திங்கள், 4 நவம்பர், 2019

கோட்டா ஆட்சியமைத்ததும் தமிழ் தலைமைகள் பேசும்

கோட்டா ஆட்சியமைத்ததும் தமிழ் தலைமைகள் பேசும்

சஜித் பிரேமதாஸவின் தோல்வி தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது. ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு அவரிடம் சென்று அவர்கள் பேசுவார்கள் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.  
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (01) ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.  
இதில் உரையாற்றும்போதே பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,  
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள்  சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோதாபய ராஜபக்ஷவுக்குத்தான் கிடைக்கும். அதே போல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலவரம் ஆகும்.  
பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் பிரேமதாசவுக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார். ஜே.வி. பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 இலட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க போவதும் இல்லை.  
70 வருடங்களாக சமயோசிதமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள். ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்று போய் விட்டது.  
அப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார்.அதுவும் கோதாவுக்கு வாய்ப்பான விடயமே ஆகும். 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன் என்றார். 
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள