எந்த இனத்துக்கும் அநீதி இழைப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
Saturday, October 26, 2019 - 10:10am
எமது நாட்டின் இனங்களுக்கிடையில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பாதுகாப்பு என்பது சகலருக்கும் ஒருவிதமானதாகத் தான் அமையும் என தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்பு என்ற எனது கருத்து ஒரு சமுகத்தை மட்டும் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் ஒரு திட்டமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜா-எல நகரில் நேற்று முன்தினம் இரவு (24) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,
இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் அரசியலமைப்பு ரீதியில் ஒரு விதமாகத்தான் உள்வாங்கப்படுகிறார்கள். எவருக்கும் தனியான சிறப்பு உரிமை எதுவும் கிடையாது. நான் அனைவரையும் இலங்கை பிரஜையாகவே பார்க்கின்றேன். இன ரீதியாகவோ மத ரீதியாகவோ யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க விரும்பவில்லை.
எங்களுக்குத் தேவை சுவீட்சமான ஒரு நாட்டை உருவாக்குவதே. உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இரண்டாம் தரமாக வாழ்வதற்கு நாம் விரும்பவில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் வறுமை கோட்டிலுள்ள மக்களை எட்டவில்லை. அவர்கள் தொடர்ந்தும் வறுமை கோட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பொருளாதார ஆய்வு முடிவுகளின்படி எமது நாட்டில் வளமான வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அவசியமான வருமானத்தை நாட்டு மக்கள் தொகையில் 45சதவீதமானோர் பெற்றுக்கொள்வதில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் வரி அதிகரிப்பாலும் பாரிய சுமையை மக்கள் சுமந்தி கொண்டிருக்கும் நிலையில் நான் பதவியேற்றதும் மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் அதனை சாதாரண மக்களும் உணரக் கூடிய நிலையை உருவாக்குவேன். எமது மக்கள் இன்னொருவர் கைகளில் தங்கி நிற்கும் நிலை இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமமான சகல உரிமைகளும் கிட்டவேண்டும்.
எதிர்காலத்தில் நாட்டின் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது நாட்டு மக்களை முன்னிறுத்தி சிந்தித்து வரிச் சுமையிலிருந்து விடுபடும் ஒரு நிலையை ஏற்படுத்துவேன். எம்மிடம் நிதி இல்லையென்று எவரும் கூறமுடியாது உண்மையிலேயே போதுமான அளவிற்கு நிதி வசதியுண்டு. ஆனால் ஜனாதிபதி என்ற கதிரைக்கு சென்ற உடன் அரச திறைசேரியை குடும்பத்தின் உடமையாக்கிக் கொள்ளும் கலாசாரமொன்றே உருவாகியிருந்தது. நாட்டின் அரச சொத்துக்கள் அனைத்தும் பொது மக்களுக்கே சொந்தமானது. அரசியல் வாதிகளுக்குச் சொந்தமானதல்ல. எனவே நாம் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவோ மாட்டோம். நாம் நாட்டை ஆட்சி செய்வோர்களல்ல. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாட்டுக்கான சேவையாளர் மட்டுமே. மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு சேவை செய்வதே என் மீதான கடப்பாடாகும்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் வாதிகளுக்கு புதிய வாகனங்கள், வீடுகள் வழங்கப்படும். ஆனால் நான் ஜனாதிபதியானதன் பின்னர் எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து எனது பாவனைக்காக குண்டு துளைக்காத வாகனங்களை பெற்றுக் கொள்ள மாட்டேன். அரசியல் வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பாராளுமன்றத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன். இந்த பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதென்பது உண்மையிலேயே மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கும் சேவையாற்றி நாட்டுக்கும் சேவையாற்றுவதேயாகும். இதனை உணர்ந்த எவரும் என்னோடு இணைந்து செயற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி:எம்.ஏ.எம். நிலாம்,தினகரன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள