கோட்டாபய விஞ்ஞாபனம் வௌியீடு: இலங்கையில் ஒற்றையாட்சியே; விரைவில் பொதுத்தேர்தல்
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மக்களிடம் கருத்துக்கணிப்பை மேற்கொள்ள ஜனாதிபதி தேர்தலை சந்தர்ப்பமாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபன வௌியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.
கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று முற்பகல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், ‘கோட்டாபய நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய 10 விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கல், கலப்பு மற்றும் அணிசேரா வெளிநாட்டுக்கொள்கை, தூய்மையான அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசியல் அமைப்பு திருத்தம், சிறந்த பிரஜை , வளமான மனித வளம், மக்களை கேந்திரமாகக் கொண்ட பொருளாதாரம், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம், பௌதீக வள அபிவிருத்தி, நிலையான சுற்றாடல் முகாமைத்துவம், ஒழுக்கமுள்ள மற்றும் சிறந்த குணமுள்ள சமூகத்தை உருவாக்கல் என்பன அந்த 10 கொள்கைகள் ஆகும்.
தேசிய பொருளாதார சபை மற்றும் மூலோபாய முயற்சியாண்மை முகாமைத்துவ முகவர் பிரிவு இரத்து செய்யப்பட்டு ஜனாதிபதியின் கீழ் உள்ள தேசிய கொள்கை மற்றும் கொள்கை வகுப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அரச பிரிவுகளுக்கான வாகனங்கள் மற்றும் அலுவலகங்களை கொள்வனவு செய்தல் மற்றும் வாடகைக்கு வாங்குதல் என்பன இடைநிறுத்தப்படும் எனும் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கி கொள்ளை உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து, அந்த சொத்துக்களை மீண்டும் அரசுடைமையாக்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவை சட்டப்பூர்வமாக ஸ்தாபிப்பதாகவும் அரச நிறுவனங்களை ஒருபோதும் தனியார் மயப்படுத்துவது இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி , மக்கள் வங்கி , தேசிய சேமிப்பு வங்கி , துறைமுகம் , விமான நிலையம் , ஸ்ரீலங்கன் விமான சேவை, மின்சார சபை , இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களம் என்பவற்றை முழுமையாக தொழில்முறை முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்வதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பூரண அதிகாரமிக்க சுயாதீன ஆனைக்குழு ஒன்றின் மூலம் விசாரணை மேற்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்காக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, கடந்த 5 வருடங்களில் கையொப்பமிடப்பட்டுள்ள இரு தரப்பு மற்றும் பல்தரப்பு உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அல்லது லெப்டொப் கொள்வனவு செய்வதற்கு இலகு கொடுப்பனவு முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில அரச துறை ஊழியர்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ள ஓய்வூதியத்தை மீண்டும் பெற்றுக்கொடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைச்சூத்திரம் உடினடியாக இரத்து செய்யப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையை மறுசீரமைப்பதற்கு சீன அரசாங்கத்துடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஒற்றையாட்சியின் கீழிருக்கும் நாடு, அதனை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம்.நாட்டின் தேசிய பாதுகாப்பை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகக் கொண்டுள்ளோம். எமது நாட்டை பயங்கரவாதம், பாதாளக்குழுவினர், கொள்ளை, கப்பம் பெறுபவர்கள், வௌிநாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவதற்கு தேவையான அரச பாதுகாப்பினை நாம் மீண்டும் உறுதிப்படுத்துவோம்.நாட்டிற்கு பாதுகாப்பினை வழங்கும் அதேபோன்று எதிர்காலத்தில் பாதுகாப்பை வழங்கவுள்ள முப்படையினர் , பொலிஸார், சிவில் அமைப்பினரை நாம் பாதுகாப்போம்.ஒரு நாட்டிற்குள் ஒரு சட்டம் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பேதமில்லாது, சட்டத்தை அனைவருக்கும் பொதுவான வகையில் நடைமுறைப்படுத்த நாம் வழிவகை செய்வோம்.நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நிறுவனங்களை மீள கட்டியெழுப்புவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.
என தமது வாக்குறுதிகளை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள