திங்கள், 4 நவம்பர், 2019

வடக்கிலுள்ள எந்த கட்சியுடனும் ​இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை

வடக்கிலுள்ள எந்த கட்சியுடனும் ​இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் தரப்பினருடனும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ எத்தகைய உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லையென தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுதொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ வேறு அமைப்புகளுடனோ இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ எந்த ஒரு உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை.
நாட்டு மக்களுக்கான ஒரே உடன்படிக்கையாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார்.
அந்த விஞ்ஞாபனத்திற்கு இணங்கி நவீன மற்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொள்ளுமாறு வடக்கிலும் கிழக்கிலுமுள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைக்கின்றோம்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான பொது உடன்படிக்கையாகவோ இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. அந்த ஆரோக்கியமான வேலைத் திட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல நாம் அழைப்பு விடுக்கின்றோம். எந்தவொரு கட்சியையும் விட எமது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு காத்திரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான கொள்கைப் பிரகடனமாகும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதே வேளை, கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், 2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது.
கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் வெள்ளை வான் வருவது கிடையாது. ஆனால் மக்களை தேடி அவசர அம்பியூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? இல்லையா என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக் கட்சிக்கு வாக்களித்தால் வெள்ளை வான் மட்டுமே வரும் எனத் தெரிவித்த பிரதமர்,
2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள