி, நிலையான சுற்றாடல் முகாமைத்துவம், ஒழுக்கமுள்ள மற்றும் சிறந்த குணமுள்ள சமூகத்தை உருவாக்கல் என்பன அந்த 10 கொள்கைகள் ஆகும்.
தேசிய பொருளாதார சபை மற்றும் மூலோபாய முயற்சியாண்மை முகாமைத்துவ முகவர் பிரிவு இரத்து செய்யப்பட்டு ஜனாதிபதியின் கீழ் உள்ள தேசிய கொள்கை மற்றும் கொள்கை வகுப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரச பிரிவுகளுக்கான வாகனங்கள் மற்றும் அலுவலகங்களை கொள்வனவு செய்தல் மற்றும் வாடகைக்கு வாங்குதல் என்பன இடைநிறுத்தப்படும் எனும் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கி கொள்ளை உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து, அந்த சொத்துக்களை மீண்டும் அரசுடைமையாக்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவை சட்டப்பூர்வமாக ஸ்தாபிப்பதாகவும் அரச நிறுவனங்களை ஒருபோதும் தனியார் மயப்படுத்துவது இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி , மக்கள் வங்கி , தேசிய சேமிப்பு வங்கி , துறைமுகம் , விமான நிலையம் , ஸ்ரீலங்கன் விமான சேவை, மின்சார சபை , இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் என்பவற்றை முழுமையாக தொழில்முறை முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்வதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பூரண அதிகாரமிக்க சுயாதீன ஆனைக்குழு ஒன்றின் மூலம் விசாரணை மேற்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்காக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, கடந்த 5 வருடங்களில் கையொப்பமிடப்பட்டுள்ள இரு தரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அல்லது லெப்டொப் கொள்வனவு செய்வதற்கு இலகு கொடுப்பனவு முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரச துறை ஊழியர்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ள ஓய்வூதியத்தை மீண்டும் பெற்றுக்கொடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைச்சூத்திரம் உடினடியாக இரத்து செய்யப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மறுசீரமைப்பதற்கு சீன அரசாங்கத்துடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஒற்றையாட்சியின் கீழிருக்கும் நாடு, அதனை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கொண்டுள்ளோம். எமது நாட்டை பயங்கரவாதம், பாதாளக்குழுவினர், கொள்ளை, கப்பம் பெறுபவர்கள், வௌிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவதற்கு தேவையான அரச பாதுகாப்பினை நாம் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
நாட்டிற்கு பாதுகாப்பினை வழங்கும் அதேபோன்று எதிர்காலத்தில் பாதுகாப்பை வழங்கவுள்ள முப்படையினர் , பொலிஸார், சிவில் அமைப்பினரை நாம் பாதுகாப்போம்.
ஒரு நாட்டிற்குள் ஒரு சட்டம் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதமில்லாது, சட்டத்தை அனைவருக்கும் பொதுவான வகையில் நடைமுறைப்படுத்த நாம் வழிவகை செய்வோம்.
நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களை மீள கட்டியெழுப்புவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
என தமது வாக்குறுதிகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்துள்ளார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

குற்றமிழைத்தோரை விடுதலை செய்வது எவ்வகையில் நியாயம்?

குற்றமிழைத்தோரை விடுதலை செய்வது எவ்வகையில் நியாயம்?


ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழியானது நீதிக்குப்  புறம்பான விடயம். இது பற்றி இலங்கையின் பிரபல சட்டவல்லுநர்கள் கூறுகின்ற கருத்துகள்...
 ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள்  யுத்த வெற்றியாளர்களா? குற்றமிழைக்கும்  இராணுவத்தினரைக் காப்பாற்ற ஒருவர் உள்ளார் என்பது நீதிக்கும் புறம்பான ஒரு விடயம் 
தண்டனை பெற்றுள்ள எந்தவொரு  குற்றவாளியையும் விடுதலை செய்யும்  அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு உள்ள ஒரே வழி மேன்முறையிடும் நடைமுறை மட்டுமேயாகும். அதேநேரம் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க விரும்பினால் அதற்காக உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்  என்கிறார் ஜயம்பதி விக்கிரமரத்ன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, அவரது முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரத்தில் கடந்த வாரம் நடைபெற்ற போது சிறையில் உள்ள யுத்த வெற்றியாளர்களை விடுதலை செய்வதாகக் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த யுத்த வெற்றியாளர்கள் யார் என்று தெரியவந்த போது அது சில சிக்கல்களை தோற்றுவித்துள்ளமை தெரிய வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். கோட்டாபயவின் கைகளில் அளவுக்கு மீறிய அதிகாரம் இருந்தது. அத்துடன் மொத்த இராணுவமும் அவரது சொற்படியே இயங்கியது. கோட்டாபயவின் உத்தரவின் பேரில் இராணுவ அதிகாரிகள் இயங்கினர். பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகள் சிலவற்றில் குற்றவாளியாகக் காணப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யப் போவதாகத்தான் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு முயற்சியும் நிறைவேற்று அதிகாரத்தின் மீறல்களையே புலப்படுத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகம் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தனது முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவரது பேச்சின் போது வழங்கிய வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள 'யுத்த ஹீரோக்கள்' யார் என்று பார்ப்போம்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்தவர்கள், ஊடகவியலாளர் கீத் நோயரை கடத்திச் சென்று சித்திரவதைக்குட்படுத்தியவர்கள், கேலிச்சித்திர வரைகலைஞர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்தவர்களாக கருதப்படுபவர்கள் ஆகியவர்களே அவர்களாவர்.
இவ்வாறான செயல்களை மேற்கொண்டவர்கள் தொடர்பான வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அவர்களில் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் மற்றும் சிலருக்கு எதிராக தேவையான சாட்சியங்களை சி.ஐ.டியினர் சேகரித்துள்ள நிலையில், தொடர்ந்தும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்படி வாக்குறுதி தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட அரசியலமைப்பு சட்டத்தரணியான ஜயம்பதி விக்கிரமரட்ன இதுபற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
'தண்டனை பெற்றுள்ள எந்தவொரு குற்றவாளியையும் விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கு உள்ள ஒரே வழி மேன்முறையிடும் நடைமுறை மட்டுமேயாகும். அதேநேரம் தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க விரும்பினால் அதற்காக உள்ள நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அதேநேரம் அவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படாத நிலையில் அவர்களுக்கு பிணை வழங்குமாறு உத்தரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் கோட்டாபய ராஜபக்ஷ அவரது வாக்குறுதியை எப்படி நிறைவேற்றப் போகிறார்?
2015க்கு முன்னர் செய்ததைப் போல பொலிஸாரை அழுத்தத்துக்கு உட்படுத்தல், சட்ட மாஅதிபர் திணைக்களத்தை பிணை வழங்குவதற்கு இணங்கிப் போகும் வகையில் அழுத்தத்துக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் மட்டுமே அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்' இவ்வாறு ஜயம்பதி விக்கிரமரட்ன கூறுகிறார்.
2015க்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது அவரது சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ஒரு தசாப்தத்துக்கு மேலாக ஜெனிபர் வீரசிங்க உட்பட மற்றும் பல தாய்மார் தமது பிள்ளைகளைத் தேடி வருகின்றனர். ஜெனிபரின் மகனான திலான் ஜமால்தீன் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் கடற்படையினர் சிலரால் கப்பம் கோரி கடத்தப்பட்டனர். அது 2008/2009 காலப் பகுதியில் நடந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சிரேஷ்ட கடற்படையினர் சிலர் தொடர்புபட்டிருந்ததாகத் தெரியவந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் கடற்படைத் தளபதியான வசந்த கரண்ணாகொட. அண்மையில் அவர் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரண்ணாகொட மீது கொலை மற்றும் கொலை செய்ய சதித் தீட்டியமை தொடர்பாக விரைவில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்ட மாஅதிபர் சி. ஐ. டியினருக்கு அறிவித்திருந்த நிலையில், அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் பற்றிய தகவல் அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த வசந்த கரண்ணாகொடவுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் மறைத்து விட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
திலான் ஜமால்தீன் உள்ளிட்ட 10 இளைஞர்களின் கடத்தல், சட்டவிரோத தடுத்து வைப்பு மற்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பற்றிய விவகாரத்தில் சந்தேக நபர்களும், சாட்சியம் அளித்தவர்களும் கடற்படையினர் என்பதால் இந்த வழக்கு அபூர்வமானதாக அமைகிறது.
இந்த வழக்கில் பல திருப்பங்கள் உள்ளன. சந்தேக நபர்கள் பிணையில் வெளியே உள்ளனர். உயர்மட்ட கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் சாட்சிகளின் பதவிகள் குறைக்கப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகள் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். வழக்கில் சாட்சியமளித்த ஒரு கடற்படைவீரர் அவரது சிரேஷ்ட அதிகாரியான தற்போதைய பாதுகாப்பு ஆளணி பிரதானி ரவீந்தர விஜேகுணரட்னவினால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து தலைமறைவான நிலையில் இருக்கிறார்.
மேற்படி இளைஞர்களைக் கடத்திய கடற்படைக் கும்பலின் தலைவனை பொலிஸாரிடம் சிக்காமல் ரவீந்திர விஜேகுணரட்ன பாதுகாத்ததாக மேற்படி கடற்படை வீரர் சாட்சியமளித்திருந்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் யுத்த ஹீரோக்களை விடுதலை செய்யும் வாக்குறுதியானது ஜெனிபர் வீரசிங்கவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவரது கணவரே ஒரு இராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகனை கடத்திச் சென்றவர்கள் 'யுத்த ஹீரோக்கள்' என்று குறிப்பிடப்படுவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“கோட்டாபய ராஜபக்ஷவின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது அவர் நீதிமன்றங்கள் தொடர்பாக எந்தப் பயமும் இல்லாதவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. மறுவார்த்தைகளில் கூறுவதானால் இராணுவம் எவரையும் கடத்தலாம், கொல்லலாம் மற்றும் எதனையும் செய்யலாம். அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற ஒருவர் இருக்கிறார்” என்பதை இது காட்டுகிறது என்று ஜயம்பதி விக்கிரமரட்ன மேலும் கூறுகிறார்.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரின் சார்பாக தோன்றிய சட்டத்தரணி சேனக பெரேரா கூறும் கருத்தையும் கேட்டுப் பார்ப்போம்.
'நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ஒருவர் நீதித்துறையின் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள ஒருவர் இவ்வாறு நீதித்துறையின் செயற்பாடுகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறுவது மிகவும் ஆபத்தானது. அவர் வெற்றி பெற்றால் நாட்டை எப்படி ஆளப் போகிறார் என்பதற்கான அறிகுறியே அவரது மேற்படி அறிக்கை என்கிறார் சேனக பெரேரா.
ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இராணுவம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து 27 பேரை படுகொலை செய்தது. அதே முறை மீண்டும் தொடரப் போகின்றது என்பதைத்தான் கோட்டாபயவின் மேற்படி அறிக்கை கூறுகிறது என்று சேனக பெரேரா குறிப்பிடுகிறார்.
சந்தேக நபர் ஒருவர் மீது தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டு அடிப்படையானதா அல்லது அடிப்படையற்றதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று சிரேஷ்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பில் வாதாடும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
அதேநேரம், நபர் ஒருவர் மீது தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டு அடிப்படையானதா அல்லது அடிப்படையற்றதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று சிரேஷ்ட குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
'அதேநேரம் சந்தேக நபர்களாக உள்ள படையினரின் எந்த குற்றங்களை கோட்டாபய அடிப்படையற்றவை என்று கூறுகிறார் என்பது சரியாகத் தெரியவில்லை. அந்தக் குற்றங்கள் அடிப்படையற்றவையா என்பதை நீதிமன்றங்கள்தான் கூற வேண்டும். அவை அடிப்படையற்றவை என்று கருதினால் அதனை சவாலுக்குட்படுத்தி நீதமன்ற நடைமுறையை பின்பற்றி மேன்முறையீடு செய்யலாம். ஆனால் அந்த விசாரணைகளில் ஜனாதிபதியோ அல்லது அரசியல்வாதிகளோ இடையீடு செய்ய முடியாது' என்று பெயர் சொல்ல விரும்பாத சட்டத்தரணியொருவர் கூறுகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனவர் பிரகீத் எக்னெலிகொட. இவர் ஒரு கார்ட்டூன் வரைகலைஞர். 2010 ஜனவரியில் இவர் கடத்திச் செல்லப்பட்டார். 'அவர் எங்கே இருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்' என்று அதிகாரிகளிடம் கடந்த 9 ஆண்டுகளாகக் கேட்டு வருபவர் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட.
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தேர்தலில் கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானால் தனது கணவரின் காணமற் போனமை தொடர்பான வழக்கு ரத்து செய்யப்படலாம் என்று சந்தியா எக்னெலிகொட கூறுகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷ அவரது முதலாவது பிரசாரக் கூட்டத்தில் வெளியிட்ட மேற்படி கருத்து சிக்கலாகியுள்ள நிலையில், கோட்டாபாய கூறிய கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு சார்பாகப் பேசுகிறார் கேஹெலிய ரம்புக்வெல்ல.
“விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்... குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யுங்கள்... தண்டனையை விதியுங்கள்... அவர்ளைப் பற்றி நீதிமன்றங்களே தீர்மானிக்கட்டும்” என்றுதான் கோட்டாபாய கூறினார். ஊடகங்கள் அவரது பேச்சை திரிபுபடுத்தி விட்டதாக கெஹேலிய ரம்புக்வெல்ல கூறுகிறார்.
மேற்படி குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் உறுதிப்படுத்துமா என்று கேட்கப்பட்ட போது, மேலே கூறப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் யுத்த காலத்தில் இடம்பெற்றவை. உள்நாட்டு யுத்தமொன்று இடம்பெறும் போது புனித யுத்தம் இடம்பெறாது. 2010 இல் யுத்தம் முடிவடைந்து பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அது போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றதா? என்று பதில் கேள்வி எழுப்புகிறார் கேஹெலிய ரம்புக்வெல்ல.
ஆனால் பிரகீத் எக்னெலிகொட காணாமற் போனது 2010 ஜனவரி 24ம் திகதியாகும். இது யுத்தம் முடிவுற்ற 7 மாதங்களின் பின்னர் இடம்பெற்ற சம்பவமாகும்.

தமிழுக்கு முன்னுரிமை வழங்கியதாக சீறும் இனவாதக் குழுக்கள்!



இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் யாழ்ப்பாணம், பலாலி பகுதியில் கடந்த 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.உள்ளக விமான சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதற் கட்டமாகச் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையிலுள்ள ஏனைய பகுதிகளில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விமான நிலைய பெயர்ப் பலகைகள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
'யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்' என்ற பெயர்ப் பலகை உள்ளிட்ட விமான நிலையத்திலுள்ள அனைத்து பெயர்ப் பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன், இரண்டாவதாகத் தமிழ்மொழிக்கும், மூன்றாவதாக ஆங்கில மொழிக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கமான விடயமாகும்.
இந்த நிலையில், சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்காது தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கியமை பிழையானது என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்ட தரப்புக்கு சமூக வலைத்தள பதிவாளர்கள் சிலர் பதிலடி வழங்கியுள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் மொழி தொடர்பான சரத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டமைக்கான நியாயத்தை அவர்கள் தெளிவூட்டியுள்ளனர்.
'சிங்களமும், தமிழும் இலங்கை முழுவதிலும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்ந்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம் நிருவாக மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், பொதுப் பதிவேடுகளைப் பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடாத்தப்படுவதற்காகவும் சிங்கள மொழி பயன்படுத்தப்படுதலும் வேண்டும்.
வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ்மொழி அவ்வாறு பயன்படுத்தப்படுதல் வேண்டும். மொத்தச் சனத்தொகைக்குச் சிங்கள அல்லது தமிழ் மொழிவாரியான சிறுபான்மைச் சனத்தொகை என்ன விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளதோ அதனைக் கருத்திற் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும், அல்லது அத்தகைய இடப்பரப்பு அமைந்திருக்கக் கூடியதான மாகாணத்தில் நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படுதல் மொழி தவிர்ந்த அத்தகைய இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்தப்படலாம் என ஜனாதிபதி பணிக்கலாம்' என அரசியலமைப்பின் மொழி சார் சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த விடயத்தை அரசியலமைப்பின் சிங்களப் பிரதியை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டு, யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்புக்கு அமைய சிங்கள மொழி அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என இலங்கை அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணக் கூடியதாக உள்ளது.
அரசியலமைப்பில் மூன்று மொழிகள் மாத்திரமே கூறப்பட்டுள்ள பின்னணியில், இலங்கை தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பகுதியில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தில் சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் சில வலைத்தள பதிவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக மன்னார், காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கி பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
அரசியலமைப்பில் குறிப்பிடப்படாத சீன மற்றும் அரபு மொழிகள் நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பின்னணியிலேயே தற்போது சில தரப்பினர் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (BBC)

ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி | Virakesari.lk

ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி | Virakesari.lk: ஹிட்லராகவோ இடியமீனாகவோ செயற்பட போவதில்லை: ஊடகவியலாளர்களிடம் சஜித் உறுதி

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இந்நாட்டின் இப்போதைய அதிசயம்.



எத்தனை ஒப்பந்தம், எவ்வளவு உறுதிமொழி, - மொத்தமாய்
அத்தனையும் செத்தனவே அடுக்கடுக்காய் இரவினிலே
எல்லா  ஜனாதிபதியும்  ஏற்றிய தீபத்தை- எதிர்வரும்
இந்த ஜனாதிபதியும் ஏற்றத்தான் போகிறார்.

மாண்டவர் மீண்டதில்லை நான்குமறை தீர்ப்பு -இதை
மறக்காமல் முன்னெடுப்பதில்தான்  தமிழர்கள் முனைப்பு
ஆண்டவன் கொடுத்ததுதான் அவரவரின் இருப்பு -அதை
மாற்ற நினைப்பது மானிடத்தின் எதிர்பார்ப்பு

இராமன் ஆண்டாலும்  இராவணன் ஆண்டாலும் -என்றும்
 நிமிராது   எந்த நாயினதும்   சுருண்ட வால்
இனவெறி மதவெறி இலங்கையின் மொத்தச் சொத்து-இதை
எவராவது துறக்க  நினைத்தாலே இருக்குது ஆபத்து.

ஆற்றைக் கடக்கும்வரை அண்ணன்  தம்பி உறவு -எந்தத்
தேர்தல் முடியும்வரைக்கூடக்  காத்திருக்காது   இந்தத்துறவு
சிறுபாண்மை மக்களுக்கு இல்லை ஒரு முடிவு-இன்னும்
பெரும்பான்மை இனத்துக்கும்  இல்லையொரு  வடிவு

மக்களைப் பற்றிச் சிந்திக்கும் மனம்  வரும்வரை-யாருக்கும்
அக்கறை கிடையாது, அழியும் இலங்கையைப்பற்றி.
கிடப்பது கிடக்கட்டும்   கிழவியையும் என்னையும்  உள்ளேவிடு
இதுதானே இந்நாட்டின் இப்போதைய அதிசயம்.


இராஜ சோழனில் நடித்த இலங்கை கலைஞர்





இலங்கை தமிழ்த் திரைப்படத்துறைக்கும் நாடகத்துறைக்கும் பாரிய பங்களிப்புகளை செய்தவர் மறைந்த கலைஞர் ஸ்ரீசங்கர்.   ஸ்ரீசங்கர் வெளிநாட்டுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யும் ஒரு பிரபலமான நிறுவனமொன்றில் தேயிலை பரிசோதகராக பணியாற்றி வந்தார். அப்போதே  ஆயிரம் ரூபாய்  சம்பளத்தை பெற்றவர்.இவர் தனக்கு கிடைத்த சிறந்த தொழிலையையும் தன்னிடம் இருந்த நிதியையும் கலைத்துறைக்காக இழந்தவர். இவ்வாறு  தமிழ் நாடகத்துறைக்கு பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த இவர்,  குத்துவிளக்கு, மஞ்சள் குங்குமம் உட்பட தமிழ்நாட்டில் தயாரான சிவாஜிகணேசனின் ‘ராஜராஜ சோழனில்’ ஒரு காட்சியிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்தவர் இவர். 
 இவரது நினைவு நாள் நிகழ்வை  தொடர்ந்து 39ஆண்டுகளாக இடைவிடாது தொடர்ந்து  நடத்தி வருபவர், இவர் நடித்த நாடகங்களில் இவருடன் இணைந்து நடித்த இவரது நண்பர் வீ. ஷண்முகராஜா. ஷண்முகராஜா இவருக்கு உருவச்சிலையும் நிறுவியிருக்கிறார்.  ஸ்ரீசங்கரின் நினைவு தின நிகழ்வை கொழும்பில் நடத்தவேண்டும் என்ற ஆவலுடன் எந்தவித குறைவும் இல்லாமல் நடத்திவரும் கலைஞரான ஷண்முகராஜா  நாளை  19ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30மணியளவில் புறக்கோடடை பழைய நகர மண்டபத்தில்  ஸ்ரீங்கரின் 39வது நினைவு அஞ்சலி நிகழ்வை  நடத்தவிருக்கிறார். ஸ்ரீசங்கர் என்ற இந்த கலைஞரின் இயற்பெயர் வைத்தியலிங்கம். இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். இவரது நாடகங்களான கொள்ளைக்காரன்’, ‘ஒரு மனிதன் இரு உலகம்’ போன்ற நாடகங்கள்  பருத்தித்துறையிலும் யாழ்ப்பாணத்திலும் பலமுறை மேடையேற்றப்பட்டவையாகும்.  இவர்,  இலங்கையில் எப்படியும் ஒரு தமிழ்ப்படத்தைத்  தயாரிக்கவேண்டும் என்று ஆவலுடன் துடித்துக்கொண்டு இருந்தார்.
கிங்ஸ்லி எஸ்.செல்லையாவும், ஸ்ரீசங்கரும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். இவர்களுடன் ஏ. சுந்தரஐயா, பதூர்தீன், பரஞ்சோதி ஆகியோரும் ஒன்று சேர்ந்து சிறந்த முறையில் தமிழ் படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக ‘கீதாலயம் மூவீஸ்’ என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
அந்த காலத்தில் நாடகத் துறையிலும் தமிழ் சினிமாத் துறையிலும்  பணம்  படைத்தவர்களாக இருந்தவர்கள் இருவர்கள்.   இவர்களில் ஒருவர் ஸ்ரீசங்கர். மற்றவர் உதயகுமார்.  உதயகுமார் வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பண்டங்களை இறக்குமதி செய்வதை தொழிலாகக் கொண்டவர்.  இந்த இருவரும் கலைத்தாகம் நிரம்பிய நல்ல கலைஞர்கள். மஞ்சள் குங்குமம் ஸ்ரீசங்கரின் கடும் முயற்சியால் 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத் தயாரிப்புக்கு ஸ்ரீசங்கருக்கு ஆரம்பம் முதல் இறுதிவரை பெருந்துணையாக நின்றவர் கிங்ஸ்லி எஸ். செல்லையா என்ற புகைப்படக் கலைஞராவார். கிங்ஸ்லி எஸ். செல்லையா கொழும்பு கிங்ஸ்லி தியேட்டரில் ஒப்பரேட்டராக பணிபுரிந்தவர்.  
 அகில இலங்கை ரீதியாக நாடக மேடைகளில் பெரும் வெற்றி பெற்ற “மஞ்சள் குங்குமம்” நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது.  
 மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தை இயக்கும் பொறுப்பு கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான நடிகர் எம். வி. பாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் எம். வி. பாலன் சிங்கள சினிமாவில் தனித்துவமான சிறந்த ஹாஸ்ய நடிகர். டாக்சி டிரைவர், நிர்மலா ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.  
 தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ‘இயக்குனர்’ பதவியின் பெறுமதியையும் தனது அதிர்ஷ்டத்தையும் உணராமல் அதனை ஹாஸ்யமாகவும் விளையாட்டாகவும் குரங்குக் கை பூமாலையாக அவர் எடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது. அடிக்கடி கதையை மாற்றியமைத்தார். படத்தின் ஹாஸ்ய கதாபாத்திரத்தை தானே ஏற்று நடித்த இயக்குனர் எம். வீ. பாலன் படத்தின் உச்சக் கட்டத்தில் தனது கதாபாத்திரத்தை மாற்றியமைக்கவும் செய்தார். தானே படத்தில் ‘ஹீரோ’ ஆகியதாலும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்தது.  
 நடிகர் ஸ்ரீசங்கர் படத்தை முடிக்க முடியாமல் திணறிய போது, கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் நண்பரான கடுகண்ணாவையில் வசித்த எம். பதுர்தீன், கொழும்பு அம்பாள் கபே உரிமையாளர் ஜீ. நாராயணசாமி, சுந்தரம் ஐயர் போன்றோர் கிங்ஸ்லி எஸ். செல்லையாவின் கடும் முயற்சியினால், இணைத் தயாரிப்பாளர்களானார்கள். நீண்ட நாள் தயாரிப்புக்குப் பின்னர் அளவுக்கதிகமான செலவுகளுடன் காதுக்கினிய எட்டு பாடல்களைக் கொண்ட நல்லதொரு திரைப்படமாக ஆனால் குற்றுயிராகத் திரைக்கு வந்தது இந்தத் திரைப்படம்.  
 இக்காலக் கட்டத்தில் ஸ்ரீசங்கர் இந்தியாவில் தயாரான “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசனோடு ஈழத்துப் புலவராக நடித்தார்.    ஸ்ரீசங்கர் நம்மை விட்டுப் பிரிந்து பல வருடங்களாகி விட்டன.  
 கலைஞர் ஸ்ரீசங்கரின் 38வது நினைவு தின நிகழ்வை  கடந்தாண்டு   தவறாது நடத்தியவர் ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவர் வீ.சண்முகராஜா. அன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.  ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கமும் இங்கு கலைஞர் ஸ்ரீசங்கரைப் பற்றி உரையாற்றினார்.  
நன்றி: தினகரன் 

ஜனாதிபதித் தேர்தலில்(2019) வாக்களிக்க வாக்குரிமை உள்ளதா ?

 ஜனாதிபதித் தேர்தலில்(2019) வாக்களிக்க வாக்குரிமை உள்ளதா ?



உங்கள் வாக்குரிமையைப் பரிசோதித்துப் பார்க்க இங்கே செல்லுங்கள்
உங்கள் அடையாள அட்டை இலக்கமும்,தேர்தல் மாவட்டமும் தெரிந்தால்
போதும்.

பரீட்சித்துப் பார்த்துப் பயன் பெறுங்கள் நீங்களும் 2019 ஜனாதிபதியைத் தெரிவு செய்ய தகமையுள்ளவரா? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.